ஏரி காத்த ராமரின் கதை


பெருமாளுக்கும் நீர் நிலைகளுக்கும் ஆதிகாலம் தொட்டே தொடர்பு உண்டு. பாற்கடலில் பள்ளி கொண்டவன் அந்த ஆதிபிரான். இவனே லட்சுமணனுடன் இணைந்து மதுராந்தகம் ஏரி உடையாமல் இரவெல்லாம் காத்து நின்றான் என்கிறது தல புராணம். இறைவன் தன் சக்தியால் ஒரு கண நேரத்தில் ஏரி உடையாமல் காத்துவிட முடியும். ஆனால் ராமர் மனித உருக் கொண்டு பிறந்ததால் வில்லேந்தியே மதுராந்தகம் ஏரியைக் காத்ததாகக் கூறப்படுகிறது.


மதுராந்தகம் ஏரி முற்காலத்தில் அதனைச் சுற்றி உள்ள சிறிய மற்றும் பெரிய கிராமங்களுக்கு பாசனத்திற்கு மட்டுமல்லாமல் குடிநீராகவும் பயன்பட்டு வந்தது. மழை நீரைத் தேக்கிவைக்கும் இந்த ஏரியில், அதிகப்படியான நீரின் காரணமாக உடைப்பு ஏற்படுவது வழக்கம்.


ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் மாவட்ட ஆட்சியராக இருந்த லயோனல் பிளேஸ், ஏரிக்கரையைப் பலப்படுத்தப் பல முயற்சிகள் எடுத்தார். ஆனால் பலனேதும் ஏற்படவில்லை. இங்குள்ள இந்த ராமர் கோயிலுக்கு வந்த அவரிடம், அப்போது இருந்த அர்ச்சகர் கோயிலைச் செப்பனிட்டு, தாயாருக்கு தனிச் சன்னிதி அமைத்துத் திருப்பணி செய்து தரக் கோரிக்கை விடுத்தார். பதிலுக்கு மாவட்ட ஆட்சியரும் பெருமாளிடம் ஓர் கோரிக்கை வைத்தார். தெய்வ பலத்தால் வரும் ஆண்டு ஏரி உடைப்பெடுக்காமல் இருந்தால், திருப்பணியை ஏற்று நடத்துவதாக ராமருக்கு கோரிக்கை வைத்தாராம் மாவட்ட ஆட்சியர்.


பருவ மழை வந்தது. வழக்கம்போல் ஏரி நிரம்பித் தளும்பியது. கவலையுடன் கரையில் நின்று பார்த்துக்கொண்டிருந்த ஆங்கிலேயே மாவட்ட ஆட்சியரின் கண்களுக்கு இரு இளைஞர்கள் தென்பட்டனர். அவர்கள் கைகளில் நாண் பூட்டிய வில்லில் அம்பு பொருத்தப்பட்ட நிலையில் இருந்ததாம். மின்னல் ஒளியில் இதனைக் கண்ட மாவட்ட ஆட்சியர், அம்பிலிருந்தும் மின்னல் ஒளி தோன்றியதைக் கண்டாராம். அதற்குப் பின்னர் ஏரிக்கரை உடையவில்லை என்பது வரலாறு.


தான் கூறியபடியே தாயாருக்குத் தனிச் சன்னிதி கட்டிக் கொடுத்தாராம் மாவட்ட ஆட்சியர். இச்சம்பவம் குறித்த கல்வெட்டு தாயார் சன்னிதியில் உள்ளது. இந்நிகழ்வுக்குப் பின்னர் ஏரி காத்த ராமர் எனப் புகழப்பட்டார் மூலவர் ராமர்.

இரண்டு தேர் ஒரே பிரம்மோற்சவத்தில் இரண்டு நாள் தேர்த்திருவிழா நடைபெறுவது இத்தலத்தின் சிறப்புப் பெருமை. ஆனி பிரம்மோற்சவத்தில், ராமர், புஷ்பக விமானம் போல் அமைக்கப்பட்ட தேரிலும், மறுநாள் கருணாகரப் பெருமாள் மற்றோரு தேரிலும் பவனி வருவது கண்கொள்ளாக் காட்சி.
தரிசனம் தரும் பலன் தம்பதியர் ஒற்றுமையை எடுத்துக்காட்டுவது போல ராமரும் சீதையும் கை கோத்து நின்று நற்பலன்களைத் தருவதாக ஐதீகம். கல்விச் செல்வத்தை வாரி வழங்கும் வகையில் ராமானுஜர் திருவுருவக் காட்சி. இங்குள்ள கண்ணன் பிள்ளைப் பேறு வழங்கும் வள்ளல் என்பது ஐதீகம்.


சீதையுடன் கை கோத்த நிலையில் காட்சி தருகிறார் மூலவர் ராமர். விபண்டக மகரிஷிக்குக் காட்சி தரும்போது இந்த அன்புக் கோலத்தைக் காட்டி அருளினாராம் ராமர். இதனையொட்டி விபண்டக மகரிஷி கை கூப்பிய நிலையில் இங்கு காட்சி அளிக்கிறார். தனிச் சன்னிதியில் ஜனகரின் மகள் ஜனகவல்லித் தாயார் திருக்கோலம் கொண்டுள்ளார். வெண்ணிற உடையில் உடையவர் ராமானுஜருக்குப் பெரும்பாலும் திருத்தலங்களில் காவி உடை அணிவிக்கப்பட்டிருக்கும். ஆனால் அதிசயமாக இத்தலத்தில் வெண்ணிற உடையில் காட்சியளிக்கிறார் உடையவர். குடும்ப வாழ்கையில் இருக்கும்பொழுதுதான் இத்திருத்தலத்தில் தீட்சை பெற்றார் என்பதால் இத்திருக்கோலம்.



Leave a Comment