கங்கையைப்போன்ற புண்ணிய நதியாம் பம்பையில் நீராடி....


தீராத நோய் நீர்க்கும் கரிமலையைக் கடந்து பெரியானை வட்டம் வருகிறது. இது யானைகள் அதிகமாக வசித்த பகுதி என்பதால் இப்பெயர் ஏற்பட்டது. இங்கே பம்பா நதி சிறு ஓடைபோல பாய்கிறது. இங்கிருந்தபடியே மகர ஜோதியை தரிசிக்கலாம் என்பதும் விசேஷத்தகவல். இங்கிருந்து ஒரு கி.மீ. தூரத்தில் "சிறியானை வட்டம்' என்ற பகுதி வருகிறது. இங்கு பம்பை நதி பரந்து ஓடுவதைக் காணலாம். இங்கிருந்து சிறிது தூரம் பயணம் செய்து பம்பா நதியை அடையலாம்.


பம்பா நதி:
எருமேலியிலிருந்து பெரும் பாதை வழியாக நடந்துவரும் பக்தர்களும் சாலக்காயம் வழியாக வரும் பக்தர்களும் பம்பா நதிக்கரையில் ஒன்று கூடுகின்றனர். கங்கையைப்போன்ற புண்ணிய நதி பம்பா. இந்த நதிக்கரையில் தான் ராமர் தனது தந்தை தசரதருக்கு "பிதுர் தர்ப்பணம்' செய்ததாக கூறுவர்.
இதனடிப்படையில் ஒரு சில பக்தர்கள் இந்த நதியின் முதல் பாலம் அருகே உள்ள திரிவேணி சங்கமத்தில் நீராடி, பிதுர் தர்ப்பணம் செய்கின்றனர். மற்ற பக்தர்கள் எல்லாம் இங்கு நீராடி நீண்டதூரம் நடந்து வந்த களைப்பைப் போக்கிக் கொள்கின்றனர்.
தர்ம சாஸ்தா, மணிகண்டனாக பூவுலகில் அவதாரம் செய்த இடம் பம்பையாற்றின் கரை. அதனால் பக்தர்கள் இங்கு ஓர் இரவு தங்கி, ஆற்றில் பம்பாவிளக்கு ஏற்றி சுவாமியை வழிபடுகின்றனர். பின்னர், இருமுடியின் பின் முடியிலுள்ள சமையல் சாமான்களைக் கொண்டு சமைக்கின்றனர். அந்த உணவை ஐயப்பனுக்கு நைவேத்யம் செய்து, அதை பக்தர்களுக்கு விருந்தாக (சத்ய) கொடுத்து உபசரிக்கின்றனர். பக்தனை உபசரிப்பது பகவானையே (ஐயப்பன்) உபசரிப்பது போல என கருதுகின்றனர். ஐயப்பனே பக்தர்களின் வடிவில் சாப்பிடுவதாக ஐதீகம். இந்த பூஜையை "பம்பா சக்தி' என்றும், "சக்தி பூஜை' என்றும் சொல்வர். இங்கே மூட்டப்படும் அடுப்பின் சாம்பலை, பம்பா பஸ்மம் என்று பக்தர்கள் வீட்டுக்கு எடுத்து வருகிறார்கள்.

பம்பா கணபதி :
பின்னர் பம்பையாற்றின் கரையிலுள்ள பம்பா கணபதி, ராமர், அனுமன், சக்தி கோயில்களில் வழிபட்டு, பந்தள மன்னர் பரம்பரையில் வந்தவர்களுக்கு காணிக்கை செலுத்தி, அவர்களிடம் விபூதி வாங்கி நெற்றியில் அணிந்து நீலிமலை ஏற துவங்கலாம். பெண்கள் இப்பகுதியைத் தாண்டி மலையில் ஏற அனுமதிக்கப்படமாட்டார்கள்.



Leave a Comment