பம்பை நதியின் தூய்மையை காப்போம்


சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு, மாலை அணிந்து வரும் பக்தர்கள் அனைவருக்கும், கோயில் தேவசம்போர்டு சில கோரிக்கைகளை வைத்துள்ளது.

தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரரு சார்பில் வைக்கப்பட்டுள்ள கோரிக்கை என்னவென்றால், சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு மாலை அணிந்து வரும் பக்தர்கள், பம்பை நதியில் குளிக்கும் போது, தங்களது ஆடைகளை நதியிலேயே விட்டுவிடும் பழக்கத்தை மேற்கொள்கின்றனர். ஆனால், இது பாரம்பரியமாக வந்த வழக்கம் அல்ல என்றும், சமீப காலத்தில் உண்டான தவறான பழக்கம் என்றும் தெரிவித்துள்ளார்.

பம்பை நதியில் தங்களது ஆடைகளையோ அல்லது மாலைகளையோ கழற்றி வீசும் பழக்கம் சுகாதார சீர்கேட்டையே உருவாக்குவதாகவும், இது பம்பை நதியின் சூழலைக்கும் குலைக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

எனவே, பம்பை நதியை தூய்மையாக வைத்திருப்பது என்ற நோக்கத்தை நிறைவேற்ற, பக்தர்கள் இனி இதுபோன்ற செயலில் ஈடுபட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன் என வலியுறுத்தியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், சபரிமலைக்கு வரும் பக்தர்கள் கொண்டு வரும் குடிநீர் கேன் மற்றும் பிளாஸ்டிக் பைகளை வனப்பகுதிகளில் வீசுவதால், வனப்பகுதி மோசமடைவதாக சுற்றுச்சூழல் பாதுகாப்பாளர்களிடம் இருந்து எச்சரிக்கை வந்துள்ளது. எனவே பிளாஸ்டிக் கொண்டு வருவதையும், பயன்படுத்துவதையும் பக்தர்கள் தவிர்க்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.



Leave a Comment