ஐயப்பனுக்கு அறுபடை வீடுகள்!


 

பொதுவாகச் சபரிமலை ஆலயம் எப்போதெல்லாம் பக்தர்கள் தரிசனத்துக்காகத் திறந்திருக்கும்? விரதமிருந்து போனால் மட்டும்தான் தரிசிக்க முடியுமா?’’ ‘‘அப்படியில்லை. 

ஒவ்வொரு மலையாள மாதமும் ஒன்று முதல் ஐந்து தேதி வரை ஆலயம் திறந்திருக்கும். ஆவணி மாதம் திருவோண நட்சத்திர நாளிலிருந்து 41 நாட்கள்; மற்றும் கார்த்திகை முதல் தேதியிலிருந்து 41 நாட்கள் ஆலயம் பக்தர்களின் வருகையை எதிர்நோக்கித் திறந்திருக்கும். அதேபோல மார்கழி மாதம் 25ம் தேதி முதல் மகர விளக்கு தரிசனத்தை ஒட்டி, பன்னிரண்டு நாட்கள் திறந்திருக்கும். தவிர, பங்குனி உத்திரம், வைகாசி ஹஸ்தம் நட்சத்திர நாட்களிலும் திறந்திருக்கும்.

‘முருகனுக்கும், விநாயகருக்கும் அறுபடை வீடுகள் இருப்பதுபோல, நம் ஸ்வாமி ஐயப்பனுக்கு உள்ளனவாமே அப்படியா?’’ ‘‘ஆமாம், முதலாவது, குளத்துப்புழா.
இந்தத் தலம் தமிழ்நாட்டில், நெல்லை மாவட்டம், செங்கோட்டையிலிருந்து திருவனந்தபுரம் செல்லும் வழியில் 45 கி.மீ. தொலைவில் உள்ளது. இங்கே சிறிய கோயிலில் ஐயப்பன் பாலகனாகக் காட்சியளித்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இந்தக் கோயிலின் உட்பிராகாரத்தில் தீர்த்த கிணறும், மகாவிஷ்ணு சந்நதியும் அமைந்துள்ளன. கூடவே இசக்கியம்மனும் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறார். நாகதேவதை, சிவன், விநாயகர், சந்நதிகள் வெளிப்பிராகாரத்தில் அமைக்கப்பட்டுள்ளன. கோயிலுக்கு அருகில் ஓடும் குளத்துப்புழா நதியும் தெய்வீகமானது. குளத்துப்புழாவில் சித்திரை விஷு திருவிழா மிகவும் பிரபலமானது.  குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிகள் இங்கு வந்து நீராடி பாலகன் மணிகண்டனிடம் வேண்டி நின்றால், குழந்தை பாக்யம் கிடைக்கிறது. பிறந்த குழந்தைக்கு 9ம் மாதத்தில் இங்கு வந்து முதலில் உணவு ஊட்டி வழிபாடு நடத்தினால் குழந்தை நோய், நொடியின்றி விளங்குகிறது.

இரண்டாவதாக, அச்சன் கோயில். மேலே சொன்ன செங்கோட்டையிலிருந்து 30 கி.மீ. தொலைவில், கேரள மாநிலத்தில், கொல்லம் மாவட்டம், அச்சன் கோயில் வனத்தில் இந்தக் கோயில் உள்ளது. அச்சன் கோயிலின் அரசனாக பூர்ண-புஷ்கலா தேவியுடன் அரசாட்சி செய்கிறார் ஐயப்பன். ஐயப்பனின் வலப்புறம் அரசனின் ஐயப்பனை நாடி வரும் பக்தர்களுக்கு தம் பங்காகவும் அருள்பாலிக்க தந்தையார் சிவன் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார்.

மூன்றாவது எருமேலி.  கேரளா மாநிலத்திலுள்ள மணிமாலா நதியிலிருந்து பிரியும் கிளை நதிக்கரையில் எருமேலி சாஸ்தா கோயில் அமைந்துள்ளது. மூலஸ்தானத்தில் ஐயப்பன் சாஸ்தாவாக சாந்த சொரூபனாக நின்ற நிலையில் கையில் வில், அம்பு ஏந்தி தரிசனம் தருகிறார். கோயில் வெளிப்பிராகாரத்தில் ‘அம்மே நாராயணா’ சந்நதி உள்ளது. இங்கு பிற தெய்வங்கள் கிடையாது. சற்று தொலைவில் பேட்டை துள்ளல் வசந்தவிழா பக்தி பூர்வமாக நடைபெறுகிறது.

  

நான்காவது ஆரியங்காவு. இத்தலம் செங்கோட்டையிலிருந்து 18 கி.மீ. தொலைவில் கேரளா எல்லையில் கொல்லம் மாவட்டத்தில் உள்ளது. வனப்பகுதியில், தரையிலிருந்து 300 அடி ஆழத்தில் இக்கோயில் அமைந்துள்ளது. கோயில், மதுரை பாண்டிய மன்னனால் கட்டப்பட்டது. பூஜை வழிபாடுகள் தமிழக கோயில் கலாசாரத்தைப் பின்பற்றியே நடைபெறுகின்றன. ஆரியங்காவு ஐயப்பன் தமிழ்ப்பெண் புஷ்கலாதேவியை இங்கு திருமணம் முடித்தார் என்பதற்கு புராண ஆதாரம் உண்டு.  ஆரியங்காவு கோயிலில் நடைபெறும் முக்கிய விழாக்கள், மண்டல பூஜையும், நவராத்திரி திருவிழாவும். ஐயப்பன் சந்நதி அருகே மாம்பழத்துறை பகவதி புஷ்கலாதேவி சந்நதியுள்ளது. இந்த சந்நதி, திருக்கல்யாண உற்சவம் மற்றும் நவராத்திரி உற்சவத்திற்கு மட்டுமே திறக்கப்படுகிறது. திருமணமாகாதவர்கள் இங்கு வந்து திருக்கல்யாணம் பார்த்து மஞ்சள் கயிறு பிரசாதம் பெற்றுச் சென்ற சிறிது காலத்திற்குள்ளேயே அவர்களுக்குத் திருமணம் நடைபெறுகிறது.

ஐந்தாவது, பந்தனம். திருவனந்தபுரம், எம்.ஜி.சாலையில் உள்ள, ஐயப்பன் மணிகண்டனாக வாழ்ந்த பழைய அரண்மனை எதிரே வாழியக் கோயிலில் உள்ள கருவறையில் ஐயப்பன் விக்ரக வடிவில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார். எதிரே பம்பை நதி பாய்கிறது. இங்கேதான் ஐயப்பன் பந்தள மன்னனால் குழந்தையாக கண்டெடுக்கப்பட்டதாக புராணம் கூறுகிறது. பங்குனி உத்திரம் நாள் ஐயப்பனின் அவதார தினவிழாவாக விமரிசையாக கொண்டாடப்படுகிறது. சித்திரை விஷு, மண்டல பூஜை, மகர ஜோதி விழாவும் கொண்டாடப்படுகின்றன. பந்தளம் கோயிலே,  கேரளா ஐயப்பன் கோயிலின் மூலம் ஆகும்.

  



ஆறாவதாக சபரிமலை. இங்கு ஐயப்பன் கோயில் அடர்ந்த வனப்பகுதியில் உள்ளது. பம்பையிலிருந்து நடைப்பயணமாக நான்கு கி.மீ. தொலைவு. எரிமேலியிலிருந்து பெருவழி நடைபாதையில் 42 கி.மீ. தொலைவு. சபரிமலை வனத்தில் 18 படி நடை வைத்து கலைநயத்துடன் கோயில் கட்டப்பட்டுள்ளது. சபரிமலையில் கட்டப்பட்டுள்ள கோயில் அமைப்பு மிக வித்தியாசமானது. 18 படி ஏறி கோயில் வாயிலின் உள்ளே சென்றால் எதிரே தங்கக் கொடிமரம் காட்சியளிக்கிறது. சோபன மண்டபத்தை அடுத்து தங்கக் கூரை வேய்ந்த கருவறையில் ஐயப்பன் கொலுவிருக்கிறார். ஐயப்பன் கோயில் பிராகாரத்தைச்சுற்றி நாகர், விநாயகர், காவல் தெய்வங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளனர். பதினெட்டாம்படி அருகே கருப்பசாமியும், கருத்தசாமியும் காவல் தெய்வங்களாக அருள்பாலிக்கின்றனர். ஐயப்பனுக்கு முக்கியமாக நெய் அபிஷேகம் செய்யப்படுகிறது. சந்தனபிஷேகம், புஷ்பாபிஷேகம், அஷ்டாபிஷேகம் ஆகியவை பிற அபிஷேகங்களாகும்.


உதய ஸ்தமன பூஜை, உஷத் பூஜை, உச்சி பூஜை, அத்தாழ பூஜை ஆகியவை முக்கியமான பூஜைகளாகும், 18ம் படி பூஜையும் விமரிசையாக நடத்தப்படுகிறது. இங்கு நடைபெறும் 10ம் நாள் ஆராட்டு உற்சவம் மிக முக்கியமானது. இந்த நாட்களில் உற்சவ பலி தரிசனம், ஸ்ரீபூதபலி பூஜை, சுவாமி பள்ளிவேட்டை பம்பை நதியில் ஆராட்டு ஆகியவை பிரதான சம்பிரதாயங்களாக நடத்தப்படுகின்றன.’’



Leave a Comment