திருப்பதி ஏழுமலையான் கோயில் உலகளவில் பிரசித்தி பெற்றது. இந்தியாவின் முதல் பணக்கார கடவுளான ஏழுமலையான் கோயிலுக்கு ஆண்டுதோறும் கோடிக்கணக்கான பக்தர்கள் வருகை தருவது வழக்கம். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடந்தாண்டு 2 கோடியே 73 லட்சத்து 19 ஆயிரத்து 897 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளனர். அவர்கள் உண்டியலில் 995.89 கோடியை காணிக்கையாக செலுத்தியுள்ளனர். மேலும், 10 கோடியே 66 லட்சத்து 72 ஆயிரத்து 730 லட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதேபோல், 66 கோடியே 6 லட்சத்து 90 ஆயிரத்து 594 பக்தர்களுக்கு அன்னப்பிரசாதம் வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர, கடந்தாண்டில் 1 கோடியே 22 லட்சத்து 37 ஆயிரத்து 368 பக்தர்கள் மொட்டை அடித்து தலைமுடி காணிக்கை செலுத்தியுள்ளனர். இதன் விற்பனை மூலம் ரூ.6.39 கோடி வருவாய் கிடைத்துள்ளது.

திருப்பதி கோவிலில் ஸ்ரீதேவி, பூதேவி மற்றும் ஏழுமலையானுக்கிடையே ப்ரணய கலசோற்சவம் எனும் ஊடல் உற்சவம் விமரிசையாக நடைபெற்றது. திருமலையில் ஆண்டு தோறும் மார்கழி மாதம் ஏழுமலையானுக்கும், ஸ்ரீதேவி - பூதேவி தாயார் களுக்கும் இடையே ஏற்படும் ஊடலை தேவஸ்தானம் உற்சவமாக நடத்தி வருகிறது. ஏழுமலையான் எப்போதும் தன்னை நாடி வரும் அடியார்களிடமும், ஆழ்வார்களிடமும் அதிக அன்பு பாராட்டுவதாகவும், தங்களிடம் அந்த அளவுக்கு அன்பு பாராட்டுவதில்லை என்றும் தாயார்கள் ஏழுமலையானின் மீது கோபம் கொள்வதாக ஐதீகம். ஏழுமலையான் சமாதானப்படுத்தி அவர்களின் கோபத்தை குறைப்பது இந்த உற்சவத்தின் தாத்பரியமாகும். அதன்படி, திருமலையில் உள்ள ஸ்ரீவாரி திருக்குளம் அருகில் ஊடல் உற்சவம் விமரிசையாக நடைபெற்றது. இதற்காக உற்சவர் மலையப்ப சுவாமி, ஸ்ரீதேவி- பூதேவி நாச்சியார்கள் இருவரும் அலங்கரிக்கப்பட்டு, தனித் தனியே தங்கப்பல்லக்குகளில் எதிரெதிராக எழுந்தருளினர். அதன் பின்னர் அர்ச்சகர்கள், தேவஸ்தான அதிகாரிகள் இரு பிரிவாக பிரிந்து நாச்சியார்கள் பக்கம் சிலரும், மலையப்ப சுவாமி அருகில் சிலருமாக நின்று கொண்டனர். மலையப்பசுவாமி மீது கோபம் கொண்ட தாயார்களின் அணியைச் சேர்ந்த அர்ச்சகர்கள் நிந்தஸ்துதியில் நாலாயிர திவ்யபிரபந்த பாசுரங்களைப் பாடினார். பின்னர் பூப்பந்துகளை ஏழுமலையான் அணியினர் அவர்கள் மேல் எறிந்தனர். அவற்றை எதிர் அணியில் உள்ளவர்கள் லாவகமாகப் பிடித்து நாச்சியார்களை சமாதானப்படுத்தி பாசுரம் பாடினர். இதையடுத்து நாச்சியார்கள் சமாதானத்தின் அடையாளமாக, மலையப்ப சுவாமி அருகில் இருவரையும் எழுந்தருளச் செய்து ஆரத்தி காட்டி நைவேத்தியம் உள்ளிட்டவற்றை அர்ச்சகர்கள் சமர்ப்பித்தனர்.