திருப்பதியில் இலவச தரிசனம் திருப்பதி திருமலையில், பிப்ரவரி 13 ஆம் தேதி மூத்த குடிமக்களுக்கும், பிப்ரவரி 14 ஆம் தேதி, கைக்குழந்தைகளுடன் வரும் பெற்றோருக்கும், இலவச தரிசனம் வழங்கப்பட உள்ளது. ஏழுமலையானை தரிசிக்க திருமலை திருப்பதி தேவஸ்தானம் மாதந்தோறும் இரு நாட்களுக்கு, மூத்த குடிமக்கள் மற்றும் கைக்குழந்தைகளுடன் வரும் பெற்றோர்களுக்கு இலவச தரிசனம் வழங்கி வருகிறது. அதன்படி, வரும், பிப்ரவரி 13ல், மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோருக்கு தரிசனம் வழங்கப்பட உள்ளது. காலை, 10:00 மணிக்கு, 1,000 பேர், பகல், 2:00 மணிக்கு, 2,000 பேர், மாலை, 3:00 மணிக்கு, 1,000 பேர் என, 4,000 பேருக்கு தரிசனம் வழங்கப்பட உள்ளது. இதற்கான டோக்கன்களை, திருமலையில் அருங்காட்சியகம் எதிரில் உள்ள கவுன்டரில் ஆதார் அட்டையை காண்பித்து பெற்றுக்கொள்ளலாம். அதேபோல் பிப்ரவரி 14 ஆம் தேதி காலை 9:00 மணி முதல், மதியம், 1:30 மணி வரை, 5 வயது வரையுள்ள குழந்தைகளின் பெற்றோருக்கு தரிசனம் வழங்கப்பட உள்ளது.

திருப்பதியில் ஆண்டு தோறும் நடக்கும் வருடாந்திர நவராத்திரி பிரம்மோற்சவ விழா இந்த ஆண்டு 2 முறை நடைபெற உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. திருப்பதியில் ஆண்டு தோறும் வருடாந்திர நவராத்திரி பிரம்மோற்சவ விழா நடைபெறும். இந்த ஆண்டு தெலுங்கு பஞ்சாங்கப்படி செப்டம்பர் மாதத்திலும் ஒரு பிரம்மோற்சவம் நடக்கிறது. தெலுங்கு பஞ்சாங்க வழக்கப்படி அமாவாசை முடிந்த மறுநாள் தெலுங்கு மாதப்பிறப்பு நிகழ்கிறது. அவ்வாறு அமாவாசைக்கு மறுநாள் மாதப் பிறப்பு தொடங்குவதால் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆண்டுக்கு 12 மாதங்களை காட்டிலும் கூடுதலாக 21 நாட்கள் வருகின்றன. அவ்வாறு வரும் 21 நாட்களை அதிக மாதமாக தெலுங்கு பஞ்சாங்கம் கணக்கிடுகிறது. இந்த நிலையில் 12 மாதங்களுக்கு ஒருமுறை வைகானாச ஆகம விதிப்படி திருப்பதியில் பிரம்மோற்சவம் நடத்தப் பட்டு வருகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை 12 மாதங்களை காட்டிலும் அதிக மாத நாட்கள் வருவதால் அப்போது 2 பிரம்மோற்சங்களை தேவஸ்தானம் நடத்துவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு பிறக்க உள்ள ஹேவிளம்பி தெலுங்குப் புத்தாண்டு அதிக நாட்களாக வருகிறது. அதனால் இந்த ஆண்டு நவராத்திரி பிரம்மோற்சவம் மற்றும் அதிக மாத நாள் பிரம்மோற்சவம் என 2 பிரம்மோற்சவங்கள் திருப்பதியில் நடைபெற உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று அதிகாலை 3 மணி முதல் மாலை 6 மணி வரை 15 மணி நேரத்தில் 38 ஆயிரத்து 241 பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்தனர். இலவச தரிசனத்துக்கான வைகுண்டம் மையத்தில் 26 அறைகளில் காத்திருந்த பக்தர்கள் 8 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். மலைப்பாதை வழியாக நடந்து வந்து திவ்ய தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள், 300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் 1 மணி நேரத்தில் தரிசனம் செய்தனர். நேற்று முன்தினம் காலை முதல் நள்ளிரவு வரை தரிசனம் செய்த பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கை நேற்று எண்ணப்பட்டது. இதில் பக்தர்கள் 3.02 கோடியை காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.

திருமலை திருப்பதியில் வடக்குதுவாரம் என்பதற்கு பதிலாக ஏகாதசி, துவாதசி இரண்டு நாட்களுக்கு மட்டும் வைகுண்ட பிரதட்சணம் நடைபெறுகிறது. அதாவது 12 ம் நூற்றாண்டில் ஆனந்த நிலையம் விரவுபடுத்துவதற்காக, கர்ப்பாலயத்தை சுற்றிவரும் பாதை அகலப்படுத்தப்பட்டது. அந்த பழைய குறுகலான பாதையே வைகுண்ட பிரதட்சணமாக, இந்த இருநாட்கள் மட்டும் திறந்து விடப்படுகிறது. மற்றநாட்களில் நாம் கோயிலை சுற்றிவரும் பாதையில் ஆனந்த நிலைய விமானத்தில் வடக்குமுகமாக விமான வேங்கடேஸ்வர சாமி எழுந்தருளியிருக்கிறார்.கூடவே, பரமபதநாதர் எழுந்தருளியிருக்கிறார் , வருடத்தின் 365 நாளும் இவரை தரிசிக்கலாம், இது வைகுண்ட ஏகாதசியின் பலனை கொடுக்கும் என்பது ஆகமம்.
பரமபதநாதர் (வண்ண கட்டமிடப்பட்டிருப்பது) அருகில் வெள்ளி தோரணத்தில் காட்சி தருபவர்தான் விமான வெங்கடேஸ்வரர். ஆனந்த நிலைய விமானத்தில் பரமபதநாதர் என்பது வைகுண்டத்தில் பாற்கடலில் மஹாவிஷ்ணு கோலம் ஆதிசேஷனின் மேல் வலதுகால் மடித்து, இடதுகால் பூமியை தொட்டுஇருக்கும் இந்த திருக்கோலம்தான் பரமபதநாதர் எனப்படுகிறது. இது பிரம்மா முதலானவர்களுக்குக்கூட கிடைக்காத தரிசனம் பரமபதநாதர் எனபது இந்த தரிசனத்தை பக்தர்கள் ஆனந்த நிலைய விமானத்தில் எப்போதும் தரிசிக்கலாம். "..உள்ளே, சாமிய நாம கூட்டத்துல சரியா பார்த்து வேண்டுதல்கள சொல்லமுடியாத காரணத்துனால, கோபுரத்துல அதே கோலத்துல இருக்குற விமான வெங்கடேஸ்வரர் அமைக்கப்பட்டிருக்காரு..,இவருகிட்ட உங்களோட வேண்டுதல்கள மனசார சொல்லிட்டு வாங்க..அது அப்படியே மூலவர்கிட்ட சொன்னமாதிரி..நிச்சயம் நல்ல பலன் தரும்.."

சந்திர கிரகணத்தையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் 31ம்தேதி 10.30 மணி நேரம் நடை அடைக்கப்படுகிறது. 31ம்தேதி மாலை 5.40 மணி முதல் இரவு 8.30 மணிவரை சந்திர கிரகணம் நிகழ உள்ளது. இதையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அன்று காலை 11 மணி முதல் இரவு 9.30 மணி வரை கோயில் நடை அடைக்கப்படுகிறது. 9.30 மணிக்குபிறகு நடை திறக்கப்பட்டு கோயில் முழுவதும் சுத்தம் செய்து பரிகார பூஜைகள் நடத்தப்படும். தொடர்ந்து இரவு 10.30 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர். கோயில் நடை அடைக்கப்படுவதையொட்டி அன்றைய தினம் ரூ.300 டிக்கெட் வழங்குவது நிறுத்தப்படும். அதேபோல் மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்கள் மற்றும் 1 வயது குழந்தையுடன் வரும் பெற்றோர்களுக்கு அளிக்கப்படும் முன்னுரிமை தரிசனமும் ரத்து செய்யப்படும். மலைப்பாதையில் நடந்து வரும் பக்தர்களுக்கு 31ம்தேதி அதிகாலை முதல் நள்ளிரவு 12 மணி வரை திவ்ய தரிசன டிக்கெட் வழங்குவதும் நிறுத்தப்படும். சந்திர கிரகணம் நடைபெறுவதால் அன்றைய நாளில் அன்னப்பிரசாதம் தயார் செய்யப்படாது. வைகுண்டம் காத்திருப்பு அறைகளிலும் பக்தர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். எனவே இதனை கருத்தில்கொண்டு திருப்பதி கோயிலுக்கு வரும் பக்தர்கள் தங்கள் பயணத்தை மாற்றியமைத்து கொள்ள வேண்டும் என்று கோயில் நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோயிலில் வருடாந்திர தெப்போற்சவம் விமரிசையாக தொடங்கியது. தொடர்ந்து 7 நாள்கள் நடைபெற உள்ள இந்த தெப்போற்சவம் தை மாத பௌர்ணமி அன்று நிறைவு பெறுகிறது. இதற்காக கோவிந்தராஜ சுவாமி திருக்குளம் சுத்தம் செய்யப்பட்டு, புதிய நீர் நிரப்பப்பட்டுள்ளது. திருக்குளத்தில் ஏற்படுத்திய தெப்பம் மலர்களாலும், மின் விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டது. தெப்போற்சவத்தின் முதல் நாளான வியாழக்கிழமை மாலை 6.30 மணிக்கு தெப்போற்சவம் தொடங்கியது. அதில் கோதண்டராம சாமி சீதா, லட்சுமணருடன் திருக்குளத்தில் 5 முறை வலம் வந்தார். தெப்பத்தில் வேதபண்டிதர்கள் அமர்ந்து வேதம் ஓதினர். அன்னமாச்சார்யா திட்டத்தைச் சேர்ந்தவர்கள் பக்திப் பாடல்களைப் பாடினர். தெப்போற்சவத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு தரிசித்தனர். தெப்பம் அருகில் வரும் போது எழுந்து நின்று கற்பூர ஆரத்தி காண்பித்தனர்

Page 1 of 5