திருமால் வசிக்கும் திருத்தலங்கள்


நவ திருப்பதி தலங்கள் ஒன்பதும், 30 கிலோமீட்டர் சுற்றளவிற்குள், அழகாகத் தொடுக்கப்பட்ட மாலையைப் போல் தாமிரபரணி கரையிலேயே அமைந்துள்ளன. தாமிரபரணி நதியின் வட கரையில் 6 தலங்களும், தென் கரையில் தென்திருப்பேரை, திருக்கோளூர், ஆழ்வார் திருநகரி ஆகிய மூன்று திருத்தலங்களும் அமைந்து அணி செய்கின்றன. நவ திருப்பதியின் அனைத்து பெருமாள் தலங்களிலும் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு தரிசனம் செய்வது சிறப்பானது.

என்றாலும் ஆழ்வார் திருநகரி, ஸ்ரீவைகுண்டம், தென்திருப்பேரை ஆகிய 3 தலங்களில் மட்டுமே சொர்க்க வாசல் திறப்பு நடைபெறுகிறது. ஆழ்வார் திருநகரியில் நள்ளிரவு 12 மணிக்கும், ஸ்ரீவைகுண்டத்தில் இரவு 7 மணிக்கும், தென்திருப்பேரையில் வைகுண்ட துவாதசி அன்று மாலை 4 மணிக்கும் சொர்க்கவாசல் திறப்பு நடைபெறுகிறது, அதே போல் இந்த 3 திருக்கோவில்களிலும் பாஞ்சராத்திர ஆகமமும், மற்ற ஆறு தலங்களிலும் வைகானச ஆகமமும் பின்பற்றப்படுகிறது.

திருப்புளிங்குடி மற்றும் திருக்கோளூர் ஆகிய தலங்களில் கிடந்த திருக்கோலத்திலும், வரகுணமங்கை, தென் திருப்பேரை மற்றும் இரட்டைத் திருப்பதி அரவிந்தலோசனப் பெருமாள் ஆகிய திருத்தலங்களில் அமர்ந்த கோலத்திலும், ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார் திருநகரி, பெருங்குளம் மற்றும் இரட்டை திருப்பதி தேவர்பிரான் ஆலயம் ஆகிய தலங்களில் நின்ற கோலத்திலும் பெருமாள் சேவை சாதிக்கிறார். இதனை நம்மாழ்வார் ‘புளிங்குடிக் கிடந்து, வரகுணமங்கையில் இருந்து, வைகுந்தத்துள் நின்று’ என்று மங்களாசாசனம் செய்கிறார்.

பெருமாள் நடந்தால் குடையாகவும், இருந்தால் ஆசனமாகவும், கிடந்தால் அணையாகவும் இருப்பதாக ஆதிசேஷனை குறிப்பிடுவது வழக்கம். நவதிருப்பதியில் இருக்கும் பெருமாள்களின் திருக்கோலங்கள் இதனை உறுதிப்படுத்தும் வகையில் ஆதிசேஷனுடன் தொடர்புள்ள சன்னிதிகளாக அமைந்துள்ளன. அதேபோல் பாண்டிய நாட்டு திவ்ய தேசங்களில் கருடாழ்வாருக்கு முக்கியத்துவம் உள்ள வரலாறு உண்டு. பட்சிராஜன் வழிபாடு என்ற முறையில் அவருக்கு கடப்பன், தங்க போத்தி, காய்சின வேந்தன் போன்ற பெயர்கள் உள்ளன. தென் திருப்பேரையில் சன்னிதிக்கு நேராக இருக்கும் கருடாழ்வாரை, பெருமாள் ஒதுங்கி இருக்கச் சொன்ன வரலாறும் உண்டு. வைகாசி விசாகத்தில் நவ திருப்பதி பெருமாள்களும் கருட வாகனத்தில் வந்து சேவை சாதிக்கும் வழக்கம் இருந்து வருகிறது.



Leave a Comment