தோஷங்களை நீக்கும் ஜம்புகேஸ்வரர் கோவில்


பாடல் பெற்ற காவிரி வடகரைத் தலங்கள் வரிசையில் 60-வது தலமாக இருக்கும் திருவானைக்காவல், பஞ்சபூதத் தலங்களில் நீர் தலம். தமிழ்நாட்டில் உள்ள பெரிய சிவாலயங்களில் திருவானைகாவல் தலமும் ஒன்று.

ஆறு ஆதாரத் தலங்களில் இத்தலம் சுவாதிஷ்டானத் தலம். தேவாரம் பாடிய மூவராலும் பதிகம் பாடப்பெற்ற சிறப்புடைய தலங்களில் ஒன்று. இத்தல இறைவனையும், இறைவியையும் வழிபட்டு வர சகல தோஷங்கள் நீங்கும். திருமணத் நடை விலகும், குழந்தை பாக்கியம் கிடைக்கும்

தல வரலாறு
புராண காலத்தில் வெண் நாவல் மரங்கள் நிறைந்த காடாக இத்தலம் இருந்தது. அங்கே ஒரு வெண் நாவல் மரத்தடியில் ஒரு சிவலிங்கம் இருந்தது. சிவகணங்களில் இருவர், தாங்கள் பெற்ற சாபம் காரணமாக இக்காட்டில் ஒரு யானையாகவும், சிலந்தியாகவும் பிறந்தனர்.

சிவலிங்கம், கூரையில்லாமல் வெய்யில் மழையில் கிடந்தது. சிலந்தி, சிவலிங்கத்தின் மேல் வலை பின்னி வெய்யில், மழை மற்றும் மரத்தின் சருகுகள் லிங்கத்தின் மேல் விழாமல் காத்தது. யானை காவிரியில் இருந்து தன் துதிக்கை மூலம் நீரும், மற்றும் பூவும் கொண்டுவந்து வழிபட்டது.

யானை, சிலந்தி பின்னிய வலையை அசிங்கமாகக் கருதி அதை அழித்துவிட்டுச் செல்லும். சிலந்தி மறுபடியும் வலை பின்னி தன் வழிபாட்டைத் தொடரும். தினந்தோறும் இது தொடர, யானையை தண்டிக்க நினைத்த சிலந்தி, யானையின் துதிக்கையில் புக, யானையும் சிலந்தியும் போராட, கடைசியில் இரண்டும் மடிந்தன.

இவற்றின் பக்திக்கு மெச்சிய சிவபெருமான், யானையை சிவகணங்களுக்குத் தலைவனாக ஆக்கினார். சிலந்தி, மறுபிறவியில் கோச்செங்கட் சோழன் என்ற அரசனாகப் பிறந்தது. பூர்வஜென்ம வாசனையால் கோச்செங்கட் சோழன், யானை ஏற முடியாதபடி குறுகலான படிகளைக் கொண்ட கட்டுமலை மீது சிவலிங்கம் ஸ்தாபித்து 70 கோவில்கள் கட்டினான். அவை யாவும் மாடக்கோவில் என்று அழைக்கப்படுகின்றன. கோச்செங்கட் சோழன் கட்டிய முதல் மாடக்கோவில் திருவானைக்கா ஜம்புகேஸ்வரர் ஆலயமாகும்.

 

இந்த தல வரலாற்றை திருநாவுக்கரசர் தனது திருக்குறுக்கை சிவஸ்தலம் பதிகத்தில் (4-ம் திருமுறை - "ஆதியில் பிரமனார் தாம்" என்று தொடங்கும் பதிகம் - (4-வது பாடலில்) தெரிவிக்கிறார்.

சிலந்தியும் ஆனைக்காவில் திருநிழல் பந்தர் செய்து
உலந்து அவண் இறந்த போதே கோச்செங்கணானும் ஆகக்
கலந்த நீர்க் காவிரீ சூழ் சோணாட்டுச் சோழர் தங்கள்
குலந்தனில் பிறப்பித்திட்டார் குறுக்கை வீரட்டனாரே
எப்படிப் போவது
திருவானைக்கா, திருச்சி நகரின் ஒரு பகுதியாகும். நகரின் பல பகுதிகளில் இருந்தும் திருவானைக்காவல் வர பேருந்து வசதிகள் இருக்கின்றன. இவ்வாலயம் தினமும் காலை 7 மணி முதல் பகல் 1 மணி வரையிலும், மாலை 3 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.



Leave a Comment