பிரதோஷங்களில் இத்தனை வகைகளா?


 

சிவ வழிபாட்டில் சோமவாரம் வழிபாடு மிக விசேஷம். அதுவும் அன்று பிரதோஷமாக இருந்தால் ,சிவன் கோவிலில் வழிபாடு செய்யும் போது  கோடி புண்ணியத்தை பெறுவதற்கு சமம். ஆனால் பிரதோஷத்தில் 20 வகை இருக்கிறது என்பது பலரும் அறியாத செய்தி. 20 வகை பிரதோஷம் மற்றும் அதன் பலன்களைப் பற்றி தெரிந்துக் கொள்வோம்.

 தினசரி பிரதோஷம் :

தினமும் பகலும், இரவும் சந்திக்கின்ற சந்தியா காலமாகிய மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரை உள்ள காலமே பிரதோஷ காலமாகும்.  ஐந்து வருடங்கள் முறையாகச் நித்தியப்பிரதோஷத்தை செய்வர்களுக்கு முக்தி நிச்சயம் என்கிறது நமது சாஸ்திரம்.

பட்சப் பிரதோஷம் :

அமாவாசைக்குப் பிறகான, சுக்லபட்சம் என்ற வளர் பிறை காலத்தில் 13-வது திதியாக வரும் “திரயோதசி” திதியே பட்சப் பிரதோஷம் ஆகும். இந்தத் திதியின் மாலை நேரத்தில் பட்சிலிங்க வழிபாடு செய்வது உத்தமம் ஆகும்.

 மாதப் பிரதோஷம் :

பவுர்ணமிக்குப் பிறகு வரும் கிருஷ்ணபட்சம் என்ற தேய்பிறை காலத்தில், 13-வது திதியாக வரும் “திரயோதசி” திதியே மாதப் பிரதோஷம் ஆகும். இந்த திதியின் மாலை நேரத்தில் பாணலிங்க வழிபாடு செய்வது உத்தம பலனைத் தரும்.

நட்சத்திரப் பிரதோஷம் :

பிரதோஷ திதியாகிய ‘திரயோதசி திதி’யில் வரும் நட்சத்திரத்திற்கு உரிய ஈசனை பிரதோஷ நேரத்தில் வழிபடுவது நட்சத்திர பிரதோஷம் ஆகும்

பூரண பிரதோஷம் :

திரயோதசி திதியும், சதுர்த்தசி திதியும் சேராத திரயோதசி திதி மட்டும் உள்ள பிரதோஷம் பூரண பிரதோஷம் ஆகும். இந்தப் பிரதோஷத்தின் போது ‘சுயம்பு லிங்கத்தை’த் தரிசனம் செய்வது உத்தம பலனை தரும்

 திவ்யப் பிரதோஷம் :

பிரதோஷ தினத்தன்று துவாதசியும், திரயோதசியும் சேர்ந்து வந்தாலோ அல்லது திரயோதசியும், சதுர்த்தசியும் சேர்ந்து வந்தாலோ அது ‘திவ்யப் பிரதோஷம்’ ஆகும். இந்த நாளன்று மரகத லிங்கேஸ்வரருக்கு அபிஷேக ஆராதனை செய்தால் பூர்வஜென்ம வினை முழுவதும் நீங்கும்.

தீபப் பிரதோஷம் :

பிரதோஷ தினமான திரயோதசி திதியில் தீப தானங்கள் செய்வது,மற்றும்  ஈசனுடைய ஆலயங்களைத் தீபங்களால் அலங்கரித்து ஈசனை வழிபட சொந்த வீடு அமையும் என்பது நம்பிக்கை.

அபயப் பிரதோஷம் என்னும் சப்தரிஷி பிரதோஷம் :

ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, தை, மாசி, பங்குனி மாதங்களில் ,திரயோதசி திதியில் முறையாக பிரதோஷ வழிபாடு செய்து, சப்தரிஷி மண்டலத்தைத் தரிசித்து வழிபடுவதே அபயப் பிரதோஷம் என்னும் சப்தரிஷி பிரதோஷம் ஆகும். இந்த வழிபாட்டை செய்பவர்களுக்கும் ஈசன் தரம் பார்க்காது அருள் புரிவானாம்.

மகா பிரதோஷம் :

            

                                                           

ஈசன் விஷம் உண்ட நாளான  சனிக்கிழமையும், திரயோதசி திதியும் சேர்ந்து வருகின்ற பிரதோஷம் ‘மகா பிரதோஷம்’ஆகும். இந்த மகா பிரதோஷ தினத்தில் , எமன் வழிபட்ட சுயம்பு லிங்க தரிசனம் செய்வது மிகவும் உத்தமம் ஆகும். மாசி மாதம் வரும் மகா சிவராத்திரிக்கு முன்னால் வரும் பிரதோஷமும்,’மகா பிரதோஷம்’எனப்படும்.

உத்தம மகா பிரதோஷம் :

சித்திரை, வைகாசி, ஐப்பசி, கார்த்திகை ஆகிய மாதங்களில் வளர்பிறையில், சனிக்கிழமையில் திரயோதசி திதியன்று வரும் பிரதோஷம் உத்தம மகா பிரதோஷம் ஆகும். இது மிகவும் சிறப்பும் கீர்த்தியும் பெற்ற தினமாகும்.

ஏகாட்சர பிரதோஷம் :

வருடத்தில் ஒரு முறை மட்டுமே வரும் மகா பிரதோஷத்தை `ஏகாட்சர பிரதோஷம்’ என்பர். அன்றைக்கு சிவாலயம் சென்று, `ஓம்’ என்ற பிரணவ மந்திரத்தை எத்தனை முறை ஓத முடியுமோ, அத்தனை முறை ஓதுவதும் பின், விநாயகரையும் வழிபட்டு, ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் வழங்குவதும்  பல விதமான நன்மைகளைத் தரும்.

அர்த்தநாரி பிரதோஷம் :

வருடத்தில் இரண்டு முறை மகாபிரதோஷம் வந்தால் அதற்கு அர்த்தநாரி பிரதோஷம் என்று பெயர். அன்று சிவாலயம் சென்று வழிபட, தடைப்பட்ட திருமணம் நடைபெறும். பிரிந்து வாழும் தம்பதி ஒன்று சேர்வார்கள்.

திரிகரண பிரதோஷம் :

வருடத்துக்கு மூன்று முறை மகாபிரதோஷம் வந்தால் அது திரிகரண பிரதோஷம். பிரதோஷ வழிபாடு முடிந்ததும் அஷ்ட லட்சுமிகளுக்கும் பூஜை வழிபாடு செய்வது மிகவும் நல்லது.

பிரம்மப் பிரதோஷம் :

ஒரு வருடத்தில் நான்கு மகா பிரதோஷம் வந்தால், அது பிரம்மப் பிரதோஷம். முன்ஜென்மப் பாவம் மற்றும் தோஷங்களை  நீக்க வல்லது இந்த பிரதோஷ வழிபாடு.

அட்சரப் பிரதோஷம் :

வருடத்துக்கு ஐந்து முறை மகா பிரதோஷம் வந்தால் அது அட்சரப் பிரதோஷம். தாருகா வனத்து ரிஷிகளின் அகந்தையை நீக்கி ஈசனின் அருள் கிடைக்க செய்த பிரதோஷம் இது.

கந்தப் பிரதோஷம் :

சனிக்கிழமையும், திரயோதசி திதியும், கிருத்திகை நட்சத்திரமும் சேர்ந்து வரும் பிரதோஷம் கந்தப் பிரதோஷம். இது முருகப் பெருமான் சூரசம்ஹாரத்துக்கு முன் வழிபட்டதால், இந்தப் பிரதோஷத்தில் முறையாக விரதம் இருந்தால் முருகன் அருள் பெறலாம்.

 சட்ஜ பிரபா பிரதோஷம் :

ஒரு வருடத்தில் ஏழு மகா பிரதோஷம் வந்தால் அது, `சட்ஜ பிரபா பிரதோஷம்’. நாம் இந்த விரதத்தைக் கடைப்பிடித்தால் முற்பிறவி வினை நீங்கி பிறவிப் பெருங்கடலை எளிதில் கடக்கலாம் என்கிறார்கள் சான்றோர்கள்.

அஷ்ட திக் பிரதோஷம் :

ஒரு வருடத்தில் எட்டு மகா பிரதோஷ வழிபாட்டை முறையாகக் கடைப்பிடித்தால், அஷ்ட திக்குப் பாலகர்களும் மகிழ்ந்து நீடித்த செல்வம், புகழ், கீர்த்தி ஆகியவற்றைத் தருவார்கள்.

நவக்கிரகப் பிரதோஷம் :

மிகவும் அரிதாக ஒரு வருடத்தில் ஒன்பது மகா பிரதோஷம் வந்தால், அது நவக்கிரகப் பிரதோஷம்.  இந்தப் பிரதோஷத்தில் முறையாக விரதம் இருந்தால் சிவனின் அருளோடு நவக் கிரகங்களின் அருளும் கிடைக்கும்.

துத்தப் பிரதோஷம் :

அரிதிலும் அரிது பத்து மகாபிரதோஷம் ஒரு வருடத்தில் வருவது தான் துத்தப் பிரதோஷம். அந்தப் பிரதோஷ வழிபாட்டைச் செய்தால் பிறவி குறைபாடுகள் கூட சரியாகும்.

                                            

                                                             

ஓம் நம சிவாய.....



Leave a Comment