திருவண்ணாமலை கார்த்திகை தீப தேரோட்டம் கோலாகலம்...


திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழாவின் 7ம் நாளான இன்று காலை தொடங்கி வெகு விமர்சையாக நடைபெற்றுள்ளது. இதில் லட்சக்கணக்கில் பக்தர்கள் கலந்துகொண்டு பக்தி கோஷங்கள் எழுப்பினர்.

விநாயகர், சுப்பிரமணியர், உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய தேர்கள் என 5 தேர்கள் இன்று ஒரே நாளில் வலம் வரும். இன்று அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு, பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் செய்யப்பட்டது. தொடர்ந்து மேளதாளம் முழங்க, கோயிலில் இருந்து எடுத்து வரப்பட்டு, தேரடி வீதியில் அலங்கரித்து நிறுத்தப்பட்ட தேர்களில் எழுந்தருளினர்.

முதலாவதாக விநாயகர் தேர் காலை 6.45 மணிக்கு புறப்பட்டது. அப்போது ‘அண்ணாமலையாருக்கு அரோகரா’ என்ற பக்தி முழக்கத்துடன் பக்தர்கள் வடம் பிடித்து தேரை மாடவீதிகளில் இழுத்துச்சென்றனர். விநாயகர் தேர் நிலைக்கு வந்து சேர்ந்ததையடுத்து சுப்பிரமணியர் தேர் புறப்பட்டது. இதில் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர் எழுந்தருளினர்.

சுப்பிரமணியர் தேர் நிலைக்கு வந்ததும் ‘மகாரதம்’ என அழைக்கப்படும் உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார் தேர் புறப்பட்டது. இந்த தேர் நிலைக்கு வந்தபிறகு பராசக்தியம்மன் தேர் புறப்படும். இந்த தேரை விரதம் இருக்கும் பெண்கள் மட்டுமே மாட வீதிகளில் இழுத்து வருவார்கள் என்பது சிறப்பாகும்.

இதையடுத்து சண்டிகேஸ்வரர் தேர் மாடவீதியில் பவனி வரும். தேர் திருவிழாவின்போது தங்களுக்கு குழந்தை வரம் அருளிய சுவாமிக்கு நேர்த்திக்கடன் செலுத்தும் வகையில் தம்பதியினர் இன்று காலை முதலே கரும்பு தொட்டிலில் குழந்தையை வைத்து மாடவீதியை வலம் வந்தனர்.



Leave a Comment