சங்கர நாராயணசுவாமி கோயிலில் கந்தசஷ்டி திருவிழா


திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவிலில் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு சங்கரநாராயணசுவாமி கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் 6 நாட்கள் கந்தசஷ்டி திருவிழா நடைபெறும்.

இந்த ஆண்டின் கந்தசஷ்டி திருவிழா இன்று சங்கரநாராயணசுவாமி கோயிலின் சண்முகர் சன்னதியில் கோலாகலமாக துவங்கியது. சண்முகர் சன்னதி முன்பாக உற்சவ சண்முகருக்கு மாவுப்பொடி, மஞ்சள் பொடி, திரவியம், பால், தயிர், விபூதி, இளநீர், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட 11 வகையான பொருட்களுடன் சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து சண்முகர், தெய்வானை, வள்ளிக்கு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு வேதவிர்ப்பணர்கள் வேதமந்திரங்கள் முழங்க சண்முகார்ச்சனை செய்யப்பட்டு சண்முகரின் 6 முகங்களுக்கும் மஹா தீபாராதனை நடத்தப்பட்டது.

இன்று துவங்கியுள்ள கந்தசஷ்டி திருவிழாவில் தினமும் மாலை கோயிலில் இருந்து முருகப் பெருமான் ரதவீதி உலாவும், முருகப்பெருமானுக்கு முன்பாக சூரர்கள் நடனமாடி செல்லும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நாளான வருகிற 13ம் தேதி மாலை 4 மணிக்கு மேல் நகரின் வடக்கு ரதவீதியில் வைத்து சண்முகர் சூரனை வதம் செய்யும் சூரசம்ஹார விழா நடைபெறுகிறது.



Leave a Comment