சபரிமலை செல்பவரா நீங்கள்.... முன்பதிவு செய்ய முந்துங்கள்....


சபரிமலை ஐயப்பன் கோவில் கூட்ட நெரிசலை சமாளிக்கும் வகையில், தரிசனத்துக்கு ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யும் முறையை கேரள போலீஸார் அறிமுகப்படுத்தியுள்ளனர். வரும் 16-ம் தேதி கோயில் நடை திறக்கப்பட உள்ள நிலையில், தரிசனத்துக்கான தேதி மற்றும் நேரத்தை ஆன்லைன் மூலம் பதிவுசெய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மகர விளக்கு பூஜைக்காக வரும் 16-ம் தேதி கோயில் நடை திறக்கப்படுகிறது. இதையொட்டி விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள கேரள போலீஸார் முடிவு செய்துள்ளனர். இதன்படி, 4 கட்டங்களாக கமாண்டோக்கள், பெண் காவலர்கள் உள்ளிட்ட 24,000-க்கும் மேற்பட்டோரை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

நிலக்கல் முதல் சன்னிதானம் வரை குறைந்தபட்சம் 5,000 பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்த குறைந்தபட்சம் 100 போலீஸாரையாவது அனுப்புமாறு தமிழ்நாடு, ஆந்திரா உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு கேரள போலீஸார் கடிதம் எழுதியுள்ளனர்.

இதேபோல, தரிசனத்துக்கு ஆன்லைன் முறையில் முன்பதிவு செய்யும் முறையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. www.sabarimalaq.com என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்துகொள்ளலாம். இதேபோல, நிலக்கல் பகுதியிலிருந்து பம்பை-க்கு பேருந்து சேவைக்கும் முன்பதிவு செய்து கொள்ளலாம். இதற்காக வலைதளத்தில் லாக்கின் செய்து தங்களது பெயர், வயது, முகவரி ஆகிய தகவல்களுடன் புகைப்படத்தையும் சேர்க்க வேண்டும்.

ஒருவர் அதிகபட்சம் 10 டிக்கெட்டுகளை முன்பதிவுசெய்ய முடியும். டிக்கெட்டை பிரின்ட் அவுட் எடுத்துச் செல்ல வேண்டும் என்று கேரள போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர். முன்பதிவு செய்யும் பேருந்து டிக்கெட்டுகள், பம்பையிலிருந்து நிலக்கல் திரும்பி வருவதற்கு 48 மணிநேரத்துக்கு செல்லும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தனியார் வாகனங்கள், நிலக்கல் பகுதிவரை மட்டுமே அனுமதிக்கப்படும் என்றும், பக்தர்கள் கேஎஸ்ஆர்டிசி பேருந்து மூலம் பம்பை-க்கு செல்லலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.



Leave a Comment