குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது


தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன் பட்டினம் ஞானமூர்த்தீசுவரர் உடனுறை முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி உள்ளது.

அதிகாலை 5 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட யானையில் கொடிப்பட்டம் வீதி உலா, 6 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. காலை 9 மணிக்கு கோவில் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து நேர்த்திக்கடனாக பல்வேறு நாட்கள் விரதம் இருந்து, காளி வேடம் அணியும் பக்தர்களுக்கு கோவில் பூசாரி காப்பு அணிவித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

முதலாம் நாளில் சிம்ம வாகனத்தில் துர்க்கை கோலத்திலும், 2-ம் நாளில் கற்பகவிருட்சம் வாகனத்தில் விசுவகர்மேசுவரர் கோலத்திலும், 3-ம் நாளில் ரி‌ஷப வாகனத்தில் பார்வதி கோலத்திலும், 4-ம் நாளில் மயில் வாகனத்தில் பாலசுப்பிரமணியர் கோலத்திலும், 5-ம் நாளில் காமதேனு வாகனத்தில் நவநீதகிருஷ்ணர் கோலத்திலும், 6-ம் நாளில் சிம்ம வாகனத்தில் மகிஷாசுரமர்த்தினி கோலத்திலும், 7-ம் நாளில் பூஞ்சப்பரத்தில் ஆனந்த நடராஜர் கோலத்திலும், 8-ம் நாளில் கமல வாகனத்தில் கஜலட்சுமி கோலத்திலும், 9-ம் நாளில் அன்ன வாகனத்தில் கலைமகள் கோலத்திலும் அம்மன் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

10-ம் நாளான வருகிற 19-ந் தேதி (வெள்ளிக்கிழமை) இரவு 12 மணிக்கு விழாவின் சிகர நிகழ்ச்சியான மகிஷா சூரசம்ஹாரம் நடக்கிறது. 11-ம் நாளான 20-ந்தேதி (சனிக்கிழமை) அதிகாலை 3 மணிக்கு அம்மன் தேரில் பவனி வருதல், மாலை 4.30 மணிக்கு காப்பு களைதல், இரவு 12 மணிக்கு சேர்க்கை அபிஷேகம் நடக்கிறது.

12-ம் நாளான 21-ந்தேதி காலையில் சிறப்பு அபிஷேகம், தீபாராதனையுடன் தசரா திருவிழா நிறைவு பெறுகிறது.



Leave a Comment