திருப்பதியில் மகா தேரோட்டம்


திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ விழாவின் எட்டாம் நாளில் மகா தேரோட்டம் நடந்தது. ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் ஏழுமலையான் மகா ரதத்தில் எழுந்தருளி காட்சியளித்தார்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கடந்த 13-ந் தேதி தொடங்கி கோலாகலமாக நடந்து வருகிறது. பிரம்மோற்சவத்தின் சிகர நிகழ்ச்சியான கருட சேவை கடந்த 17-ந் தேதி விமரிசையாக நடந்தது. கருட சேவையில் சுமார் 4 லட்சம் பக்தர்கள் வரை கலந்து கொண்டனர்.

நேற்று முன்தினம் தங்க தேரோட்டம் நடந்தது. 7-ம் நாள் விழாவான நேற்று காலையில் சூரிய பிரபை வாகனத்திலும், இரவு சந்திர பிரபை வாகனத்திலும் ஏழு மலையான் 4 மாட வீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

இதைத்தொடர்ந்து, பிரம்மோற்சவ விழாவின் 8-ம் நாளான இன்று காலை மகா தேரோட்டம் நடந்தது. ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் ஏழுமலையான் மகா ரதத்தில் எழுந்தருளி காட்சியளித்தார். மகா ரதத்தை தரிசனம் செய்ய லட்சக்கணக்கான பக்தர்கள் 4 மாட வீதிகளில் குவிந்திருந்தனர்.

பெரிய ரதத்தை ஏராளமான பக்தர்கள், ‘கோவிந்தா... கோவிந்தா’ என விண்ணதிர பக்தர்கள் பக்தி முழக்கமிட்டு தரிசனம் செய்தனர்.

இதைத்தொடர்ந்து, இரவு தங்க குதிரை வாகனத்தில் உற்சவர் ஏழுமலையான் பவனி வந்து அருள்பாலித்தார். பிரம்மோற்சவத்தின் நிறைவு நாளான நாளை காலை கோவில் அருகேயுள்ள புஷ்கரணியில் சக்கர ஸ்நானம் நடக்கிறது.

இதைத்தொடர்ந்து, பிரம்மோற்சவ கொடி இறக்கப்பட்டு விழா நிறைவு பெறுகிறது.



Leave a Comment