சிலிர்க்க வைக்கும் திருப்பதி ஏழுமலையான் ரகசியங்கள்


திருப்பதி சென்று திரும்பி வந்தால் திருப்பம் நேரும்’ என்று ஒரு சொல் வழக்கு உண்டு. இதில் இருந்தே தமிழகத்துக்கும் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கும் உள்ள தொடர்பை அறியலாம். பண்டைய தமிழகத்தின் வடக்கு எல்லையே திருப்பதிதான் என்பது வரலாற்றை அறிந்தவர்களுக்கு தெரிந்து இருக்கும். இப்போது அது ஆந்திரத்தின் கையில் இருந்தாலும் நாட்டின் அனைத்து மாநில பக்தர்களையும் தன்பால் இழுக்கும் அபூர்வ சக்தி வாய்ந்தது திருப்பதி ஏழுமலையான் கோயில்.

ஆனால் திருப்பதியில் நம்மில் சிலருக்கு தெரியாத அதிசயங்கள், உண்மைகள், நடைமுறைகள் எவ்வளவோ உள்ளன. அவைகளை அறியும்போது நம்மை சிலிர்க்க வைக்கிறது. இதில் சிலா தோரணம் என்று அழைக்கப்படும் பாறைகளால் ஆன தோரண வாயில் 250 கோடி ஆண்டுகள் பழமையானது என்பதும், ஏழுமலையானின் சிலையும் ஒரே விதமானவை.

இத்தகைய ஏழுமலையான் திருவுருவத்துக்கு பச்சை கற்பூரத்தால் திருநாமம் இடப்படுகிறது. இக்கற்பூரம் தொடர்ந்து பூசப்படும் பாறை வெடித்து விடும். ஆனால், ஏழுமலையானுக்கு 365 நாட்களும் பச்சைக்கற்பூரம் சார்த்தப்பட்டும் எந்த பாதிப்பும் இல்லை. மேலும் எந்த சிலையிலும் சிற்பியின் உளிபட்ட அடையாளம் இருக்கும்.

ஆனால், ஏழுமலையான் சிலையில் அப்படி எந்த அடையாளமும் இல்லை. மேலும் ஏழுமலையான் திருமேனியில் நெற்றிச்சுட்டி, காதணிகள், புருவங்கள், நாகாபரணங்கள் எல்லாம் பளபளப்புடன் இயற்கையாய் அமைந்துள்ளன. ஏழுமலையான் மூலவர் சிலை எப்போதும் 110 டிகிரி பாரன்ஹீட் வெப்பத்தில் இருக்கிறது. 3000 அடி உயரத்தில் குளிர்ந்த சீதோஷ்ணத்தில் அதிகாலை 4.30 மணிக்கு குளிர்ந்த நீர், பால் மற்றும் திரவியங்களால் அபிஷேகம் செய்து முடிந்தவுடன் ஏழுமலையானுக்கு வியர்க்கிறது.

பீதாம்பரத்தால் வியர்வையை ஒற்றி எடுக்கிறார்கள். வியாழக்கிழமை அபிஷேகத்திற்கு முன்னதாக, நகைகளை கழற்றும் போது, ஆபரணங்கள் எல்லாம் சூடாக கொதிக்கின்றன. இக்கோயிலின் வழிபாட்டு முறைகள், உண்டியல் வசூல், சரித்திர சம்பவங்கள் அனைத்தும் வியப்பூட்டுபவை. மேலும் இந்த கோயிலின் மடப்பள்ளி மிக பெரியதாகும். அதேபோல் மூலவருக்கான உடை 21 முழம் நீளமும் 6 கிலோ எடையும் கொண்ட பட்டு பீதாம்பரமாகும்.

இந்த ஆடையை கடையில் வாங்க முடியாது. திருப்பதி தேவஸ்தான அலுவலகத்தில் 12,500 ரூபாய் செலுத்த வேண்டும். பணம் செலுத்திய பிறகு அதை அணிவிப்பதற்கு 3 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். வாரத்தில் வெள்ளிக்கிழமை மட்டும்தான் மேல்சாத்து வஸ்திரம் எனப்படும் இந்த வஸ்திரத்தை அணிவிப்பார்கள்.

அதேபோல் உள்சாத்து வஸ்திரம் ஒரு செட் இருபதாயிரம் ரூபாய். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் 15 வஸ்திரங்கள் அணிவிக்க சமர்ப்பிக்கப்படும். பணம் செலுத்திய பிறகு வஸ்திரம் அணிவிக்க 10 ஆண்டுகள் பக்தர்கள் காத்திருக்க வேண்டும். இதுதவிர அரசாங்கம் சமர்ப்பிக்கும் சீர்வஸ்திரங்கள் ஆண்டுக்கு இருமுறை சாத்தப்படுகிறது. அத்துடன் ஏழுமலையானுக்கு அபிஷேகம் செய்வதற்கு கட்டணம் செலுத்தி விட்டு 3 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்.

மூலவரின் அபிஷேகத்திற்காக ஸ்பெயினில் இருந்து குங்குமப்பூ, நேபாளத்திலிருந்து கஸ்தூரி, சீனாவிலிருந்து புனுகு, பாரீசில் வாசனை திரவியங்கள் வரவழைக்கப்பட்டு, தங்க தாம்பாளத்தில் சந்தனத்துடன் கலந்து, 51 வட்டில் பாலாபிஷேகம் செய்யப்படும். பிறகு கஸ்தூரியுடன் சேர்த்து புனுகு தடவப்படும், காலை 4.30 மணி முதல் 5.30 மணிவரை அபிஷேகம் நடைபெறுகிறது.

அபிஷேகத்தின் போது ஏழுமலையான் தனது மூன்றாவது கண்ணை திறக்கிறார் என்ற நம்பிக்கை உள்ளது. அலங்காரத்துக்காக ஐரோப்பாவின் ஆம்ஸ்டர்டாமில் இருந்து ரோஜா மலர்கள் பக்தர்களால் அனுப்பி வைக்கப்படுகின்றன. மேலும் சீனாவிலிருந்து சீன சூடம், அகில், சந்தனம், அம்பர், தக்கோலம், இலவங்கம், குங்குமம், தமாலம், நிரியாசம் போண்ற வாசனை பொருட்கள் ஏழுமலையான் திருக்கோயிலுக்காக அனுப்பப்படுகின்றன. வெள்ளிக்கிழமை அதிகாலை அபிஷேகத்திற்கு முன்பு ஒரு விசேஷ சாத்துமுறை நடக்கும். வடகலை சம்பிரதாயத்தில் ‘வேங்கடமெனப்பெற்ற’ என்ற பாசுரமும், தனியன்களும் இடம் பெறும்.

சாத்துமுறையின் போது பூ, வஸ்திரம் இல்லாமல் ஏழுமலையான் திருமேனியுடன் இருப்பார். முதலில் ஒரு தீபாராதனை காட்டப்படும். பிறகு தென்கலை சாத்து முறை சேவிக்கப்படும். பிறகு நைவேத்தியம் செய்யப்படும். பிறகு ஒரு தீபாராதனை செய்யப்படும். ஏழுமலையான் அந்த தீப ஒளியில் கண்ணை பறிக்கும் அழகோடு இருப்பார்.



Leave a Comment