மேன்மையான வாழ்க்கை பெற பச்சையம்மன் வழிபாடு


ஈசன் நிலை பெற்றவன். அவன் கண்ணசைவில் உலகம் நில்லாமல் இயங்கிக் கொண்டு இருக்கிறது. அங்கிங்கெனாதபடி எங்கும் பிரகாசமாய் ஆனந்த மூர்த்தியாய் விளங்கும் ஈசனின் கண்களை வேடிக்கையாய் பொத்தினாள் அன்னை பார்வதி. ஒரு வினாடி உலகம் இருண்டது. சூரியன், சந்திரன் மற்றும் விண்மீன்கள் அனைத்தும் இருண்டு ஒளி இழந்தன. உயிர்கள் அசைவற்று நின்றன. முத்தேவர்களும் இயக்கமற்று நின்றனர். இதனால் உலகமே ஸ்த்ம்பித்தது.

நிலைமையை உணர்ந்த அன்னை பரமேஸ்வரிக்கு அச்சம் மேலீட்டால் வியர்வை மிகுந்தது. சிவனின் மூன்றாவது கண்ணில் இருந்து தோன்றிய ஓர் ஒளிக் கீற்று அம்பாளின் கையிலிருந்து வழிந்த வியர்வையின் வழியாக ஊடுருவும் போது அழகில்லாத, கோர உருவோடு அதிக சக்தி, அதிக வீரம் ஆகியவற்றின் வெளிப்பாடாக ஓர் உருவம் தோன்றியது. சிவனின் உக்கிரமும், சக்தியின் வீரமும் கொண்ட அவன் உக்கிர வீரன் எனப்பட்டான். அவன் வீரமாபுரிப் பட்டினத்தை ஆண்டதுடன், மனிதர்களுக்கும், அனைத்து ஜீவராசிகளுக்கும் அல்லல் விளைத்து வந்தான்.

கணப்பொழுது ஈசனின் கண் பொத்தி உலகை இருள் அடையச் செய்ததனால் அம்பாளுக்கு சாயா தோஷம் பீடித்தது. இறைவனிடமே பரிகாரம் வேண்டினாள் பார்வதி.

“தேவி, எதுவும் இவ்வுலகில் காரணமின்றி நடைபெறுவதில்லை. உலகம் இருண்டதும் அவ்வகையில் அடங்கும். நீ ஒரு கடமை கருதியே செயல் புரிந்து உள்ளாய். பாவக் கழுவாயாக இயற்கை நியதிப் படி நீ காசி சென்று அன்னபூரணியாக அன்னதானம் செய்து, பின்னர் வீரமாபுரிப் பட்டினம் சென்று தவம் செய். அவ்விடம் நீ செய்யப் போகும் செய்கையால் உன் புகழ் விளங்கி அப்பட்டினமும் உன் பெயர் விளங்க சிறப்புடன் திகழும்” என்றார்.

பராசக்தி, காசியில் அன்னப்பூரணியாக அன்னதானம் முதலிய அறச்செயல்கள் பல புரிந்தபிறகு மரகதமணிப் பல்லக்கில் பச்சை ஒளி வீசி எழில்வடிவோடு அஷ்ட லட்சுமிகள் உடன் வர, அருந்ததி, தேவ மாதர்கள், கங்கை அம்மன், வேங்கை அம்மன், விநாயகர், முருகர், பூத கணங்கள் பரிவாரங்களுடன் புழுதிக் கிளம்ப வீரமாபுரிப் பட்டினம் நோக்கி வந்து பசுமைசூழ்ந்த பகுதியில் ஒரு பாறையின் மேல் வந்து நின்றாள் அம்மை.

அவள் கிளம்பி வரும் போது ஏற்பட்ட புழுதி வீரமாபுரிப் பட்டினத்தின் மாட மாளிகை கூட கோபுரம் ஆகியவற்றைப் பாழ் படுத்தியதால் வெகுண்ட உக்கிரவீரன், அக்னிவீரன் உட்பட ஆறு வீரர்களை அனுப்பி அம்பாளை தொடர்ந்து செல்ல விடாமல் தடுத்து அழிக்கக் கூறினான்.

அக்னி வீரன், அனியந்திரவீரன், தக்கபாதாளவீரன், தனதந்திரன், இக்கணவீரன், எழில்கணவீரன் ஆகியோர் வந்து முருகர், விநாயகரை தூக்கி வீசி கடும் யுத்தம் செய்தனர். அம்பாள் அண்ணன் திருமாலை துணைக்கழைத்தாள். அவரோ தன் தண்டத்தையும் மஞ்சள் நீரையும் அம்பாளிடம் தந்தார். மஞ்சள் நீரை தெளித்து நாராயண தண்டத்தால் ஆறு முறை பூமியில் தட்ட, செம்முனி, கருமுனி, முத்துமுனி, லாடமுனி, வேதமுனி, ஜடாமுனி என்னும் ஆறு முனிவர்கள் வந்து உக்கிர வீரனின் ஆட்களை வென்று கொன்றனர்.உக்கிரவீரன் தானே வெகுண்டு எழுந்து வந்து விண்ணிலும் மண்ணிலும் இருந்து மாயப்போர் புரிந்து அம்பாளின் படைகளை ஓட வைத்தான்.

அம்பாள் மஞ்சள் நீர் தெளித்து நாராயண தண்டத்தால் தட்ட பூமி வெடித்து வாழ் முனி தோன்றி எதிர்படை அரக்கர்களைக் கொன்றார். வாழ்முனி மூன்று நாட்கள் போர் செய்து களைத்து போனதால், ஈசனை தியானித்து அவனை வெல்லும் வரம் பெற்று, தானே வந்து போர் செய்தாள்.

ஏழாம் நாள் உக்கிர வீரனை தன் அம்புகளால் துளைத்தபோது, அவனது மனைவி வீராட்சி மாங்கல்யப் பிச்சை வேண்டவும், பச்சிலை தந்து குணம் ஆக்கினாள் அன்னை. உண்மை உணர்ந்த உக்கிர வீரன், அன்னை, ஆதி ஈஸ்வரனுடன் இவ்விடத்தில் இருந்து மக்கள் வேண்டுவதை அருள வேண்டும் எனவும், தான் ஏவலனாக இருந்து பணி செய்வதாகவும் வேண்டினான். அம்பாள் தவம் புரிந்த போது, எதிரில் ஏவலனாக உக்கிர வீரனும், வாழ்முனியும் தன் பரிவாரங்களுடன் காவல் காத்தனர். பின்னர் தன் தோஷம் நீங்கப்பெற்ற அன்னை சிவனை சேர்ந்தாள்.

ஈசன், ஆதியில் முதன்முதலில் லிங்க வடிவில் வந்து நிலை பெற்ற, தலம் என்ற காரணப் பெயரொடு மன்னாதீஸ்வரன் எனப்படுகிறார். அன்னை பச்சையம்மனாக அருள்பாலிக்கிறாள். ஆடி ஐந்தாம் வெள்ளிக் கிழமை உக்கிர வீரனுடன் சண்டையிட்டு நிலைப்பெற்ற இடமே திருமுல்லைவாயில் ஆகும். அதனால் அனைத்து ஆடி, தை வெள்ளிக் கிழமைகளில் பச்சையம்மனை வழிபட்டு மேன்மையான வாழ்க்கையைப் பெறலாம். இத் திருக்கோவில், சென்னை – ஆவடி சாலையில் அம்பத்தூருக்கு அடுத்து உள்ளது.



Leave a Comment