திருச்செந்தூரில் ஆவணித் திருவிழாவில் குடவருவாயில் தீபாராதனை


திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோயில் ஆவணி திருவிழாவின் ஐந்தாம் திருநாளை முன்னிட்டு குடவருவாயில் தீபாராதனை நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

இக்கோயிலில் கடந்த ஆக. 30-ம் தேதி ஆவணி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி, நாள்தோறும், காலை, மாலை வேளைகளில் சுவாமி, அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 5-ம் திருவிழாவை முன்னிட்டு திங்கள்கிழமை காலை மேலக்கோயிலில் இருந்து சுவாமி குமரவிடங்கப்பெருமான் வெள்ளி யானை வாகனத்திலும், அம்மன் வெள்ளிச்சரப வாகனத்திலும் எழுந்தருளி வீதி உலா வந்தனர். மாலையில் மேலக்கோயிலில் சுவாமியும், அம்மனும் தனித்தனி தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளினர். தொடர்ந்து, இரவு 7.30 மணிக்கு குடவருவாயில் தீபாராதனை நடைபெற்று, சுவாமி, அம்மன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வரும் 8-ம் தேதி நடைபெறுகிறது. அன்று காலை 5.30 மணிக்கு தேரோட்டம் தொடங்குகிறது. பிள்ளையார் ரதம், சுவாமி தேர் மற்றும் அம்மன் தேர் திருவீதி வலம் வந்து நிலையை அடைகின்றன.

விழாவை முன்னிட்டு திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் வரும் 5-ம் தேதி அதிகாலை 1 மணிக்கும், 7 மற்றும் 9-ஆம் தேதிகளில் அதிகாலை 4 மணிக்கும் மற்ற திருவிழா நாள்களில் வழக்கம்போல அதிகாலை 5 மணிக்கும் நடைதிறக்கப்பட்டு, தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெறும்.



Leave a Comment