கொடியேற்றத்துடன் தொடங்கிய வரதராஜர் ஆவணி விழா!


முருகனின் அறுபடை வீடுகளில் ஓன்றான பழனி முருகன் கோவிலின் உப கோவிலாக பாலசமுத்திரம் அகோபில வரதராஜ பெருமாள் கோவில் விளங்குகிறது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் ஆவணி பிரம்மோற்சவ விழா மிகச்சிறப்பாக கொண்டாடப்படும். அதன்படி இந்த ஆண்டுக்கான ஆவணி பிரம்மோற்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக கொடிப்படத்துக்கு சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது. 

அதன் பின்னர் அகோபில வரதராஜ பெருமாள், ஸ்ரீதேவி- பூதேவிக்கு சிறப்பு அலங்காரம், பூஜைகள் நடந்தது. அதையடுத்து காலை 9 மணிக்கு மேல் கொடியேற்றி வைக்கப்பட்டு திருவிழா தொடங்கியது. விழாவில் கோவில் இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர் செந்தில்குமார், மேலாளர் உமா மற்றும் கோவில் அதிகாரிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

11 நாட்கள் நடக்கும் இந்த திருவிழாவின் 7-ம் நாளான வருகிற 28-ந்தேதி மாலை 4.30 மணிக்கு மேல் திருக்கல்யாண நிகழ்ச்சி நடக்கிறது. 9-ம் நாளான 30-ந்தேதி காலை 7.30 மணிக்கு மேல் தேரேற்ற நிகழ்ச்சியும், 8.15 மணிக்கு மேல் திருத்தேர் வடம்பிடித்தல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. ஆவணி பிரம்மோற்சவ விழாவையொட்டி தினசரி காலை 7 மணிக்கு வரதராஜ பெருமாள், ஸ்ரீதேவி-பூதேவியுடன் சப்பரத்தில் உலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது. அதே போல் நாள்தோறும் இரவு 7 மணிக்கு பவளக்கால் சப்பரம், அனுமார், சிம்மம், கருடன், அன்னம், குதிரை, சேஷம் ஆகிய வாகனங்களில் சுவாமி புறப்பாடாகி திருஉலா வரும் நிகழ்ச்சி நடைபெறும். இத்திருவிழாவில் கலந்து கொண்டு பெருமாள் அருளைப் பெற எண்ணற்ற பக்தர்கள் வந்தவண்ணமுள்ளனர்.



Leave a Comment