பதவி உயர்வு தரும்...ஆரண்ய சுந்தரேஸ்வரர்!


நாகை மாவட்டம் திருவெண்காடு சிவாலய மேற்கு கோபுர வாசலில் இருந்து, மேற்கே இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது ஆரண்ய சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் சோழ பெருவள நாட்டின் காவிரியின் வடகரை திருத்தலங்களில் 12-வது தலம் கீழை திருக்காட்டுப்பள்ளி. இத்தலத்திற்கு ‘ஆரண்யஸ்வரம்’ என்ற பெயரும் உண்டு. இங்குள்ளது ஆரண்ய சுந்தரேஸ்வரர் திருக்கோவில். இறைவனின் திருநாமம் ஆரண்ய சுந்தரேஸ்வரர். இறைவியின் திருநாமம் அகிலாண்டேஸ்வரி என்பதாகும். இறைவியின் இன்னொரு பெயர் அகிலாண்டநாயகி.

ஆலயம் மேற்கு திசை நோக்கி அமைந்துள்ளது. முகப்பை தாண்டி உள்ளே நுழைந்ததும், நீண்ட பிரகாரம் காணப்படுகிறது. அதன் நடுவே பலிபீடமும், நந்தியும் இருக்க, இடதுபுறம் இரண்டு சிவலிங்கங்கள் உள்ளன. பிரம்மேசர், முனி ஸ்ரீசர் என்ற அந்த இரண்டு சிவ லிங்கங்களை அடுத்து முருகப் பெருமான் சன்னிதி உள்ளது. முருகப்பெருமான் வள்ளி தெய்வானையுடன் நின்ற கோலத்தில் இங்கு அருள்பாலிக்கிறார். வடக்கு பிரகாரத்தில் சண்டீஸ்வரர் சன்னிதி உள்ளது. ஆலய தலவிருட்சம் பன்னீர் மரம். கிழக்கு பிரகாரத்தில் பைரவர், சண்டீஸ்வரர், சூரியன் திருமேனிகள் இருக்கின்றன. தெற்கு பிரகாரத்தில் தட்சிணாமூர்த்தி ஆறு முனிவர்கள் சூழ காட்சி தருகிறார். அவர் அருகே சுவற்றில் மன்னன் ஒருவன் சிவபெருமானை பூஜை செய்யும் கற்சிற்பம் அழகுற வடிக்கப்பட்டுள்ளது.

மேற்கு திருச்சுற்றில் கற்கட மகா கணபதி உள்ளார். நண்டு பூஜித்தகணபதி இவர். இவரது பீடத்தில் நண்டு உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. கடக ராசிக்காரர்கள் இந்த விநாயகருக்கு, அபிஷேக ஆராதனைகள் செய்து வழிபட்டால், அவர்களுக்கு ஏற்பட்ட தோஷங்கள் விலகும் என்பது நம்பிக்கையாக உள்ளது.இந்த விநாயகரை அடுத்து இரட்டை லிங்கம் உள்ளது. இந்த இரண்டு லிங்கங்களும் இணைந்து காணப்படும் அமைப்பு சிறப்பானது. இந்த இரட்டை லிங்கத்தை அபிஷேகம் செய்து ஆராதித்து வழிபட்டால், இழந்த பதவியை மீண்டும் பெறலாம் என்று கூறுகிறார்கள். சுமார் 1000 ஆண்டுகள் பழமையான இந்த ஆலயம், சம்பந்தரால் பாடப்பெற்ற தலம் ஆகும். இத்திருத்தலத்தில் வந்து தரிசிப்பவர்களுக்கு பதவி உயர்வும், இழந்த பதவியை மீண்டும் அடையும் அருளும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.



Leave a Comment