மதுரை சுந்தரேசுவரருக்கு..பட்டாபிஷேகம்!


மதுரை ஆவணிமூலத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான சுந்தரேசுவருக்கு பட்டாபிஷேகம் அளிக்கும் நிகழ்ச்சி நாளை (21-08-2018) மாலை நடைபெறுகிறது.இத்திருவிழாவானது ஆண்டுதோறும் சுந்தரேசுவரரின் திருவிளையாடலை மையமாக வைத்து நடைபெற்று வருகிறது. இந்த விழாவின் நான்காம் நாளான சனிக்கிழமை காலை தங்கச் சப்பரத்தில் அம்மனும், சுந்தரேசுவரர் பிரியாவிடையுடனும் எழுந்தருளினர்.

தொடர்ந்து காலையில், கோயில் இரண்டாம் பிரகாரத்தில் தருமிக்கு பொற்கிழி அளித்த லீலை சிவாச்சாரியார்களால் பாடப்பெற்று பூஜைகள் நடைபெற்றன. பின்னர், ஆவணி மூல வீதிகளில் சுவாமி, அம்மன் உலா வந்தனர். கோயில் மீனாட்சி நாய்க்கர் மண்டபத்தில் தங்கிய பின்னர், மாலையில் சித்திரை வீதிகளில் வலம் வந்து, வடக்கு ஆவணிமூல வீதியில் உள்ள ராமசாமி பிள்ளை மண்டபத்தில் எழுந்தருளி அருள்பாலித்தனர்.இரவில், சுவாமி தங்கச் சப்பரத்திலும், அம்மன் யானை வாகனத்திலும் எழுந்தருளி, ராமசாமி பிள்ளை மண்டபத்திலிருந்து புறப்பாடாகி கோயிலை அடைந்தனர்.

ஞாயிற்றுக்கிழமை காலை, உலவாக்கோட்டை அருளிய லீலை நடைபெறுகிறது, இரவில், சுவாமி பிரியாவிடையுடன் நந்திகேஸ்வரர் வாகனத்திலும், அம்மன் யாளி வாகனத்திலும் ஆவணி மூல வீதிகளில் வலம் வருகின்றனர்.திருவிழாவின் முக்கிய நாளான நாளை (செவ்வாய்கிழமை) காலை தங்கப் பல்லக்கில் ஆவணி மூல வீதி, மேலமாசி வீதி வழியாக வலம் வரும் சுந்தரேஸ்வர், அம்மன், இம்மையில் நன்மை தருவார் கோயிலில் எழுந்தருள்வர். அங்கு, வளையல் விற்ற லீலை நடைபெறும்.

பின்னர் மாலையில் அங்கிருந்து சுவாமி, அம்மன் புறப்பாடாகி, மேலமாசி வீதி, மேலக்கோபுரத் தெரு, தானப்பமுதலியார் அக்ரஹாரம், வடக்காவணிமூல வீதி வழியாக திருக்கோயிலில் எழுந்தருள்வர். பின்னர் சுவாமியிடமிருந்து செங்கோலை பெற்று, சகல விருதுகளுடன் சுவாமி சன்னதி இரண்டாம் பிரகாரத்தை வலம் வந்து மீண்டும் சுவாமியிடம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறும். இந்த சிற்ப்புமிக்க விழாவில் கலந்து கொள்ள எண்ணற்ற பக்தர்கள் இத்திருத்தலத்திற்கு வந்த வண்ணமுள்ளனர்.



Leave a Comment