மதுரை மீனாட்சி கோவிலில்...ஆவணி மூலத்திருவிழா!


மதுரையின் பிரசித்திப்பெற்ற மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில் ஆண்டு தோறும் ஆவணி மாத திருவிழா விமர்சியாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்த வருடத்திற்கான ஆவணி மூலத் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதன்படி காலையில் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு அபிஷேக ஆராதனைக்கு பின்னர் சுவாமி சன்னதியில் உள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து விசே‌ஷ தீபாராதனைகள் நடைபெற்றன.

தொடர்ந்து ஒவ்வொரு நாளும் சுவாமியின் திருவிளையாடல் வைபவங்கள் விழாவாக நடைபெறுகிறது. தினமும் மீனாட்சி - சுந்தரேசுவரர் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். பின்னர் 15-ந்தேதி கருங்குருவிக்கு உபதேசம் செய்த கோலத்தில் சுவாமி காட்சி அளிக்கிறார். அதன் பின்னர் ஆவண மூல வீதிகளில் மீனாட்சி அம்மனுடன் வலம் வருகிறார். மறுநாள் (16-ந்தேதி) நாரைக்கு முக்தி கொடுத்தல், 17-ந்தேதி மாணிக்கம் விற்ற திருவிளையாடல், 18-ந்தேதி தருமிக்கு பொற்கிழி அளித்த வைபவம் என தொடர்ந்து ஆவணி மூலத்திருவிழா வெகு விமரிசையாக நடைபெற உள்ளது.

தினசரி இரவில் சுவாமி-அம்பாள் பல்வேறு வாகனத்தில் வீதிஉலா செல்கின்றனர். 20-ந் தேதி மாலை திருஞானசம்பந்தர் சைவ சமயத்தை நிலை நாட்டிய லீலை நிகழ்த்திக் காட்டப்படுகிறது. 21-ந் தேதி சுந்தரேசுவரர் வளையல் வியாபாரியாக வந்து சாபத்தின் பயனாக மதுரையில் பிறந்த ரிஷி பத்தினிகளுக்கு வளையல் அணிவித்து சாபவிமோசனம் அளிக்கும் வைபவம் நடக்கிறது. அன்று இரவு வீதிஉலா முடிந்து கோவி லுக்கு வரும் சுந்தரேசுவரருக்கு ஆறுகால் பீடத்தில் இரவு 7.30 மணிக்கு கும்பலக்கனத்தில் பட்டாபிஷேகம் நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்வாக பிட்டுக்கு மண் சுமந்த லீலை பூஜையானது 23-ந் தேதி நடைபெறுகிறது. அதன் பின்னர் 26-ந்தேதி பொற்றாமரை குளத்தில் தீர்த்தவாரியுடன் விழா நிறைவுபெறுகிறது. இந்த தெய்வீக நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு அம்பாளின் அருளைப் பெற திரளான பக்தர்கள் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருத்தலத்திற்கு வந்த வண்ணமுள்ளனர்.



Leave a Comment