ராமநாதசுவாமி கோவில்...ஆடித்திருவிழா நாளை தொடக்கம்!


இந்தியாவில் உள்ள 12 ஜோதிர்லிங்கத் தலங்களுள் ஒன்றாகக் கருதப்படும் ராமேசுவரம் ராமநாத சுவாமி திருக்கோவிலில் ஆண்டுதோறும் ஆடித் திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம்.அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா நாளை (04-08-2018) காலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

விழாவின் முக்கிய நிகழ்வாக பர்வதவர்த்தினி அம்மன் சன்னதி முன்பு அமைந்துள்ள தங்க முலாம் பூசப்பட்ட கொடி மரத்தில் காலை 10.11 மணி முதல் 12 மணிக்குள் கொடியேற்றப்பட்டு விழா தொடங்கபட உள்ளது.தொடர்ந்து 17 நாள்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியான 11-ந் தேதி அமாவாசையை முன்னிட்டு சுவாமி அம்மன் எழுந்தருளி அக்னி தீர்த்தக்கடலில் பக்தர்களுக்கு தீர்த்தம் வழங்கும் நிகழ்ச்சியும், வருகிற 12-ந் தேதி பர்வதவர்த்தினி அம்மன் தேரோட்டம் நிகழ்ச்சியும், 14-ந் தேதி சுவாமி, அம்மன் தபசு மண்டகப்படிக்கு எழுந்தருளும் நிகழ்ச்சியும், 15-ந் தேதி இரவு 7 மணி முதல் 8 மணிக்குள் ராமநாத சுவாமி, பர்வதவர்த்தினி அம்மனுக்கும் கோவில் தெற்கு பகுதியிலுள்ள திருக்கல்யாண மண்டபத்தில் திருக்கல்யாணம் நிகழ்ச்சியும் நடைபெறும்.

திருவிழாவை முன்னிட்டு 17 நாட்களும் சுவாமி அம்மன் தினசரி ஒவ்வொரு வாகனத்தில் அலங்காரத்துடன் எழுந்தருளி 4 ரத வீதிகளிலும் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். தொடர்ந்து திருவிழா நாட்களில் தினசரி இரவு ஆன்மிக இன்னிசை நிகழ்ச்சிகளும்,ஆன்மிக பட்டிமன்றங்கள் நிகழ்ச்சியும் நடைபெறுகின்றன. நிகழ்ச்சிளில் கலந்து கொள்ள எண்ணற்ற பக்தர்கள் இத்திருத்தலத்திற்கு வந்த வண்ணமுள்ளனர்.



Leave a Comment