ஆடிப்பெருக்கை முன்னிட்டு...காவிரியம்மனுக்கு சிறப்பு பூஜைகள்!


தமிழகத்தில் காவிரி கரையோரத்தில் அமைந்துள்ள முதல் சிவாலயமாக தேசநாதேஸ்வரர் திருக்கோவில் ஒகேனக்கல் பகுதியில் அமைந்துள்ளது. குருச்சேத்திர போர் முடிந்த பின்னர் போரினால் ஏற்பட்ட பாவங்களை போக்க பஞ்சபாண்டவர்களை அகத்தியரின் கமண்டலத்தில் அடைபட்டு கிடக்கும் பொன்னி நதியில் குளிக்க வேண்டும் என்று கிருஷ்ண பகவான் கூறினார். அப்போது அகத்தியரின் கமண்டலத்தில் இருந்த பொன்னி நதியை விடுவிக்க வேண்டி பஞ்சபாண்டவர்கள் விநாயகரை வழிபட்டனர். அப்போது விநாயகர் காக்கை வடிவில் குடகுமலைக்கு சென்று அகத்தியரின் கமண்டலத்தில் இருந்த பொன்னி நதிநீரை தென்திசை நோக்கி தள்ளிவிட்டார். தண்ணீர் பெருக்கெடுத்து ஆறாக ஒடியது தென்னாடு செழிக்க உருவான இந்த நதிக்கு காவிரி என்று அகத்திய மாமுனிவர் பெயர் சூட்டினார். பொன்னி நதி, காவிரி என்று பெயர் பெற்ற இடமான ஒகேனக்கல்லில் ஆற்றங்கரையில் ஒரு சிவலிங்கத்தை அகத்தியர் பிரதிஷ்டை செய்தார். அந்த லிங்கத்தை பிரம்மதேவர் தினமும் வழிபட்டதாக இத்திருத்தலவரலாறு கூறுகிறது. மேலும் காவிரித்தாய்கான தனிக்கோயில் இங்கு தான் உள்ளது என்பது மேலும் சிறப்பு.

மேலும் குருச்சேத்திர போரில் பயன்படுத்திய ஆயுதங்களை பாண்டவர்கள் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கழுவி பாவங்கள் போக நீராடிய நாள் ஆடி மாதம் 18-ம் நாள் என்றும் வணங்கப்படுகிறது. அதன்படி நாளை (03-08-2018) ஆடி 18 பண்டிகையின்போது காவேரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் மற்றும் திருவிழா நடக்கிறது. அப்போது காவிரி ஆறு உற்பத்தியாகும் இடமான கர்நாடக மாநிலத்தை சேர்ந்த பக்தர்கள் அம்மனுக்கு தாய்வீட்டு சீதனமாக அரிசி, பருப்பு, வளையல், புடவை, ரவிக்கை மற்றும் அச்சுவெல்லம் ஆகியவற்றை கொண்டு வந்து படைத்து செல்லும் வழக்கம் இன்றளவும் கடைபிடிக்கப்படுகிறது. இந்த அருள் பொழியும் நிகழ்வுகளில் கலந்து கொள்ள எண்ணற்ற மக்கள் வருகின்றனர்.

 



Leave a Comment