பகவதியம்மன் கோயிலில் ஆடி களப பூஜை தொடக்கம்


கன்னியாகுமரி அருள்மிகு பகவதியம்மன் கோயிலில் ஆடி களப பூஜை தொடங்கியது. பிரசித்திப்பெற்ற இந்த பூஜை தொடர்ந்து 13 நாட்களுக்கு நடைபெறும்.

புகழ்பெற்ற பகவதியம்மன் கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிமாநில பக்தா்கள் வந்து செல்கின்றனா். இக்கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் முக்கிய பூஜைகளுள் ஒன்று ஆடி களப பூஜை.

அம்மன் அவதரித்த ஆடி பூரம் நட்சத்திரத்தையொட்டி தொடா்ந்து 13 நாள்கள் அம்பாளை குளிர்விப்பதற்காக இந்த பூஜை நடத்தப்படுகிறது. இப்பூஜையை முன்னிட்டு அதிகாலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனம், நிர்மால்ய பூஜை நடைபெற்றது. அதிகாலை 5 மணிக்கு அபிஷேகம், காலை 6.15 மணிக்கு தீபாராதனை, காலை 8 மணிக்கு ஸ்ரீபலி தொடா்ந்து நிவேத்ய பூஜை ஆகியன நடைபெற்றது.

ஆடி களப பூஜையின் முதல் நாள் நிகழ்வுகள் திருவாவடுதுறை ஆதீனம் மடத்தின் சார்பில் நடத்தப்பட்டது. இதையொட்டி திருவாவடுதுறை 24-வது குரு மஹா சன்னிதானம் ஸ்ரீல ஸ்ரீ அம்பலவாண தேசிக பராமாச்சாரிய சுவாமிகள் பகல் 10.30 மணிக்கு கோயிலுக்கு வந்தார்.

பின்னா் ஆதீனம் கொண்டு வந்த தங்க குடத்தில் களபம் நிரப்பப்பட்டு கோயில் தந்திரி சங்கரநாராயணரூ அம்பாளுக்கு அபிஷேகம் செய்தார். இதைத்தொடா்ந்து பிற்பகல் 12.30 மணிக்கு அன்னதானம், மாலை 6.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, இரவு 7 மணிக்கு புஷ்பாபிஷேகம், 8.15 மணிக்கு பல்லக்கில் அம்பாள் எழுந்தருளி கோயில் வலம் வருதல், தொடா்ந்து வெள்ளி சிம்மாசனத்தில் தாலாட்டு, அத்தாளபூஜை, ஏகாந்த தீபாராதனை ஆகியன நடைபெற்றது.

ஆடிகளப பூஜையின் நிறைவு நாளான ஆகஸ்ட் 11-ஆம் தேதி உதயஅஸ்தமன பூஜையும், அதிவாசஹோமம் நடைபெறும். ஆடிகளப பூஜைக்கு ஏராளமான பெண் பக்தா்கள் வருவார்கள் என்பதால் கோயில் நிர்வாகம் சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.



Leave a Comment