சங்கரன்கோயில் ஆடித்தபசு தேரோட்டம்


நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலில் உள்ள பிரசித்திபெற்ற சங்கரநாராயணர்-கோமதி அம்பாள் கோயிலில் ஆடித்தபசு திருவிழா தேரோட்டம் வெகுவிமர்சையாக நடைபெற்றது.

சங்கரநாராயணர் சுவாமி கோயிலின் ஆடித்தபசு திருவிழா கடந்த 17-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 12 நாள்கள் நடைபெறும் இந்தக் கோயிலின் முக்கிய நிகழ்வான ஆடித்தபசு காட்சி வரும் 27-ம் தேதி நடக்க உள்ளது.

சங்கரநாராயணர் கோயிலின் கொடியேற்றத்துக்குப் பின்னர், தினமும் காலையும் மாலையும் கோமதி அம்பாள் சிறப்பு அலங்காரத்துடன் வாகனங்களில் வீதி உலாவாக வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். திருவிழாவின் 8-ம் நாளில் கோமதி அம்பாள் வீணாகாணம் செய்தல் அலங்காரத்தில் எழுந்தருளி நான்கு ரதவீதிகளிலும் உலாவாக வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். அதைத் தொடர்ந்து வடக்கு மண்டகப்படியில் அம்பாள் எழுந்தருளினார். இரவில் ரிஷப வாகனத்தில் அம்பாள் எழுந்தருளினார்.

விழாவின் 9-ம் நாளான இன்று தேரோட்டம் நடைபெற்றது. அதிகாலையில் கோமதி அம்பாள் திருத்தேரில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதைத் தொடர்ந்து மண்டகப்படிதாரர்கள் சார்பாக அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. பின்னர், தேரோட்டம் தொடங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரின் வடத்தைப் பிடித்து இழுத்தனர்.



Leave a Comment