வினைகளை போக்கும் நெல்லை விஸ்வநாத செல்வி!


திருநெல்வேலி சந்திப்பிலிருந்து அரை கி.மீ. தொலைவிலுள்ள சிந்துபூந்துறையில் அமைந்துள்ளது.விஸ்வநாத செல்வி திருக்கோயில். நாகக்கன்னியின் பிறந்த சக்தியின் அம்சமான அஷ்ட காளியரில் ஆறாமவள் ஷெண்பகவல்லி என்ற செல்லியம்மன். என்றும் வடக்கு வாசல் செல்வி, செல்வியம்மன் என்றும் இவள் அருள்பாலிக்கிறார். மேலும் இக்கோவிலில் வீற்றிருக்கும் அம்மன் அஷ்ட காளியரில் பொறுமையானவளாய், ஆக்ரோஷம் கொண்டால் எளிதில் தணியாதவளாய் திகழ்கிறாள்

முன்னொரு காலத்தில் பொதிகை மலையிலிருந்து இறங்கி குற்றாலநாதர் கோயிலுக்கு வந்தாள். நந்திதேவன் உள்ளே அனுமதிக்கவில்லை. உடனே கொடிமரத்தில் வந்தமர்ந்தாள். அதன் பின் குற்றாலநாதர் கோயிலில் திருவிழா நடக்கும்போதெல்லாம் கொடியேற்றம் அன்று வாலிப வயதுடைய யாராவது ஒருவர் இறந்து போவது, மூன்று ஆண்டுகளாக தொடர்ந்தது. உடனே கேரள நம்பூதிரிகள் வந்து பூஜித்ததில் கொடிமரத்திலிருக்கும் செல்வியம்மன்தான் கொடியேற்றத்தின் போது நடக்கும் துர்மரணங்களுக்கு காரணம் என தெரிய வந்தது. அவர்களின் ஆலோசனைப்படி ஒரு மந்திரவாதியை வரவழைத்து செல்வியம்மனை மதிமயக்கி பொன்னாலான செம்பில் அடைத்து குற்றால மலையில் செண்பக மரங்கள் அடர்த்தியாக ஓங்கி வளர்ந்திருந்த பகுதியில் குழித்தோண்டிப் புதைத்தனர்.

பின்னர் ஒரு காலகட்டத்தில் மழை அதிகமாகப் பெய்ததால், குழியில் புதைக்கப்பட்ட பொற்சொம்பு மேலே வந்தது. அப்போது செங்கோட்டையை சேர்ந்த மூப்பனார் வகையறா ஒருவர் தனது வீட்டுக்கு நிலை விடுவதற்காக மரம் வெட்ட செண்பக மலைக்கு வந்தார். அப்போது செம்பு திறபட அதிலிருந்த அம்மன் அவரிடம் இங்கு எனக்காக கோவில் எழுப்பு என கட்டளையிட்டது. அதன்படி அவர் அங்கு திருத்தலம் அமைத்ததாக தல வரலாறு கூறுகிறது. பின்னொரு சம்பவத்தில் திருநெல்வேலி வாழ்ந்து வந்த காவி விஸ்வநாதர் என்பவர் தான் வீட்டுக்கு கிரகப் பிரவேசம் செய்வதற்காக கங்கையிலிருந்து தண்ணீர் எடுத்து வந்தார். பின்னர் செண்பக அருவியிலிருந்து நீரை எடுத்து வரும் போது அம்மன் அவரிடம் தன் திருவிளையாட்டை நிகழ்த்தி பின் நீர் வழங்கியதாக புராணக் கதை கூறுகிறது.

இக்கோயிலில் விஸ்வநாத செல்வி தனி சந்நதியில் வடக்கு நோக்கி அருள்பாலிக்கிறாள். அடுத்த சந்நதியில் சந்தனமாரியம்மனும், துர்க்கையும் அமர்ந்துள்ளனர். கோயிலில் துவார கணபதி வடக்கு நோக்கி கன்னி மூலையில் அமர்ந்துள்ளார். செல்வி அம்மனுக்கு பூஜை செய்வது போல கருப்பசாமி கையில் மணியுடன் தெற்கு நோக்கி நிற்கிறார். ஒரு குடும்பத்துக்கான கோயில் பின்னர் ஒரு சமுதாயக் கோயிலாக மாறியது. இக்கோயிலில் பரிவார தெய்வங்களாக பைரவர், சுடலைமாடன், பிரம்மராக்கு சக்தி, பேச்சியம்மன் ஆகியோர் அருள்பாலிக்கின்றனர். வைகாசி மாதம் இரண்டாம் செவ்வாய் அன்று நடைபெறும் திருமாலை பூஜையும், நவராத்திரி விழாவும் இக்கோயிலில் முக்கிய விழாக்களாக கொண்டாடப்படுகிறது.



Leave a Comment