நடராஜர் கோயிலில் ஆனி திருமஞ்சன தேரோட்டம்


ஆனி திருமஞ்சன தரிசன விழாவின் ஒரு பகுதியாக சிதம்பரம் நடராஜர் கோயிலில் நேற்று தேரோட்டம் நடைபெற்றது. ‘சிவ சிவ’ என்ற முழக்கத்துடன் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்தனர்.

பஞ்ச பூத தலங்களில் ஆகாய தலத்திற்கு பெயர் பெற்ற இடமாக சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனி திருமஞ்சன விழா கடந்த 12-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் கடந்த 16-ந் தேதி இரவு தெருவடைச்சான் உற்சவம் நடந்தது.

இந்த நிலையில், நேற்று ஆனிதிருமஞ்சன தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டி, அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு மூலவருக்கு ரகசிய பூஜை நடந்தது. இதனை தொடர்ந்து, சிவகாமசுந்தரி சமேத ஆனந்தநடராஜருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை நடந்தது. காலை 7 மணிக்கு மூலவராகிய ஆனந்த நடராஜர், சிவகாமசுந்தரி அம்பாள் ஆகியோர் சிறப்பு அலங்காரத்தில் சித்சபையில் இருந்து கனக சபைக்கு எழுந்தருளினர்.

இதையடுத்து சுவாமி புறப்பாடாகி, கோவில் உட்பிரகார வலம் வந்து, தட்சணாமூர்த்தி சன்னதி முன்பு எழுந்தருளினர். அங்கு நடராஜர், சிவகாமசுந்தரி அம்பாள் முன்னும், பின்னுமாக நடனமாடியவாறு பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.

 தேர் கீழவீதி, தெற்குவீதி, மேலவீதி, வடக்கு வீதி வழியாக இரவு 7 மணிக்கு நிலையை அடைந்தது. ஒவ்வொரு வீதியிலும் மண்டகபடிதாரர்கள் மண்டகபடி செய்தனர். சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது. மேலவீதியும், வடக்கு வீதியும் சந்திக்கும் இடத்தில் பருவத ராஜாகுல மரபினர் ஸ்ரீநடராஜர், சிவகாமசுந்தரி அம்பாள் சுவாமிகளுக்கு பட்டு சாத்தி மண்டகபடி செய்தனர். பின்னர் சுவாமிகள் தேரில் இருந்து இறங்கி கோயிலுக்கு செல்லும் நிகழ்ச்சி நடந்தது. இரவு 8 மணிக்கு ஆயிரங்கால் முன் முகப்பு மண்டபத்தில் ஸ்ரீ சிவகாமசுந்தரி அம்பாள் ஸமேத நடராஜ மூர்த்திக்கு ஏக கால லட்சார்ச்சனை நடந்தது.



Leave a Comment