ஒரே பாறையில் உருவான கோவில்


பழங்காலத்தில் கட்டப்பட்ட பெரும்பாலான கோவில்கள் ஒன்றிலிருந்து மற்றொன்று பல்வேறு தனித்தன்மையுடனும், தன்னுள் பல்வேறு அதிசயங்களை உள்ளடக்கியதாகவும் இருக்கும். தமிழகத்தில் உள்ள பழமையான கோவில்களில் பொதுவாகவே நமக்கு தெரியாத பல அதிசய நிகழ்வுகள் புதைந்து இருக்கிறது. அப்படியான அதிசயங்களை அறியும்போது எப்படி இதுபோன்ற அதிசயங்கள் நிகழ்கின்றது என்ற கேள்வி எல்லோர் மனதிலும் எழும்.


இவ்வாறு பிரம்மிப்பூட்டும் ஓர் அதிசய ஆலயத்தை பற்றி தான் இங்கு காணப் போகிறோம். கோவில்களை கட்டப்பட்டு கேட்டிருக்கிறோம், ஆனால் பாறையினால் ஒரு கோவில் செதுக்கப்பட்டு உள்ளது என்றால் அது மிகையல்லவா?
கழுகுமலை வெட்டுவான் கோவில், தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டத்தில், கோவில்பட்டியிலிருந்து 22கி.மீ தொலைவில் கழுகுமலை என்னும் பேரூராட்சியில் அமைந்துள்ள ஒரு சிறிய கோவில் ஆகும்.


தமிழகத்தில் உள்ள மிகச்சிறந்த குகைகோவில்களில் கழுகுமலை வெட்டுவான் கோவிலும் ஒன்றாகும். இக்கோவில் 8ஆம் நூற்றாண்டில் பாண்டிய மன்னர்களால் செதுக்கப்பட்டதாகும்.
மலையின் ஒரு பகுதியில் பாறையை வெட்டி, அந்த ஒற்றைப் பாறையிலேயே ஒரு கோவிலைச் செதுக்கி இருக்கிறார்கள். அதுதான், ‘வெட்டுவான் கோவில்” என்று அழைக்கப்படுகிறது. இத்தகைய கோவில், தமிழகத்திலேயே இது ஒன்றுதான் என்பது, கழுகுமலையின் மாபெரும் சிறப்பு ஆகும்.
கழுகுமலையில் ஏறி நடந்து செல்லும்போது இக்கோவில் கண்ணுக்குத் தெரியாது. சற்றே தாழ்ந்த தளத்தில் சுமார் 10 அடி இறக்கத்தில் இறங்கியே இக்கோவிலுக்குச் செல்ல முடியும்.


இப்பாறைகளில் எண்ணற்ற புடைப்புச் சிற்பங்களையும், மிகவும் நுணுக்கமான சிற்பங்களையும் கொண்டு இக்கோவில் அமைந்துள்ளது.
மலையின் நடுவே ஓரிடத்தில், வரிசையாகப் பல சிலைகள் செதுக்கப்பட்டு உள்ளன. சமணர்கள், தங்கள் குரு, தாய், தந்தை ஆகியோரின் நினைவாக, இங்கே சமண தீர்த்தங்கரர்களின் சிலைகளைச் செதுக்கி உள்ளனர். இச்சிற்பங்களின் கீழே, அவற்றைச் செதுக்கியவர்களின் பெயர்கள் தமிழ் வட்டு எழுத்துக்களில் பொறிக்கப்பட்டு உள்ளன.


இந்தக் கோவிலின் பணி முழுமையாக நிறைவு பெறவில்லை. இதில், கருவறையும், அர்த்த மண்டபமும் உள்ளன. கோவில் கோபுரத்தில், உமா மகேஷ்வரர், தட்சிணாமூர்த்தி, திருமால், பிரம்மா வடிவங்கள் காணப்படுகின்றன. விமானத்தின் மேற்குத்திசையில் நரசிம்மரும், வடக்கில் பிரம்மனும் காட்சி தருகின்றனர்.


விமானத்தின் நான்கு மூலைகளில் நந்தி சிலைகளும், இவற்றுக்குக் கீழே யாளி வரிகளும், கபோதகமும் உள்ளன.
கழுகுமலை கடினமான பாறை அடுக்குகளால் ஆனது. இவ்விடத்தில் சிற்பங்களைச் செதுக்கியிருக்கிறார்கள் என்றால் முன்னோர்களின் உழைப்பும், தொழில்நுட்பமும் வியப்புக்குரியதாகும்.



Leave a Comment