தென் திருப்பதி பெருமாள் மலை


திருச்சி மாவட்டம் துறையூர் பெரம்பலூர் சாலையில் துறையூரில் இருந்து 5 கி.மீ. தூரத்தில் உள்ளது பெருமாள்மலை. இங்கு கொல்லிமலை மற்றும் பச்சைமலை தொடரில் சுமார் 1800 அடி உயரத்தில் பிரசித்திபெற்ற பிரசன்ன வெங்கடாஜலபதி கோயில் உள்ளது.

இத்திருத்தலம் திருப்பதிக்கு ஒப்பானது. அதனாலேயே தென்திருப்பதி என்ற சிறப்பு பெயர் பெற்றது. திருப்பதியில் உள்ளதுபோல் கருவறையில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத பிரசன்ன வெங்கடாஜலபதி திருமண கோலத்தில் கிழக்கு நோக்கிய திருமுக மண்டலத்துடன் சேவை சாதிக்கிறார்.

இதேபோல் அலமேலு மங்கை தாயார் தனி சன்னதி கொண்டு அருள்பாலிக்கிறார். அடிவாரத்தில் கோவிந்தராஜப் பெருமாள் சன்னதி, பிரமாண்டமான பஞ்சமுக ஆஞ்சநேயர் சன்னதி மற்றும் ஏழுமலைகள் உள்ளது.

திருப்பதிக்கு அருகில் நாகலாபுரம் என்று ஊர் உள்ளது. அதைப்போல் இங்கிருந்து 5 கி.மீ. தொலைவில் நாகலாபுரம் என்ற கிராமம் உள்ளது. இவற்றையெல்லாம் ஒத்திருப்பதால் தென்திருப்பதி என்றழைக்கப்படுகிறது.

தலவிருட்சம் இலந்தை மரம், ஏழு ஸ்வரங்களின் ஒலி எழுப்பும் கருங்கல் தூண்கள், தசாவதாரங்களை தூண்களில் கொண்ட தசாவதார மண்டபம், வசந்த மண்டபம், ஏகாதசி மண்டபம், எங்கும் இல்லாத நரசிம்மர் அவதாரம் மிக துல்லியமாக அமைக்கப்பட்டுள்ளது. இன்றும் பல சிறப்புகளை தன்னகத்தே கொண்ட பெருமாள் மலை கோயிலுக்கு அடிவாரத்தில் இருந்து நடந்து செல்ல 1564 படிக்கட்டுகள் உள்ளன.

தல வரலாறு:

ராஜராஜ சோழ மன்னனின் சந்ததியர் ஒருவரால் 11ம் நூற்றாண்டில் கட்டபட்டதாக தெரிகிறது. இம்மன்னன் தனது குருவின் உபதேசப்படி தான் இறைவனடி சென்று சேர ஏகாந்தமான இடத்தில் தவம் செய்யக்கருதி தனது ஆளுகைக்கு உட்பட்ட இப்பெருமாள் மலையில் இலந்தை மரத்தடியில் அமர்ந்து தவம் மேற்கொண்டான். இம்மன்னனின் தவத்தை மெச்சி சங்கு சக்கராயுதபாணியாக எம்பெருமாள் காட்சி தந்தருளினார்.

இம்மன்னனின் வேண்டுதலுக்கிணங்க எம்பெருமாள் தனக்கு வலதுபுறம் பெரியபிராட்டிக்கும் இடதுபுறம் இம்மன்னனையும் தவநாயகராக இருந்து வர அருள்பாலித்ததாக வரலாறு கூறுகிறது. இம்மன்னரே கருப்பண்ணார் என்றும் வீரப்பசுவாமி என்றும் போற்றப்பட்டு இன்றளவும் சிறப்புற வழிபடப்பட்டு வருகின்றனர். வேறெந்த வைணவத் திருத்தலத்திலும் இல்லாத சிறப்பாக கருப்பண்ணசுவாமி சன்னதியில் விபூதி பிரசாதமாக வழங்கப்படுகிறது.

மலைக்கோயிலில் தினமும் நித்தியபடி பூஜை நடத்தப்படும். வாரந்தோறும் சனிக்கிழமைகளில் சிறப்பு பூஜை நடைபெறும். பவுர்ணமி கிரிவலம் சிறப்பாக நடைபெறும். பெருமாள்மலையில் புரட்டாசி மாதத்தின் அனைத்து சனிக்கிழமைகளும் மிகவும் விஷேசமானது. இக்கோயிலில் 8க்கும் மேற்பட்ட கிராமமக்கள் வழிபாடு நடத்துகின்றனர். புரட்டாசி ஆரம்பித்தால் இந்த கிராமங்களின் தளுகை வந்த பின்னர்தான் சுவாமிகளுக்கு வழிபாடுதொடங்கும். கிராமமக்கள் தங்கள் விவசாயம் செழிக்க வேண்டி மலைபாதையில் விரித்துபோடப்பட்டிருக்கும் துணிகளில் கம்பு, சோளம் நெல் போன்ற நவதானியங்களை தூவிவருவர்.

இவ்வாறு செய்தால் விவசாயம் செழிப்படையும் என்பது ஐதீகம்.திருப்பதி ஏழமலையான் தனக்கு செலுத்த வெண்டிய நேர்த்திக்கடன்களை தானே பிரசன்னமாக எழுந்தருளி இத்திருத்தலமான பெருமாள்மலையில் செலுத்த வேண்டும் என திருவுளம் கொண்டார். அதனாலேயே ஆண்டுதோறும் புரட்டாசி சனிக்கிழமைகளில் சேவார்த்திகள் இங்குவந்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தி செல்கின்றனர். கோயில் காலை 5 மணி முதல் 12 வரையும், மாலை 4 முதல் இரவு 7 மணி வரை யும் நடை திறந்திருக்கும். வாகனங்கள் மூலம் மலைக் கோயிலை சென்றடைய சுமார் 5 கி.மீ. தூரம் தார்சாலையாக மலைப்பாதை அமைக்கப்பட்டுள்ளது.



Leave a Comment