குமரியில் திருப்பதி ஏழுமலையான் கோவில் கும்பாபிஷேகம்


கன்னியாகுமரியில் கட்டப்பட்டு வரும் திருப்பதி ஏழுமலையான கோவில் கும்பாபிஷேக விழா ஜூலை மாதம் 11-ந்தேதி நடத்த முடிவு செய்யப்பட்டு இருக்கிறது.

கன்னியாகுமரி விவேகானந்த கேந்திர வளாகத்தில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ரூ.47 கோடி செலவில் திருப்பதி வெங்கடாஜலபதி கோவில் கட்டப்பட்டு வருகிறது.

திருப்பதி ஏழுமலையான் வெங்கடாஜலபதி சன்னதி, பத்மாவதி சன்னதி, ஆண்டாள் சன்னதி, கருட பகவான் சன்னதி ஆகியவை கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதில் கருவறையில் உள்ள ஏழுமலையான் வெங்கடாஜலபதி பாதத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 14-ம் தேதி சித்திரை விஷூவை முன்னிட்டு அற்புத சூரியஒளி விழும் வகையில் கட்டப்பட்டுள்ளது.

மேலும், திருப்பதி கோவிலில் நடைபெறும் பிரம்மோற்சவம், புஷ்கரணி தீர்த்தவாரி, ரத உற்சவம், உள்ளிட்ட பல விழாக்கள் அதே நாட்களில் இங்கும் நடக்கும். கோவிலின் கீழ்தளத்தில் ஸ்ரீனிவாச கல்யாண அரங்கம், தியான அரங்கம் மற்றும் அலுவலகங்கள் கட்டப்பட்டுள்ளது. இதுதவிர தேரோடும் 4 மாட வீதி கட்டும் பணி நடந்து வருகிறது. அடுத்த கட்டமாக கோவிலில் பூஜை செய்யும் அர்ச்சகர்கள் தங்கும் வீடுகள், மூடிகாணிக்கை செலுத்தும் இடம், அன்னதான மண்டபம், கார் பார்க்கிங் வசதி, கழிப்பறை வசதி, இணைப்பு சாலைகள், அலங்கார தோரண நுழைவு வாயில், கோ சாலை, தெப்பக்குளம் போன்றவை அமைக்கும் பணி நடைபெற உள்ளது.

கருவறையில் அமைக்கப்பட உள்ள 6½ அடி உயர ஏழுமலையான் சிலை, 3½ அடி உயர பத்மாவதி சிலை, 3½ அடி உயர ஆண்டாள் சிலை, 3½ அடி உயர கருட பகவான் சிலை ஆகிய 4 சிலைகள் திருமலை திருப்பதியில் உள்ள தேவஸ்தான சிற்பகலை கல்லூரியில் வடிவமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த கோவிலில் முக்கிய பிரசாதமாக வழங்கப்படும் லட்டு திருப்பதி தேவஸ்தானத்தில் இருந்து கொண்டு வரப்பட்டு பக்தர்களுக்கு வினியோகிக்கப்பட உள்ளது. தற்போது, வெங்கடாஜலபதி கோவில் கட்டுமான பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதைதொடர்ந்து கோவில் கட்டுமான பணியை திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். ஜூன் மாதம் இறுதிக்குள் கட்டுமான பணிகள் அனைத்தையும் முடிக்க உத்தரவிட்டப்பட்டது. அதைதொடர்ந்து ஜூலை மாதம் 11-ந்தேதி கோவில் கும்பாபிஷேகம் நடத்தலாம் என்றும் முடிவு செய்யப்பட்டது.



Leave a Comment