சகல செல்வங்களையும் தரும் வெள்ளிக்கிழமை விரதம்....


வெள்ளிக்கிழமையன்று விடியற்காலையிலேயே எழுந்து, மஞ்சள் பூசி குளித்துவிட்டு நெற்றியிலே குங்குமப் பொட்டு வைத்துக்கொள்ளுங்கள். பசுஞ்சாணம் கரைத்த நீரால் வாசல் தெளியுங்கள். ஃப்ளாட்டில் வசிப்பவர்கள் சுத்தமான நீரை கொஞ்சமாகத் தெளித்து, வழுக்கிவிடாதபடி துடைத்துவிட்டு, அதன்மேல் அழகாக ஒரு கோலம் போட்டு, அதுக்கு செம்மண் பார்டர் போடலாம்.

வீடு முழுவதும் பெருக்கி, துடைத்து சுத்தப்படுத்திக்கொள்ளுங்கள். பூஜையறையையும் சுத்தமாக்கி தூய்மைப்படுத்திக்கொள்ளுங்கள். அங்கே தீபம் ஏற்றி, ஊதுவத்தி கொளுத்தி வைக்கலாம். சாம்பிராணிப் புகை போடலாம். வாசலில் மாவிலைத் தோரணம் கட்டி அழகுபடுத்தலாம்.

ஒட்டுமொத்தமாக வீடு முழுவதும் அன்றைக்குப் பளிச்சென்று இருப்பது நல்லது. அன்று முழுவதும் மஹாலக்ஷ்மி ஸ்லோகங்களைச் சொல்லிக்கொண்டே இருப்பது நலம்.

லக்ஷ்மி ஸ்லோகங்கள் மட்டுமில்லாமல், தெரிந்த அம்பாள் பாடல்களையும் சொல்லலாம். அன்று முழுவதும் எளிமையாக பால், பழம் என்று மட்டும் சாப்பிட்டு விரதமிருக்கலாம். முடியாதவர்கள் அல்லது அவரவர் உடல்நலத்தைப் பொறுத்து பகலில் ஒருவேளை மட்டும் உணவு எடுத்துக்கொள்ளலாம். இப்படி விரதம் மேற்கொண்டபிறகு தொடர்ந்து பதினோரு வெள்ளிக்கிழமைகளில் கடைபிடிக்கலாம். நடுவே ஏதேனும் காரணத்துக்காக ஏதாவதொரு வெள்ளிக்கிழமை முடியாமப் போனால், அதற்கடுத்த வெள்ளிக்கிழமையிலேர்ந்து தொடரலாம்.

ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மாலை நேரத்தில் பக்கத்துப் பெருமாள் கோயிலில் தாயாரை தரிசிப்பது முக்கியம். இதை முதல் வெள்ளிக்கிழமை விரதத்தன்றாவது செய்யவேண்டும்.

கோயிலுக்குப் போய் வந்தபிறகு, முடிந்த பிரசாதங்களை தயாரித்து, வீட்டு பூஜையறையில் மஹாலக்ஷ்மிக்கு நிவேதனம் செய்யுங்கள். அவரவர் வசதிகேற்ப சுமங்கலிகளை அழைத்து, அவங்களுக்கு குங்குமம், மஞ்சள், பூ, பழம், வெற்றிலை பாக்கு, ரவிக்கைத் துணி என்று அளிக்கலாம்.

இதே மாதிரி பதினொரு வெள்ளிக்கிழமைக்கும் செய்தால் நல்லது. சில குடும்பங்களில் பரம்பரை வழக்கப்படி எல்லா வெள்ளிக்கிழமைகளிலேயும் இந்த விரதத்தை அனுசரிப்பதுண்டு.



Leave a Comment