திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோயிலில் மே 20-ஆம் தேதி கொடியேற்றம்


திருப்பதியில் உள்ள கோவிந்தராஜ சுவாமி கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவத்தை அடுத்து மே 20 ஆம் தேதி கொடியேற்றம் நடைபெற உள்ளது. மே 21-ஆம் தேதி முதல் 29 வரை வருடாந்திர பிரம்மோற்சவம் நடைபெற இருக்கிறது.

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தைச் சேர்ந்த கோயில்களில் ஆண்டுதோறும் தேவஸ்தானம் வருடாந்திர பிரம்மோற்சவத்தை நடத்தி வருகிறது. அதன்படி, திருப்பதியில் உள்ள கோவிந்தராஜ சுவாமி கோயிலில் மே 21-ஆம் தேதி முதல் 29 வரை வருடாந்திர பிரம்மோற்சவம் நடைபெற உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. அதற்கான சுவரொட்டியை புதன்கிழமை காலை தேவஸ்தானம் வெளியிட்டது.
திருப்பதியில் உள்ள பத்மாவதி விருந்தினர் மாளிகையில் தேவஸ்தான திருப்பதி செயல் இணை அதிகாரி போலா பாஸ்கர் சுவரொட்டியை வெளியிட்டார்.
பிரம்மோற்சவ நாள்களில் காலை, இரவு என இரு வேளைகளில் வாகன சேவை நடைபெற உள்ளது. மேலும், அந்நாள்களில் ஆர்ஜித சேவைகள் ரத்து செய்யப்பட்டு, தர்ம தரிசனம் மட்டுமே அமல்படுத்தப்பட உள்ளது.
பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, மே 16-ஆம் தேதி அங்குரார்பணம், 20-ஆம் தேதி கொடியேற்றம் நடைபெற உள்ளது. பிரம்மோற்சவ நாள்களில் கோயில் அருகில் பல ஆன்மிக நிகழ்ச்சிகளும் நடத்தப்பட உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

 

உண்டியல் காணிக்கை ரூ. 2.91கோடி
திருப்பதி, மே 9: திருப்பதி ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 2.91 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்தது.
திருமலைக்கு வரும் பக்தர்கள் ஏழுமலையானைத் தரிசித்த பின்னர், காணிக்கைகளை உண்டியலில் செலுத்தி வருகின்றனர். அதன்படி, திங்கள்கிழமை மாலை முதல் செவ்வாய்க்கிழமை மாலை வரை பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கைகளைக் கணக்கிட்டதில் மொத்தம் ரூ. 2.91 கோடி வசூலானது.
ரூ. 18 லட்சம் நன்கொடை
ஏழுமலையான் பெயரில் தேவஸ்தானம் ஏற்படுத்தியுள்ள பல்வேறு அறக்கட்டளைகளுக்கு பக்தர்கள் நன்கொடைகளை அளித்து வருகின்றனர். அதன்படி, செவ்வாய்க்கிழமை ஏழுமலையானின் அன்னதான அறக்கட்டளைக்கு ரூ. 12 லட்சம், ஸ்ரீபாலாஜி ஆரோக்கிய வரப்பிரசாதினி அறக்கட்டளைக்கு ரூ. 3 லட்சம், கோசம்ரக்ஷண அறக்கட்டளைக்கு ரூ. 3 லட்சம் என மொத்தம் ரூ. 18 லட்சம் நன்கொடையாக வழங்கப்பட்டது.

74,472 பக்தர்கள் தரிசனம்
ஏழுமலையானை செவ்வாய்க்கிழமை முழுவதும் 74,472 பக்தர்கள் தரிசனம் செய்தனர். இவர்களில் 31,707 பேர் தலைமுடியை காணிக்கையாகச் செலுத்தினர்.
திருமலை, திருப்பதி, நடைபாதை மார்க்கங்களில் தர்ம தரிசன பக்தர்களுக்கு நேர ஒதுக்கீடு முறை அமல்படுத்தப்பட்டதால் வைகுண்டம் காத்திருப்பு அறைகளில் காத்திருக்கும் பக்தர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.
நடைபாதை மார்க்கத்தில் வந்த முதல் 20 ஆயிரம் (அலிபிரி 14 ஆயிரம், ஸ்ரீவாரிமெட்டு 6 ஆயிரம்) பக்தர்கள் திவ்ய தரிசன டோக்கன் பெற்று ஏழுமலையானைத் தரிசித்தனர்.
டோக்கனில் குறிப்பிட்ட நேரத்துக்குச் சென்றால், அவர்கள் 2 மணி நேரத்தில் ஏழுமலையானைத் தரிசித்து திரும்பலாம். 20 ஆயிரத்துக்கு மேற்பட்டு வரும் பக்தர்கள் தர்ம தரிசனத்தில் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர்.



Leave a Comment