அக்னி நட்சத்திரம் ஏன் சுட்டெரிக்கிறது?


இந்தியாவில் சடங்கு, சம்பிரதாயங்கள் ஆகியவை பன்னெடுங்காலமாக தொன்றுதொட்டு கடைபிடிக்கப்பட்டு வருகின்றன. மேலோட்டமாக பார்க்கும்போது வெறும் சம்பிரதாயமாக தெரிந்தாலும் ஒவ்வொன்றின் பின்னணியிலும் ஒரு காரணமும் அறிவியல் முக்கியத்துவமும் இருக்கும். இந்து மதத்தில் கொண்டாடப்படும் எல்லா பண்டிகைகள், விசேஷங்கள் எல்லாம் பஞ்சாங்கம் பார்த்து தீர்மானிக்கப்படுபவை. பஞ்சாங்கம் என்பது இந்துமத கால அட்டவணை. வாரம், திதி, கரணம், நட்சத்திரம், யோகம் ஆகிய ஐந்து அங்கங்களே பஞ்ச அங்கம் எனப்படுகிறது. இதில் பூமியை சுற்றி வரும் சந்திரன், குறிப்பிட்ட நேரத்தில் எங்கு இருக்கிறதோ அந்த இடத்துக்குரிய நட்சத்திரம் நடப்பதாக கணிக்கப்படுகிறது.

இதேபோல ஒவ்வொரு கிரகமும் எந்த நட்சத்திரத்தில் பயணம் செய்கிறதோ, அந்த கிரகத்தின் சாரத்தில் செல்வதாக சொல்வார்கள். அக்னி நட்சத்திரம் என்று சொல்லப்படும் காலகட்டம் சூரியனின் சஞ்சாரத்தை மையமாக வைத்து கணக்கிடப்பட்டுள்ளது. சூரியன் சித்திரை மாதம் மேஷ ராசியில் நுழைந்து ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு ராசியில் இருப்பார். இந்த சித்திரை மாதத்தில் மேஷ ராசியில் பிரவேசித்தவுடன் கோடை காலத்தின் ஆரம்பமாக சூரியனின் கதிர்கள் நம்மை சுட்டெரிக்கிறது. அதுவும் மேஷ ராசி செவ்வாயின் வீடாக இருப்பதால் அதன் தாக்கம் அதிகமாகின்றது. செவ்வாய் என்பது நெருப்புக் கோளாகும்.

சூரியன் பரணி நட்சத்திரம் 3&ம் பாதம் முதல் கிருத்திகை நட்சத்திரம் முடிய வலம் வரும் காலகட்டமே அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயிலாகும். இந்த அக்னி நட்சத்திர காலமான 26 நாட்களும் தோஷ காலமாக கூறப்படுகிறது. இந்த நாட்களில் எந்த விதமான சுப காரியங்களும் தொடங்க மாட்டார்கள். புதிய பேச்சுவார்த்தைகளும் துவக்க மாட்டார்கள். ஜோதிட சாஸ்திரத்தில் இது ‘அக்னி நட்சத்திர தோஷம்’ எனப்படுகிறது.

புதுமண தம்பதிகள் ஆடி மாதத்தில் சேரக்கூடாது என்பது இங்கு சம்பிரதாயமாக கடைபிடிக்கப்படுகிறது. ஆடி சீர் வைத்து புதுப்பெண்ணை தாய் வீட்டுக்கு அழைத்து சென்றுவிடுவார்கள். ஆடி மாதம் கருத்தரித்தால் சித்திரையில் குழந்தை பிறக்கும் என்ற கணக்கு. குழந்தைக்கு அக்னி நட்சத்திர தோஷம் ஏற்பட்டுவிடக் கூடாது என்ற ஐதீகம். பிறந்த குழந்தைக்கும் பிரசவித்த தாய்க்கும் அக்னி நட்சத்திரத்தின் காரணமாக உடல் உபாதைகள், நோய் தொற்றுகள், கிரக தோஷங்கள் ஏற்படக்கூடாது என்பதாலேயே ஆடியில் தம்பதியை பிரித்து வைத்தார்கள். 26 நாட்களுக்கு பிறகு அக்னி நட்சத்திர தோஷம் விலகுகிறது. அன்றைய தினம் கோயில்களில் விசேஷ வழிபாடுகள், சிறப்பு பூஜைகள் நடக்கும்.



Leave a Comment