அகத்தியரால் உருவான தென்திருமாலிருஞ்சோலை


தென்திருமாலிருஞ்சோலையில் பெருமாளை அவரது சித்தப்படி, அழகராக தாமிரபரணி ஆற்றங்கரையில் பிரதிஷ்டை செய்தார் அகத்திய முனிவர். மகாலட்சுமியும் அந்த இடத்தை வலம் வந்து பெருமாளுடன் சேர, அந்த இடம் ‘ஸ்ரீவலம்வந்த பேரி’ என்று அழைக்கப்பட்டது. தற்போது அந்தப் பெயரே மருவி ‘சீவலப்பேரி’ என்று நிலைத்திருக்கிறது.

இரண்டாம் நூற்றாண்டு காலத்தை சேர்ந்தது இந்தக் கோவில் என்று கூறப்படுகிறது. அகத்தியர் பிரதிஷ்டை செய்த இறைவனுக்கு, கவுதம மகரிஷி கர்ப்பகிரகம் அமைத்து வழிபட்டு இருக்கிறார். ஸ்ரீ வல்லபபாண்டியன் கோவில் எழுப்பியிருக்கிறார். கோவில் கருவறையில் ஏராளமான கல்வெட்டுகள் உள்ளன.

தென் தமிழ்நாட்டில் தாமிரபரணி, சித்ரா நதி, கோதண்டராம நதி என்னும் மூன்று நதிகள் கலக்கும் இடத்தில், இந்த விஷ்ணு தலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஊருக்கு முக்கூடல், திரிவேணி சங்கமம் என்ற பெயர்களும் உண்டு. மதுரையில் உள்ள அழகர் கோவிலை வடதிருமாலிருஞ்சோலை என்றும், சீவலப் பேரியில் உள்ள அழகர் கோவிலை, தென் திருமாலிருஞ்சோலை என்றும் சொல்வார்கள். இந்தக் கோவிலின் மூலவர் அலர்மேலுமங்கை சமேத அழகர். உற்சவர் மகாலட்சுமி பூமாதேவி சமேத சுந்தரராஜ பெருமாள்.

இனி இந்த கோவில் வரலாற்றை பார்ப்போம்.
பூமியை சமநிலைப்படுத்த அகத்தியர் தென்னாடு வந்தார். சிவபெருமானின் கல்யாண கோலத்தை பார்க்க திரிகூடமலையில் இருந்த அழகர் கோவிலின் உள்ளே செல்ல முயன்றார். அப்போது அங்கு இருந்தவர்கள், அகத்தியர் சைவர் என்பதால் அவரை உள்ளே நுழைய விடாமல் தடுத்தனர்.

உடனே அகத்திய முனிவர் அரியும், சிவனும் ஒன்று என்பதை உணர்த்த திருமாலை வேண்டி அவரை சீவலப்பேரியில் எழுந்தருள செய்து, அழகர் இருந்த இடமான திரிகூடமலையில் சிவபெருமானை எழுந்தருளச் செய்தார். அழகருக்கு சீவலப்பேரியின் அழகு பிடித்துப்போக இங்கேயே இருந்து விட்டார்.

திரு மகளும் அழகரை வலம் வந்து அவர் மார்பில் சேர்ந்தாள். அகத்தியருடன் வந்த சிறு பெண்ணான தாம்பரையும் நதியாகி அழகருடன் வந்தாள். அதுவே தாமிரபரணி நதியாகும்.

ஆலயச் சிறப்பு :
திருப்பதி கோவிலுக்கு முன்பே ஏற்பட்டுள்ள இந்தக் கோவில், பன்னிரண்டாம் நூற்றாண்டில் ஆட்சி புரிந்த பாண்டிய மன்னன் மாறவர்மன் ஸ்ரீ வல்லபனால் கட்டப்பட்டது. பாண்டிய மன்னர்கள் இந்தக் கோவிலுக்கு மானியங்கள் அளித்துள்ளதாக கல்வெட்டுகள் எடுத்துரைக்கின்றன. ஸ்ரீ வல்லப பாண்டியனின் சிலையும் கோவிலில் உள்ளது.

சுடலைமாடசாமி அழகருக்கு காவல் தெய்வமாக அண்ணன் முண்டசாமியுடன் அருகில் கோவில் கொண்டு இருக்கிறார். மற்ற மாடன் கோவில்கள் இங்கிருந்து பிடிமண் எடுத்து கட்டப்பட்டவையாகும். சுடலைமாட சாமியின் பிறப்பிடமும் இதுதான்.

தங்கையாக துர்க்கை, விஷ்ணு துர்க்கையாக எதிரில் கோவில் கொண்டு இருக்கிறாள். கர்ப்பகிரஹத்தில் விஷ்ணுவும், துர்க்கையும் அருகருகே எழுந்தருளி இருக் கிறார்கள். வேறு எங்கும் இந்த அமைப்பை காண முடியாது.

அகத்தியர் பூமியை சமன்செய்து திரும்பும்போது இங்கு வந்து அழகரை தரிசித்து விட்டு சிவனை மனதால் நினைக்க சிவனும், காசி விசுவநாதராக, விசாலாட்சியுடன் காட்சி அளித்தார். அந்த கோவிலும் அருகே உள்ளது.

திருப்பதி வெங்கடாசலபதியும் ஸ்ரீனிவாசராக இங்கே எழுந்தருளி இருக்கிறார். ஆஞ்சநேயர் சிறுகுழந்தை வடிவில் கைகூப்பியபடி இருக் கிறார். அவருக்கு வெண்ணெய் காப்பு, வடமாலை சாத்தி சனிக்கிழமைதோறும் வழிபடு கிறார்கள். நல்ல காரியங்களுக்கு பூக்கட்டி பார்க்கும் பழக்கமும் இந்த சன்னிதியில் இருக்கிறது.

இங்குள்ள லட்சுமணர் முன்பக்கம் மனித ரூபமாகவும், பின் பக்கம் சர்ப்ப ரூபமாகவும் இருக்கிறார். ராமர், சீதையை தேடி இங்கு வந்தபோது, பக்கத்தில் உள்ள மலைமேல் ஏறி தேடியதாக சொல்கிறார்கள். ராமருடைய பாதம் மலை அடிவாரத்தில் உள்ளது. நாலாயிர திவ்ய பந்தத்தில் பெரியாழ்வார் பாசுரங்களில் இந்த கோவில் குறித்த குறிப்புகள் உள்ளன. இந்த கோவிலின் தேர்த்திருவிழா ஆண்டுதோறும் சித்திரை முதல் தேதி நடை பெறும்.

முன்பு ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் 24-ந் தேதி இந்த கோவிலில் கொடியேற்றி பத்து நாட்கள் பிரமோற்சவம் நடந்து உள்ளது. 9-ம் நாள் சித்திரை விஷூ அன்று தேர்த்திருவிழா நடந்து உள்ளது. புரட்டாசி மாதம் அனைத்து சனிக்கிழமைகளிலும் கருட உற்சவம் இன்றும் நடக்கிறது. சித்திரை முதல் நாள் அன்று விசேஷ பூஜைகளும், ஆடி ஸ்வாதி அன்று கருட சேவையும், ஒவ்வொரு மாதமும் கடைசி சனிக்கிழமைகளில் விசேஷ பூஜையும் நடக்கிறது.

கும்பமேளா சமயங்களிலும், அமாவாசை, மாதப்பிறப்பு சமயங் களிலும் மக்கள் இந்த ஊர் ஆற்றில் நீராடி பித்ருக்களுக்கு சடங்குகள் செய்கிறார்கள். காசியில் உள்ள திரிகூட சங்கமத்திற்கு இணையாக இந்த முக்கூடலை கருதுகின்றனர்.



Leave a Comment