ரெங்கநாதர் கோயிலில் சேர்த்தி சேவை


ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் நம்பெருமாள் தாயார் சன்னதியை சென்றடையும் சேர்த்தி சேவை கோலாகலமாக நடைபெற்றது.108 வைணவ ஸ்தலங்களில் முதன்மையானது ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயில். இங்கு ஆதிபிரம்மா திருநாள் என்று அழைக்கப்படும் பங்குனி தேரோட்ட விழா கடந்த 22-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி விமரிசையாக நடந்து வருகிறது. இந்த விழாவின் முக்கிய நிகழ்வான சேர்த்தி சேவை நடைபெற்றது. இதில் நம்பெருமாள் கண்ணாடி அறையிலிருந்து தங்கப்பல்லக்கில் புறப்பட்டு திருச்சுற்று வழியாக தாயார் சன்னதியை வந்தடைந்தார். அங்கு ரெங்கநாதர், தான் அணிந்திருந்த மோதிரத்தை நாச்சியாருக்கு அன்பளிப்பாக அளித்தார். இதற்கிடையில் தாயாருக்கும், நம்பெருமாளுக்கும் இடையேயான சண்டையை நம்மாழ்வார் தீர்த்து வைப்பார். இதையடுத்து சமாதானமடைந்த தாயார் அந்த மோதிரத்தை ஏற்றுக்கொள்வார். இந்த நிகழ்வை நினைவுகூரும்விதமாக நடைபெறும் சேர்த்தி சேவை வைபத்தின்போது, பங்குனி உத்திர மண்டபத்தில் நம்பெருமாளுடன் தாயாரும் இணைந்து சேர்த்தி சேவை சாதித்தார். வருடத்தில் பங்குனி உத்திரம் அன்று ஸ்ரீதாயார் ஸ்ரீரெங்கநாதர் சேர்ந்திருப்பர். அன்றைய தினம் வழிபட்டால் குடும்பத்தில் ஒற்றுமை ஓங்கும், வேண்டுவன கிடைக்கும், திருமண பாக்கியம் கிட்டும் என்பது ஐதீகம். இதனால் ரெங்கநாதரையும், தாயாரையும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சேவித்தனர்.



Leave a Comment