திருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோயிலில் பங்குனி தேரோட்டம்


பஞ்சபூத ஸ்தலங்களில் திருச்சி மாவட்டத்தில் உள்ள திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி உடனுறை ஜம்புகேஸ்வரர் கோயில் நீர் ஸ்தலமாக திகழ்கிறது. இக்கோயிலில் ஆண்டுதோறும் மண்டல பிரமோற்சவம் சிறப்பாக கொண்டாடப்படும். இந்தாண்டு மண்டல பிரமோற்சவம் கடந்த மாதம் 25ம் தேதி பெரிய கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது. இவ்விழா வருகிற ஏப்ரல் 4ம் தேதி வரை நடைபெறும்.மண்டல பிரமோற்சவத்தின் முக்கியவிழா பங்குனி தேர் திருவிழாவாகும். இத்தேர்திருவிழா எட்டுத்திக்கும் கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. கோயிலின் 3 மற்றும் 4ம் பிரகாரங்களில் எட்டுத்திக்கிலும் உள்ள கொடிமரங்களில் கொடியேற்றும் நிகழ்ச்சி காலை 7.30 மணி முதல் 8.30 மணிவரை நடைபெற்றது. அதனையொட்டி, சோமாஸ்கந்தர் அம்பாளுடன் வெள்ளி ஏகசிம்மாசனத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கொடியேற்றத்தை கண்டருளினார். 3ம் நாள் இரவு சுவாமி பூத வாகனத்திலும், அம்மன் காமதேனு வாகனத்திலும், 4ம் நாள் இரவு சுவாமி கைலாச வாகனத்திலும், அம்மன் கிளி வாகனத்திலும், 5ம் நாள் இரவு சுவாமி ரிஷப வாகனத்திலும், அம்மன் வெள்ளி ரிஷப வாகனத்திலும் 4ம் பிரகாரத்தில் வீதியுலா வந்து அருள்பாலிக்கின்றனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 19ம்தேதி நடக்கிறது. இதையொட்டி, சுவாமி, அம்பாள் தனித்தனி பெரிய தேரில் எழுந்தருளி 4ம் பிரகாரத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பர். பங்குனி தேர்த் திருவிழா வருகிற 23ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதைத் தொடர்ந்து மௌனோத்சவம், சண்டிகேஸ்வரர் உற்சவமும், சொக்கர் உற்சவமும், ஏப்ரல் 2ம்தேதி பஞ்சப்பிரகார விழாவும் நடைபெறுகிறது. இதையொட்டி சுவாமி அம்பாள் வேடமிட்டும், அம்பாள் சுவாமி வேடமிட்டும் எழுந்தருளி 5ம் பிரகாரத்தில் வீதியுலா வந்து அருள்பாலிப்பர். ஏப்ரல் 4ம் தேதியுடன் மண்டல பிரமோற்சவ விழா நிறைவடைகிறது.



Leave a Comment