திருப்பதி ஏழுமலையானின் சிறப்புகள்


திருப்பதி ஏழுமலையான் கோயில் பெருமைகள் பலவற்றை நாம் அறிந்திருந்தாலும், இக்கோயில் குறித்தும் பெருமாள் பற்றியும் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய சிறப்புகள் ஏராளமாக உள்ளன. அதில் சில துளிகள் ...
உலகிலேயே அதிகமான பக்தர்கள் வழிபட செல்லும் இந்து கோயில் திருப்பதி ஏழுமலையான் கோயிலாகும். இங்கு ஒருநாளைக்கு சராசரியாக 50 முதல் 70 ஆயிரம் பக்தர்கள் சுவாமியை தரிசித்து வருகின்றனர். விசேஷ நாட்களில் 1 லட்சம் பக்தர்கள் வரை ஏழுமலையானை தரிசிக்கின்றனர்.
திருப்பதி ஏழுமலையானின் உண்டியலில் தினந்தோறும் சராசரியாக ரூ. 3 கோடி வரை பக்தர்கள் காணிக்கை செலுத்தி வருகின்றனர். இதுவரை ஒரே நாளில் ரூ. 5.73 கோடி உண்டியல் வசூலே சாதனையாக உள்ளது.
உலகிலேயே அதிக வருமானம் ஈட்டும் இந்து கோயில்களில் திருப்பதி ஏழுமலையான் கோயில் முதலிடத்தை வகிக்கிறது.
திருமலையில் ஒரு நாளைக்கு ரூ. 2 கோடி வரை வியாபாரம் நடக்கிறது. இதில், தொப்பி, ஏழுமலையானின் உருவப்படம் போன்றவை மட்டுமே ரூ. 70 லட்சம் வரை விற்கப்படுவதாக கூறப்படுகிறது.
கோயிலில் மூலவருக்கு தினந்தோறும் 120 வகையான ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு அலங்காரம் செய்யப்படுகிறது. மேலும், உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்பருக்கு 383 வகையான ஆபரணங்கள் அலங்கரிக்கப்படுகிறது. ஏழுமலையானின் தங்க பீதாம்பரம் மட்டும் 40 கிலோ எடை கொண்டதாகும்.
ஏழுமலையானின் ஆபரணங்களில் குறிப்பிடத்தக்க ஆபரணம் 500 கிராம் எடைகொண்ட பச்சை மரகத கல்லாகும். இதனை மதிப்பீடு செய்ய இயலவில்லை. இந்த பச்சைக்கல் மரகதத்தை விசேஷ நாட்களில் அலங்காரம் செய்ய பயன்படுத்துகின்றனர்.
உற்சவரான மலையப்பர் உலா வரும் தங்க ரதம் 74 கிலோ தங்கத்தால் தயாரிக்கப்பட்டதாகும். சுவாமிக்கு உண்டியல் மூலம் தினமும் சராசரியாக 7 கிலோ வெள்ளிப் பொருட்கள் காணிக்கையாக பக்தர்கள் செலுத்துகின்றனர்.
ஆசியாவிலேயே திருமலை இலவச உணவு மையத்தில் தினமும் 5,000 கிலோ காய்கறிகளில் உணவு தயாரிக்கப்படுகிறது.



Leave a Comment