தமிழ்ப் பதிகம் பாடி கோயில் கதவு திறக்கும் திருவிழா


நாகை மாவட்டம்,வேதாரண்யம் வேதாரண்யேசுவரர் கோயிலில் தமிழ்ப் பதிகம் பாடி கதவு திறக்கும் திருவிழா நடைபெற்றது. ஆண்டுதோறும் நடைபெறும் மாசி மகப் பெருவிழாவின்போது தமிழ்ப் பதிகம் பாடி கதவு திறக்கும் விழா நடைபெற்று வருகிறது. நிகழாண்டுக்கான விழா, கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியையொட்டி, பிரதான கதவின் எதிரே அப்பர், சம்பந்தர் ஆகியோர் எழுந்தருள, இவர்களை உருவகப்படுத்தப்பட்ட ஓதுவாமூர்த்திகள் பதிகம் பாடினர். கோயில் கதவு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு திறக்கப்பட்டது. நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். முன்னதாக, அப்பர், சம்பந்தர் எழுந்தருளிய வீதியுலா நடைபெற்றது. வேதாரண்யேசுவரர் கோயிலில் ரிக், யஜூர், சாம, அதர்வண வேதங்கள் நான்கும் இறைவனை வழிபட்டு வந்ததாகவும்,பின்னர், கோயிலின் பிரதான கதவுகளை மூடிச் சென்றதாகவும் செவிவழித் தகவலாக கூறப்பட்டு வருகிறது. பின்னாளில் இக் கோயிலுக்கு வந்த சமயக் குரவர்கள் திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர் இருவரும் தேவாரத் தமிழ்ப் பதிகம் பாடியதால் கதவு திறந்ததாகவும் கோயில் தலப்புராணத்தில் கூறப்படுகிறது. இதில், அப்பர் கதவினை திறக்கவும், சம்பந்தர் கதவினை மீண்டும் திருகாப்பு செய்யவும் பாடியதாக சொல்லப்படுகிறது.



Leave a Comment