ராமேசுவரம் கோயிலில் மாசி மகா சிவராத்திரி கொடியேற்றம்


ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் இந்த ஆண்டிற்கான சிவராத்திரி திருவிழா இன்று பிப்ரவரி 6-ல் தொடங்கி பிப்ரவரி 17 வரை நடைபெறுகிறது. செவ்வாய்கிழமை காலை 10.30 மணிக்கு மேல் மேஷ லக்னத்தில் கோயில் கொடிமரத்தில் திருவிழா கொடி ஏற்றப்பட்டது. இதனையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இரவு 8 மணிக்கு ராமநாதசுவாமி தங்க நந்திகேசுவரர் வாகனத்திலும், பர்வதவர்த்தினி அம்பாள் வெள்ளி அன்ன வாகனத்திலும் பஞ்சமூர்த்திகளுடன் புறப்பாடாகி வீதி உலா வருகிறார்கள். பிப்ரவரி 13-ம் தேதி மாசி சிவராத்திரியை முன்னிட்டு காலை 9 மணிக்கு மேல் நடராஜர் கேடயத்தில் எழுந்தருளுதல் நிகழ்ச்சியும், அதைத் தொடர்ந்து கோயில் அனுப்பு மண்டபத்தில் பட்டயம் வாசித்தல் நிகழ்ச்சியும் நடக்கிறது. இரவு 8 மணிக்கு ஒளி வழிபாடு முடிந்ததும் சுவாமி அம்பாள் மின்னொளியால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளி ரதத்தில் வீதி உலா வருகிறார்கள். பிப்ரவரி 14-ம் தேதி காலை 09.30 மணிக்கு சுவாமி அம்பாள் திருத்தேரில் எழுந்தருளுகிறார்கள். தொடர்ந்து தேரோட்டம் நிகழ்ச்சி நடக்கிறது. மாலை 4.30 மணிக்கு தங்க குதிரை வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடைபெறுகிறது. பிப்ரவரி 15-ம் தேதி மாசி அமாவாசையன்று காலை 9 மணிக்கு மேல் சுவாமி அம்பாள் இந்திர விமானத்தில் எழுந்தருளி வீதி உலா நடைபெறுகிறது. மதியம் 12 மணிக்கு தங்க ரிஷப வாகனத்தில் புறப்பாடாகி அக்னி தீர்த்த கடற்கரைக்கு வந்து அங்கு பக்தர்களுக்கு தீர்த்தவாரி நிகழ்ச்சி நடக்கிறது. திருவிழாவையோட்டி தினமும் தெற்கு நந்தவன திருக்கல்யாண மண்டபத்தில் ஆன்மிக சொற்பொழிவு மற்றும் இசை நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன.



Leave a Comment