18 படிபூஜையின் மகத்துவம்


சபரிமலை சந்நிதானத்தில் ஐயப்ப விக்கிரகத்துக்கு எத்தனை பெருமை உள்ளதோ அத்தனை மகத்துவம் இங்குள்ள 18 படிகளுக்கும் கொடுக்கப்படுகிறது. இருமுடி தலையில் இல்லாமல், மாலை அணியாமல் இருப்பவர்கள் கூட சபரி மலை ஐயப்பனை தரிசித்து விடலாம். பெண்கள் எல்லோரும் கூட ஐயப்பனை தரிசித்து விடலாம். ஆனால் இருமுடி இல்லாமல், விரதம் இல்லாமல் வந்த ஒருவர் கூட இந்த படியின் மீது ஏற அனுமதிக்கப்பட மாட்டார்கள். அத்தனை பெருமை கொண்ட இந்த படிகளுக்கு செய்யப்படும் பூஜையே படி பூஜை எனப்படுகிறது. 18 மலைகளையும், 18 தத்துவங்களையும், 18 தேவர்களையும் குறிப்பதாக இந்த படிகளைச் சொல்வார்கள். மேல்சாந்தி, கீழ்சாந்தி, தந்திரிகள் மற்றும் அந்த பூஜைக்கான செலவினை ஏற்றுக்கொண்ட உபயதாரர்கள் இணைந்து இந்த படி பூஜையினை செய்வார்கள். படிகளை விதவிதமான மலர்களால் அலங்கரித்து, விளக்குகளால் ஜொலிக்கச் செய்து வாத்தியங்கள் முழங்க இந்த பூஜை பிரமாண்டமாக நடைபெறும். இந்த பூஜையைச் செய்ய இப்போது பதிவு செய்தால் 20 ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டும் என்பதில் இருந்தே இந்த பூஜை எத்தனை சிறப்பானது என்பதை நாம் புரிந்துகொள்ளலாம். சபரி மலையில் கீழ்க்காணும் எல்லா பூஜைகளும் உபயதார்களால் நடத்தப்படுவதுதான். முன்கூட்டியே பதிவு செய்து இந்த பூஜைகளை நடத்தலாம்.



Leave a Comment