வைணவக் கோயில்களில் சொர்க்க வாசல் திறப்பு...


வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு வைணவக் கோயில்களில் சொர்கவாசல் திறக்கப்பட்டது. தேவர்கள் முதலான அனைவரையும் துன்புறுத்தி வந்தான் அசுரன் முரன். அசுரனிடமிருந்து தங்களை காக்குமாறு ஈசனை சரணடைந்தனர் தேவர்கள். ஈசனோ, தேவர்களை மகாவிஷ்ணுவிடம் முறையிட சொன்னார்.
விஷ்ணுவை சரணடைந்த தேவர்களுக்காக சுமார் 1000 வருடங்கள் கடுமையாக அசுரனுடன் போர் புரிந்தார் மகாவிஷ்ணு.அதன் பிறகு மிகவும் களைப்படைந்த மகாவிஷ்ணு பத்ரிகாஸ்ரமத்தில் உள்ள ஒரு குகையில் படுத்து ஓய்வெடுத்தார்.அந்த நேரத்தை தனக்கு சாதகமாக்கி கொண்டஅசுரன், பகவானை கொல்லத் துணிந்த போது, அவருடைய திவ்ய சரீரத்தில் இருந்து அவருடைய சக்தி ஒரு பெண் வடிவில் வெளிப்பட்டு, அசுரனை எரித்து சாம்பலாக்கியது.
மகாவிஷ்ணு விழித்தெழுந்து நடந்ததை அறிந்து, அந்த சக்திக்கு “ஏகாதசி” எனப் பெயரிட்டு உன்னை விரதம் இருந்து போற்றுவோருக்கு நான் சகல நன்மைகளையும் தருவேன் என வரமளித்து, தன்னுள் மீண்டும் சக்தியை ஏற்றுக்கொண்டார். எனவே ஏகாதசி எனும் சக்தி விழிப்புடன் இருந்து நாராயணனின் அருளும் வரமும் பெற்ற ஏகாதசி நாளில் நாமும் கண்விழித்து விரதம் கடைபிடித்தால் அவரின் அருள் பரிபூரணமாக கிடைக்கப்பெற்று நீங்காப் புகழுடன் வாழ்வோம் என்பது ஐதீகம்.
மார்கழி மாத சுக்ல பட்சத்தில் வரும் ஏகாதசியே வைகுண்ட ஏகாதசி. இந்நாளில் வைணவக் கோயில்களில் சொர்க்க வாசல் திறக்கப்படும். பெருமாள், பரமபத வாசல் சன்னிதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்புரிவார்.
பெருமாள் கோயில்களில் வைகுண்ட ஏகாதசி விழா, பகல் பத்து, இராபத்து உற்சவமாக வெகு சிறப்பாக நடைபெறும். இராப்பத்தின் முதல் நாள் பரமபத வாசல் சந்நதி திறப்பு விழா நடைபெறும். கலியுகத்தில் நம்மாழ்வாருக்கு முன்பு வைகுண்டத்திற்கு சென்றோர் யாரும் இல்லாததால் வைகுண்டத்தின் வாசல் மூடப்பட்டு இருந்தது. நம்மாழ்வார் முக்தி அடைந்த அன்று, அது திறக்கப்பட்டது. இதனை அறிந்த நம்மாழ்வார், பெருமாளிடம் ‘எனக்கு மட்டும் வைகுண்ட வாசலைத் திறந்தால் போதாது. என்னைத் தொடர்ந்து தங்கள் மீது பக்தி செலுத்தும் அனைத்து பக்தர்களுக்காகவும் வைகுண்டவாசல் திறக்கப்பட வேண்டும்’ என்று வேண்டவே, பெருமாள், நம்மாழ்வாரின் வேண்டுகோளை ஏற்று மார்கழி மாத சுக்லபட்ச ஏகாதசியில் சொர்க்க வாசல் திறக்க வழி செய்தார். அந்த நாள்தான் வைகுண்ட ஏகாதசியாக, சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சியாக அனுசரிக்கப்படுகிறது. ஸ்ரீரங்கத்தில் கொண்டாடப்படும் வைகுண்ட ஏகாதசி பற்றி ஒரு வரலாறு உண்டு. திருமங்கையாழ்வாரின் பக்தியிலும் திருப்பணியிலும், மகிழ்ச்சியடைந்த ரங்கநாதர் அவர் முன்தோன்றி, “என்ன வரம் வேண்டும்?’’ என்று கேட்டாராம். அதற்கு திருமங்கையாழ்வார் நம்மாழ்வார் பரமபதம் அடைந்த நாளான மார்கழி வளர்பிறை ஏகாதசியைப் பெருவிழாவாகக் கொண்டாட வேண்டும். நம்மாழ்வாரின் திருவாய் மொழிக்காகத் திருவிழா நடைபெற அருள வேண்டும் என்று வரம் கேட்டார். அதை ரங்கநாதரும் அருளினார். அதன்படி ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி விழா நடைபெறுகிறது. இதேபோல நாடு முழுவதும் உள்ள வைணவ கோயில்களில் சொர்க வாசல் திறக்கப்பட்டது.
வீரராகவ பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு சொர்க்க வாசலை கடந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அப்போது பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என கோஷம் எழுப்பி வீரராகவப் பெருமாளை வழிபட்டனர்.



Leave a Comment