திருப்பதியில் அனைத்து தரிசன டிக்கெட்டும் ஆதாருடன் இணைக்க முடிவு!


லட்டு முறைகேடுகளை தடுக்கும் நடவடிக்கையாக திருப்பதியில் அனைத்து தரிசன டிக்கெட்டும் ஆதாருடன் இணைக்க அதிகாரிகள் தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இலவச தரிசனம், மலைப்பாதை வழியாக நடந்து வரும் திவ்ய தரிசனம், 300 ரூபாய்க்கான சிறப்பு நுழைவு தரிசனத்தில் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இதுதவிர, ஆர்ஜித சேவை, ஒரு வயது குழந்தையுடன் பெற்றோர் செல்லுதல், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்களுக்கான சிறப்பு தரிசனம், வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான தரிசனத்துக்கும் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.

இதில், 300 க்கான சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட் ஒரு நாளைக்கு 20 ஆயிரம் முதல் 25 ஆயிரம் வரை வழங்கப்படுகிறது. இந்த டிக்கெட்டை நாட்டின் எந்த இடத்தில் இருந்தும் சுலபமாக பெறும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த டிக்கெட்டை பக்தர்கள் அரசு அங்கீகரித்த 9 அடையாள அட்டைகளில் ஏதாவது ஒன்றை காண்பித்து முன்பதிவு செய்து பெற்று கொள்ளலாம்.மேலும், மலைப்பாதை வழியாக வரும் பக்தர்களுக்கு 20 ஆயிரம் திவ்ய தரிசனம் டிக்கெட் நாள்தோறும் வழங்கப்படுகிறது. இந்த டிக்கெட்டுகளுக்கு எந்தவிதமான அடையாள அட்டைகளும் தேவையில்லை. ஆனால் இலவச தரிசனத்தில் வரும் பக்தர்களுக்கு தற்போது ஆதார் அட்டையை வைத்து நேரம் ஒதுக்கீடு செய்த டிக்கெட்டுகள் சோதனை முறையில் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, சாதாரண நாட்களில் 75 ஆயிரம் பக்தர்கள், கூட்டம் அதிகமாக உள்ள நாட்களில் 90 ஆயிரம் பக்தர்கள் வரை நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் சுவாமி தரிசனம் செய்ய அதிகாரிகள் திட்டமிட்டு வருகின்றனர்.இதில், தற்போது திவ்ய தரிசனத்தில் வரும் பக்தர்களிடம் அடையாள அட்டைகள் பெறாததால், இவர்கள், இலவச தரிசன டிக்கெட் பெற்று சுவாமி தரிசனம் செய்யவும், கூடுதலாக லட்டுகள் பெறவும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதை பயன்படுத்திக்கொள்ளும் இடைத்தரகர்கள் முறைகேடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தேவஸ்தானத்துக்கு லட்டு விற்பனையின் மூலம் இழப்பு ஏற்படுகிறது. எனவே, முறைகேடு இல்லாமலும் தேவஸ்தானத்துக்கு ஏற்படும் இழப்பை தடுக்கவும் 300 ரூபாய்க்கான சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட், திவ்ய தரிசன டிக்கெட், ஆர்ஜித சேவை டிக்கெட் உட்பட அனைத்து தரிசன டிக்கெட்டையும் ஆதாருடன் இணைக்க தேவஸ்தான அதிகாரிகள் தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகின்றனர்.



Leave a Comment