ஐயப்ப பக்தர்களுக்கான விரத முறைகள்....


ஐயப்பனுக்கு மாலை அணிந்து விரதம் மேற்கொள்பவர்கள் மிகவும் சுத்தமாக இருக்க வேண்டும். ஐயப்பனுக்கு விரதம் மேற்கொள்ளும் போது ஒருசிலவற்றை மனதில் கொண்டு நடக்க வேண்டும். ஒரு மண்டலத்திற்கு விரதம் மேற்கொள்ளும் ஐயப்ப பக்தர்கள், எப்போதும் மனதை அமைதியாக வைத்து, ஐயப்பனையே நினைத்து, சரணம் சொல்லி வழிபட வேண்டும். மாலை போட்டவர்கள், மெத்தை, தலையணை, போர்வை என்று எதையும் உபயோகிக்கக்கூடாது. வெறும் தரையில், ஒரு துணியை விரித்து மட்டுமே படுக்க வேண்டும். ஐயப்பனுக்கு மாலை போட்டவர்கள், மனதை அமைதியுடன் வைத்துக் கொள்ள வேண்டும். இக்காலத்தில் கோபம் மற்றும் மற்றவர்களின் மனம் புண்படும்படியான வார்த்தைகளைப் பயன்படுத்தி பேசக்கூடாது. சாந்தமுடன் இருக்க வேண்டியது அவசியம். மாலை போட்டுவிட்டால், விரதம் முடிந்து மாலையை கழற்றும் வரை முடி வெட்டவோ, ஷேவிங் செய்யவோ, நகத்தை வெட்டவோ, அலங்காரம் செய்யவோ, செருப்பு அணியவோ அல்லது வாசனை திரவியங்களை தடவிக் கொள்ளவோ கூடாது. ஐயப்பனுக்கு விரதம் மேற்கொள்ளும் போது, பெண்களை சகோதரியாகவும், தாயாகவும் தான் பார்க்க வேண்டும். மேலும் வீட்டில் இருக்கும் மனைவி மற்றும் மற்ற பெண்களின் தொண்டும், பக்தியும் மிகவும் உயர்வானதும், போற்றக்கூடியதும் ஆகும். ஒருவேளை கழுத்தில் அணிந்திருந்த மாலை அறுந்துவிட்டால், அதை சரிசெய்து மீண்டும் அணிந்து கொள்ளலாம். இதனால் எந்த ஒரு தவறும் இல்லை. மனம் வருந்த வேண்டிய அவசியமும் இல்லை. வீட்டில் இருக்கும் பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சி என்றால், அவர்களை காண்பதைத் தவிர்ப்பதோடு, வசதி இருந்தால், அவர்களை தனி அறையில் இருக்குமாறு கூறலாம். இல்லாவிட்டால், மாலை அணிந்திருப்பவர்கள் வெளியிடங்களில் தங்கிக் கொள்வது நல்லது. எப்போதும் மாலைப் போடும் தருணத்தில், அச்சமோ, சந்தேகமோ, குற்ற உணர்ச்சியோ இருக்கக்கூடாது. ஒருவேளை மனதில் ஏதேனும் குழப்பமோ அல்லது மனம் ஏதேனும் சஞ்சலத்துடன் இருந்தால், மாலைப் போடுவதைத் தள்ளிப் போடுவது நல்லது. இருமுடி கட்டும் நிகழ்ச்சியை மற்ற இடங்களில் வைப்பதற்கு பதிலாக, வீட்டிலேயே நடத்துவது நல்லது. இதனால் வீடு மங்களகரமாகவும், தீய சக்திகள் அகன்றும் இருக்கும். மாலை போட்ட பின் மது, புகை, அசைவ உணவுகள் போன்றவற்றை அறவே தவிர்க்க வேண்டும். சொல்லப்போனால், புகைப்பழக்கத்தைக் கைவிட நினைப்பவர்கள் ஐயப்பனுக்கு மாலை போடுவது ஓர் சிறந்த வழியாக அமையும். உங்கள் குருசாமி சபரிமலை சுவாமி ஐயப்பனுக்கு இணையானவர். எனவே அவருக்கு பணிவிடை செய்து, ஐயப்பனின் அருளைப் பெறுங்கள். எதிர்பாராமல் உங்கள் குடும்பத்தில் பிறப்பு அல்லது இறப்பு நிகழ்ந்தால், நீங்கள் அணிந்துள்ள மாலையை சுவாமி ஐயப்பன் முன் வைத்துவிடுங்கள். மேலும் ஒரு வருடம் கழித்து நீங்கள் உங்கள் யாத்திரையைத் தொடங்கலாம். ஐயப்பனுக்கு மாலை போட்டுவிட்டால், தலைக்கு எண்ணெய் வைக்கவோ அல்லது எண்ணெய் குளியலோ மேற்கொள்ளக்கூடாது. ஐயப்ப பக்தர்கள் பகல் நேரத்தில் தூங்கக்கூடாது. ஒருவேளை தூங்கினால், மீண்டும் குளித்த பின்னரே எந்த ஒரு செயலையும் மேற்கொள்ள வேண்டும். ஐயப்ப பக்தர்கள் வீட்டைத் தவிர, கடைகளிலோ அல்லது வெளியிடங்களிலோ எங்கும் உண்ணக்கூடாது. மாலை அணிந்தவர்கள், காலையில் சூரியன் உதிப்பதற்கு முன் பச்சைத்தண்ணீரில் குளிக்க வேண்டும். குளித்துமுடித்த பின் விபூதி இட்டு, விளக்கு ஏற்றி ஐயப்பனின் 108 சரணத்தையும் சொல்லி வணங்க வேண்டும். இதேப் போல் மாலையில் சூரிய அஸ்தமனத்திற்கு பின் குளித்து, காலையில் செய்ததைப் போலவே செய்ய வேண்டும்.



Leave a Comment