திருச்சானூர் பத்மாவதி கோயில் பிரம்மோற்சவம்


திருச்சானூர் பத்மாவதி தாயார் திருக்கோயிலில் கார்த்திகை மாத பிரம்மோற்சவம் புதன்கிழமை கொடியேற்றத்துடன் துவங்கியது. நவம்பர் 15 ஆம் தேதி முதல் 10 நாட்களுக்கு இந்த கொடியேற்றம் நடைபெறும். காலையில் கொடியேற்றம் முடிந்ததும், பவானி தாயார் அலங்காரத்துடன் வீதிகளில் பவனி வந்தார். முன்னதாக வருடாந்திர பிரம்மோற்சவத்திற்கு முன்தினம் கோயிலில் லட்ச குங்குமார்ச்சனை நடத்துவது வழக்கம். அதன்படி செவ்வாய்க்கிழமை காலை கோயிலில் உள்ள ஆஸ்தான மண்டபத்தில் தாயாருக்கு ஸ்நபன திருமஞ்சனம் நடத்தப்பட்டு அலங்கரித்து மண்டபத்தில் எழுந்தருளச் செய்தனர். அதன் பின்னர் பட்டாச்சாரியார்கள் குழுவினர் தாயாருக்கு எதிரில் இருபுறமும் அமர்ந்து காலை 8.30 மணிக்கு லட்ச குங்குமார்ச்சனையைத் தொடங்கினர். காலை 10.30 மணிக்கு குங்குமார்ச்சனை நிறைவு பெற்றது. பிரம்மோற்சவம் எவ்வித தடங்கலும் இல்லாமல் சிறப்பாக நடைபெற செவ்வாய்க்கிழமை மாலை நவதானியங்களை முளைவிடும் நிகழ்ச்சியான அங்குரார்பணம் நடைபெற்றது. இதையொட்டி ஏழுமலையானின் சேனாதிபதியான விஷ்வக்சேனர் தலைமையில் பட்டாச்சார்யார்கள் குழு திருச்சானூரில் உள்ள நந்தவனத்துக்குச் சென்று அங்கிருந்து புற்று மண்ணை எடுத்து வந்தனர். அம்மண்ணை கோயில் மண்டபத்தில் வைத்து அதன் மூலம் பூதேவியின் உருவத்தை வடிவமைத்தனர். அதன் வயிற்றுப் பகுதியிலிருந்து மண்ணை எடுத்து அதை பாலிகைகளில் வைத்து அதில் அர்ச்சகர்கள் நவதானியங்களை முளைவிட்டனர்.



Leave a Comment