அஷ்டமி, நவமியின் சிறப்பு!


 

சிவபெருமான் பூலோகத்திலிருக்கும் அனைத்து உயிரினங்களுக்கும் தேவையான அடிப்படைச் சக்திகளை, பாகுபாடு இல்லாமல் வழங்கச் சூரியன், சந்திரன் இருவருக்கும் தனிக் காலக்கணக்கை உருவாக்கினார். அதன்படி சூரியனும், சந்திரனும் தங்கள் பணியைச் செய்து வந்தனர். சிறிது காலத்திற்குப் பின்பு சந்திரன் தனது பணியைச் சரியாகச் செய்யாமல் அவ்வப்போது ஏமாற்றத் தொடங்கினார். இதனால் பூலோகத்தில் இருக்கும் உயிரினங்கள், சந்திரனிடமிருந்து தங்களுக்குத் தேவையான சக்தி கிடைக்காமல் துன்பமடைந்தன.

இதை அறிந்த சிவபெருமான், சந்திரனை அழைத்து பணியை ஒழுங்காகச் செய்யும்படி அறிவுறுத்தினார். சந்திரனோ, ‘இறைவா! என்னுடைய தொடர் பணிக்கு இடையில், அவ்வப்போது சிறிது ஓய்வு தேவைப்படுகிறது. ஓய்வு இருந்தால் மட்டுமே தனது பணியைச் சிறப்பாகச் செய்ய முடியும்’ என்றார். இறைவனும் அதற்கு ஒப்புக்கொண்டார்.

அதன்பிறகு சந்திரனின் பணிக்காலத்தில் சில மாற்றங்களைச் செய்தார் சிவபெருமான். சந்திரன் பணியின் இடையில் சிறிது நேரம் ஓய்வெடுத்துக் கொள்ள அனுமதி வழங்கியதுடன், பணி நேரத்தில் ஏமாற்றாமல் இருக்க, சந்திரனின் பணியை பார்வையிடுவதற்காகவும் சிலரை நியமிக்கவும் முடிவு செய்தார். அதற்காக 16 பேரை தோற்றுவித்து, அவர்களுக்கான பணி நேரத்தைத் சமமாகப் பிரித்து புதிய காலக்கணக்கை உருவாக்கினார்.

அந்தக் கணக்கின்படி சந்திரனுக்கு ஒருநாள் முழுவதும் எந்தப் பணியும் இல்லாமல் முழு ஓய்வு கொடுக்கப்பட்டது. சந்திரனின் ஓய்வுக்கு யாரும் இடையூறு செய்யாமல் பார்த்துக் கொள்ள ஒருவரை நியமித்து அவருக்கு ‘மறைமதி’ (அமாவாசை) என்று பெயரிட்டார்.

ஓய்வு நாளுக்குப் பின்பான 14 நாட்கள், சந்திரனின் பணிகளை ஒவ்வொரு நாளும் சிறிது சிறிதாக அதிகரித்தார் ஈசன். அந்த 14 நாட்களும், சந்திரனின் பணி நேரத்தை கவனிக்கவும், அவரது ஓய்வு நேரத்தை இடையூறு செய்யாமல் பார்த்துக் கொள்ளவும் 14 பேர் நியமிக்கப்பட்டனர். அவர்களுக்கு பிரதமை, துதியை, திருதியை, சதுர்த்தி, பஞ்சமி, சஷ்டி, சப்தமி, அஷ்டமி, நவமி, தசமி, ஏகாதசி, துவாதசி, திரயோதசி, சதுர்த்தசி என்று பெயரிட்டார் சிவபெருமான்.

கடைசியாகச் சந்திரனுக்கு ஒரு நாள் முழுவதும் முழுநேரப் பணியளித்து, அன்றைய தினம் அவருடைய முழுநாள் பணியையும் பார்த்துக் கொள்வதற்குத் தான் தோற்றுவித்தவர்களில் மீதமிருந்த ஒருவரை நியமித்து, அவருக்குப் பூரணை (பவுர்ணமி) என்று பெயரிட்டார்.

சந்திரனின் முழுநாள் பணிக்குப் பின்பு, ஒவ்வொரு நாளும் அவருக்குச் சிறிது சிறிதாகப் பணி நேரத்தைப் பதினான்கு நாட்களுக்குக் குறைத்துக் கொண்டே வந்தார் சிவபெருமான். இந்த நாட்களுக்கு, முன் பகுதியில் சந்திரன் பணிநேரத்தைப் பெற்ற பதினான்கு பேருக்கும், அதே வரிசையில் சந்திரனின் பணிநேரத்தையே கொடுத்துப் பணி நேரத்தைச் சமன் செய்தார்.

 

பவுர்ணமி, இறைவன் தனக்கு மட்டும் ஒரு நாள் முழுவதும் பணி நேரத்தைக் கொடுத்து விட்டதாக நினைத்து வருத்தப்பட்டது. அமாவாசை, தனக்குச் சந்திரனைப் பார்வையிடும் பணியைக் கொடுக்காமல், அவரின் ஓய்வுக்கு இடையூறு வராமல் பார்த்துக் கொள்ளும் பணியைக் கொடுத்ததை நினைத்து வருந்தியது. மற்றவர்கள், தங்களுக்குப் பணிநேரம் சமமாக இருந்தாலும், அமாவாசை, பவுர்ணமிக்கு மட்டும் ஒருநாள் முழுப்பணியாகவும், தங்களுக்குப் பகுதிப்பணிகளாக இரு நாட்கள் பணியும் கொடுத்து விட்டதை நினைத்துக் கவலையடைந்தன.

அவர்களின் கவலையை அறிந்த சிவபெருமான், ‘சந்திரனைப் பார்வையிடும் பணியைப் பெற்ற நீங்கள் அனைவரும், பூலோகத்தில் ‘திதி’ என்னும் பெயரில் அழைக்கப்படுவீர்கள்’ என்றார்.

சிவபெருமான் இவ்வாறு பேசிக்கொண்டிருந்தபோது, அஷ்டமி, நவமி ஆகியோர் இறைவனின் பேச்சை கவனிக்காமல் பேசிக்கொண்டிருந்தனர். இதைக் கண்ட இறைவன், அவர்களிடம் தான் சொல்வதைக் கவனிக்கும்படி சொன்னார்.

பின்னர் தொடர்ந்து, ‘அமாவாசையைத் தொடர்ந்து வரும் பதினான்கு நாட்களும் உங்கள் வரிசைப் பெயரிலான திதியாகவும், அவை அனைத்தும் வளர்பிறைத் திதிகள் (சுக்லபட்சம்) என்றும் அழைக்கப்படும். இதுபோல் பவுர்ணமியைத் தொடர்ந்து வரும் பதினான்கு நாட்களும் உங்கள் பெயரில் தேய்பிறைத் திதிகள் (கிருஷ்ணபட்சம்) என்றும் அழைக்கப்படும். பூலோகத்தில் இந்த நாட்களில் செய்யப்படும் அனைத்து நற்செயல்களுக்கும் உங்கள் பெயர்களும் பயன்படுத்தப்படும். அதன் மூலம் தங்களுக்குப் பூலோகத்தில் மதிப்பு கிடைக்கும்’ என்று சொல்லிக் கொண்டிருந்தார்.

அப்போதும் ஈசனின் பேச்சைக் கவனிக்காமல் அஷ்டமி, நவமி இருவரும் பேசிக்கொண்டிருந்தனர். இதைக் கண்டு கோபமடைந்த சிவபெருமான், அவர்களைப் பார்த்து, ‘நான் உங்கள் பணியைப் பற்றியும், பூலோகத்தில் உங்களுக்குக் கிடைக்கவிருக்கும் சிறப்பைப் பற்றியும் சொல்லிக் கொண்டிருந்தேன். நீங்கள் அதைக் கவனிக்காமல் பேசிக் கொண்டிருந்தீர்கள். நான் உங்களை எச்சரித்தும், அதைக் கண்டு கொள்ளவில்லை. எனவே மக்கள் உங்கள் இருவரையும் விலக்கி வைப்பார்கள். அந்த நாட்களில் எந்த நல்ல காரியங்களையும் தொடங்கமாட்டார்கள்’ என்று சாபமிட்டார். அஷ்டமியும், நவமியும் கவலையடைந்து, ஈசனிடம் சாபத்தைத் திரும்பப் பெற வேண்டினர். ஆனால் இறைவன் மறுத்து விட்டார்.

  

விமோசனம்

பூலோக மக்கள், அஷ்டமி, நவமி திதி நாட்களை எந்த நற்செயலுக்கும் பயன்படுத்தாமல் விலக்கியே வைத்தனர். பூலோகத்தில் தங்களிருவருக்கும் மதிப்பில்லாமல் போனதை நினைத்து இருவரும் கவலையடைந்தனர்.

தங்களுக்கு ஏற்பட்ட சாபத்தில் இருந்து விடுபட எண்ணிய அவர்கள் இருவரும், தங்களது ஓய்வு நேரத்தில் சிவபெருமானை வழிபட்டு வந்தனர். அவர்களின் வழிபாட்டில் மகிழ்ந்த ஈசன், ‘அஷ்டமி, நவமி திதிகளே! நான் உங்களுக்கு கொடுத்த சாபத்தில் இருந்து விடுவிக்க முடியாது. நீங்கள் இருவரும் விஷ்ணுவை சந்தித்து உங்கள் குறைகளைக் கூறுங்கள், உங்களுக்கு வேறு ஒரு நல்ல பலன் கிடைக்கலாம்’ என்று அருளினார்.

 

அதன்படி அஷ்டமி, நவமி திதிகள் விஷ்ணுவை வழிபட்டு வரத் தொடங்கினர். அவர்கள் முன்பாக தோன்றிய விஷ்ணு, ‘சிவபெருமான் கொடுத்த சாபத்தில் இருந்து உங்களை விடுவிக்க என்னாலும் முடியாது. அதே வேளையில் பூலோகத்தில் உங்களுக்கும் நல்ல மதிப்பு கிடைக்க என்னால் உதவ முடியும். அதற்கு தாங்கள் இருவரும் பல ஆயிரம் ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். உங்களால் முடியுமா?’ என்றார்.

‘இறைவா!, பூலோகத்தில் எங்களுக்கு இருக்கும் அவப்பெயர் நீங்கி, நல்ல மதிப்பு கிடைத்தால் போதும். அதற்காக எத்தனை ஆயிரம் ஆண்டுகள் வேண்டுமானாலும் நாங்கள் காத்திருக்கத் தயார்’ என்றனர்.

அதைக் கேட்ட விஷ்ணு, ‘வரும் காலத்தில் பூலோகத்தில் நிகழவிருக்கும் என்னுடைய இரு அவதாரங் களுக்குப் பின்பு, உங்களிருவருக்கும் ஆண்டுக்கொருமுறை நல்ல மதிப்பு கிடைக்கும். அதுவரைப் பொறுமையுடன் காத்திருங்கள்’ என்று சொல்லி மறைந்தார்.

சில ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு விஷ்ணு, சித்திரை மாதம், வளர்பிறை நவமி திதியில் ராமனாக அவதாரம் செய்தார். அந்த நவமியில் பிறந்ததால் அவர் பல துன்பங்களை அடைய நேர்ந்தது. என்றாலும் ராமன் பிறந்த திதி என்பதால் பின்னாளில் ‘ராம நவமி’ என்ற பெயரில் நவமி திதிக்கு ஒரு மதிப்பு ஏற்பட்டது.

ராம அவதாரத்திற்கு பிறகு பல ஆயிரம் ஆண்டுகள் கழித்து, ஆவணி மாதம், தேய்பிறையில் அஷ்டமி திதியில் விஷ்ணு கண்ணனாக அவதாரம் எடுத்தார். பிறந்த உடனேயே பெற்றோரைப் பிரிய நேர்ந்தாலும், அவர் மனித வாழ்க்கைக்கான அறிவுரைகளை வழங்கி கண்ணன் உயர்ந்து நின்றார். கண்ணனின் பிறப்பால் அஷ்டமி திதியும் நன் மதிப்பைப் பெற்றது.

சிவபெருமானால் கொடுக்கப்பட்ட சாபத்திலிருந்து முழுமையாக விடுபட முடியாவிட்டாலும், விஷ்ணுவின் அவதாரங்களால் தங்களுக்குக் கிடைத்த தனிச்சிறப்பை நினைத்து அஷ்டமி, நவமி திதிகள் மகிழ்ச்சியடைந்தன.

தங்களை விட மேலான நிலையிலிருப்பவர்கள் அறிவுரை வழங்கும்போது, அதனை காதுகொடுத்து கேட்க வேண்டும். அந்த அறிவுரைகளை அலட்சியம் செய்யக்கூடாது. அவ்வாறு செய்தால் பெரும் துன்பமும், அவமதிப்பும் வந்து சேரும் என்பதையே அஷ்டமி, நவமி திதிகளின் சாப- விமோசனக் கதை நமக்கு எடுத்துரைக்கிறது.

 



Leave a Comment