அம்பாளுக்கு உப்பில்லாத சாதம் நிவேதனம்!


 

 

 திருவண்ணாமலை அடுத்த களம்பூர் கிராமத்தில் காசி விஸ்வநாதர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. சோழர் காலத்தில் கட்டப்பட்டதை நினைவுகூறும் வகையில் மகாமேரு வடிவம்போல அமைந்துள்ளது. பிற்காலத்தில் விஜயநகர பேரரசர்களால் புதுப்பிக்கப்பட்டது. காசி விஸ்வநாதர், மூலஸ்தானத்தில் சுயம்பு லிங்கமாக காட்சி தருகிறார். இவரது திருமேனியில் அம்புபட்ட தழும்பு உள்ளது. இங்கு சுவாமி சந்நதி கிழக்கு நோக்கியும், அம்பாள் சந்நதி தெற்கு நோக்கியும் உள்ளன. காசி, ராமேஸ்வரம் தரிசனம்போல் மேற்கு நோக்கிய தலம் இது. இத்தலத்திற்கு வருகை தந்தால், காசி ராமேஸ்வரத்திற்குச் சென்றுவந்த பலன் கிட்டும் என்பது ஐதீகம். இக்கோயிலில் வளர்பிறை பிரதோஷத்தின்போது உச்சிகாலத்தில் அம்பாளுக்கு விசேஷ வழிபாடு செய்கிறார்கள். அப்போது குழந்தை பாக்கியம் இல்லாத பெண்கள் அரிசி, தேங்காய், பழம் மற்றும் உப்பில்லாத சாதத்தை நிவேதனமாக வைத்து அம்பாளை வழிபடுகிறார்கள். இவ்வாறு செய்து பலர் புத்திர பாக்கியம் பெற்றுள்ளதாக பக்தர்கள் தெரிவிக்கின்றனர். கோயிலின் தல விருட்சம், வில்வமரம். கோயிலில் பிராகார வலம் வரும்போது காசி விஸ்வநாதர், விசாலாட்சி அம்பாள் சந்நதிகளையும், கோஷ்ட தெய்வங்களாக நர்த்தன கணபதி, தட்சிணாமூர்த்தி, திருமால், பிரம்மா, துர்க்கை, பிராகார தெய்வங்களாக மகா கணபதி,சுப்பிரமணியர், சண்டீசர், பைரவர், சூரியன், நவகிரகங்கள் ஆகியோரையும் தரிசிக்கலாம். சோமூதாபுரியை ஆண்ட பாணாசூரன் தனக்கு ஏற்பட்ட சாபம் தீர பல சிவாலயங்களுக்குச் சென்று வழிபட்டு வந்தான். அப்போது களம்பூருக்கு வந்து, இப்போதுள்ள காசி விஸ்வநாதர் கோயிலில் லிங்கமொன்றை பிரதிஷ்டை செய்து வழிபட்டு சாப விமோசனம் பெற்றான் என்கிறது இத்தல புராணம். மாசி மாதத்தில் வரும் மக நட்சத்திரத்தில் தீர்த்தவாரியும், ஒன்பது நாட்கள் பிரமோற்சவமும், மாசி மகாசிவராத்திரியும் இவ்வாலயத்தில் சிறப்பாக நடைபெறும். திருவண்ணாமலையிலிருந்து போளூர் வழியாக ஆரணி செல்லும் அனைத்து பேருந்துகளும் களம்பூரில் நின்று செல்லும். ஆரணியில் இருந்து 11 கி.மீ. தூரத்திலும், திருவண்ணாமலையிலிருந்து 43 கி.மீ. தூரத்திலும் கோயில் அமைந்துள்ளது.



Leave a Comment