The Latest

தை மாதம் 2-ஆம் நாள் அனுஷ்டிக்க வேண்டிய விரதம் சாவித்ரி கௌரி விரதம். சிவனார் தனக்கருளிய இந்த விரதத்தை, தருமருக்கு போதித்தாராம் மார்க்கண்டேயர். விரத நாளன்று அதிகாலையில் எழுந்து நீராட வேண்டும். அதன்பின், குயவர் வீட்டுக்குப் போய் அவரது சக்கரத்தில் இருந்து மண்ணை எடுத்துக் கொண்டு வர வேண்டும். அந்த மண்ணால் சாவித்ரி தேவி வடிவம் செய்ய வேண்டும். பிறகு மௌன விரதம் பூண்டு முறைப்படி பூஜை செய்து, ஒன்பது முடிகள் போட்ட நோன்புக் கயிற்றைக் கையில் கட்டிக்கொள்ள வேண்டும். இவ்வாறு தொடர்ந்து 9 நாட்கள் பூஜித்து, 9-வது நாளன்று மாலையில் பூஜையை முடிக்க வேண்டும். இந்த முறைப்படி ஒன்பது ஆண்டுகள் பூஜை செய்ய வேண்டும். ஒன்பதாம் ஆண்டு பூஜையை நிறைவு செய்யும்போது ஒன்பது ஜோடி முறங்களில்...ஒவ்வொன்றிலும் ஒன்பது வெற்றிலை பாக்கு- ஒன்பது மஞ்சள் கிழங்குகள் - ஒன்பது பழங்கள் என வைக்க வேண்டும். அதன் பிறகு சுமங்கலிகளை வரவழைத்து அவர்களுக்கு மஞ்சள், குங்குமம், சந்தனம் ஆகியவற்றைத் தந்து ஒருவருக்கு ஒரு ஜோடி முறம் தந்து அவர்களை வலம் வந்து வணங்கி, வழியனுப்ப வேண்டும். அதன் பிறகே உண்ண வேண்டும். நீண்ட ஆயுள், செல்வம், சந்தான பாக்கியத்தையும் அருளக் கூடியது இந்த விரதம்.

சபரிமலையில் மகர ஜோதி தரிசனத்தை சரண கோஷம் முழங்க ஐயப்ப பக்தர்கள் மகரஜோதி தரிசனம் செய்தனர். சபரிமலை ஐயப்பன் கோயிலில் பிரசித்தி பெற்ற மகரவிளக்கு பூஜை இன்று நடைபெற்றது. அப்போது பொன்னம்பல மேட்டில் ஜோதி வடிவில் ஐயப்பன் காட்சி தந்தார். சபரிமலை ஐயப்பன் கோவிலில் தை முதல் தேதி சுவாமி ஐயப்பன் ஜோதி வடிவில் மலை முகட்டில் பக்தர்களுக்கு காட்சி அளிப்பான் என்பது ஐதீகம். இதை ஒட்டி, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலையில் குவிந்தனர். மாலை 6.30 மணியளவில் பொன்னம்பல மேட்டில் ஜோதி தெரிந்தது. மகரஜோதியை கண்டு பக்தர்கள் அனைவரும் தரிசனம் செய்தனர். வரும் 16-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை படி பூஜைகள் நடக்க உள்ளன. இதையடுத்து, பந்தளம் கொட்டார ராஜ தரிசனத்திற்கு பின்னர் கோவிலின் நடை அடைக்கப்படும்.

தைத் திருநாளில் பொங்கல் வைக்க உகந்த நேரம் எது என்று தெரியுமா? தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது. காலையில் 7.30 மணிக்கு மேல் 9.00 மணிக்குள் பொங்கல் வைப்பது நல்லது. அல்லது மதியம் 1.45 மணிக்கு மேல் 2.05 மணிக்குள் பொங்கல் வைக்கலாம். சரி பொங்கல் வைப்பது எப்படி ?
வீட்டில் வயது முதிர்ந்தவர்கள் மஞ்சள் கொத்து கட்டிய பானையை கையில் எடுத்து, கிழக்கு நோக்கி நின்று சூரியனை வழிபட்டு, அதன்பிறகு அடுப்பினை மூன்று முறை சுற்றி அந்தப் பானையை வைக்க வேண்டும். பானையில் வண்ணமயமான கோலமிட்டிருப்பது நல்லது. பின்னர் பால் பொங்கும் பொழுதும், இறைவனுக்கு பொங்கல் படைக்கும் பொழுதும் சங்கு ஊத வேண்டும். மனையில் மங்கலம் பொங்க, பால் பொங்கும் பொழுது ‘பொங்கலோ பொங்கல்.. என்று சொல்லிப் பலவிதமான காய்கறிகளை குழம்பு வைத்துப் படைத்து வழிபட வேண்டும். சர்க்கரைப் பொங்கலும், வெள்ளைப் பொங்கலும் வைப்பது நம்மவர்களின் மரபு. கூட்டாக ஒற்றுமையுடன் வாழ கூட்டுக்குழம்பு வைக்க வேண்டும். வாழ்க்கை இனிக்க, கரும்பாக அமைய, கரும்பும் வைத்து வழிபட்டால் பொங்கும் பொங்கலைப் போல் இன்பம் பொங்கும்.

கேரள மாநிலத்தில் அமைந்துள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலில், மகரவிளக்கு பூஜை நடைபெறுகிறது. இதற்காக கடந்த மாதம் 30ஆம் தேதி நடை திறக்கப்பட்டது. சபரிமலை ஐயப்பன் கோயில் பிரசித்தி பெற்ற மகரவிளக்கு பூஜை ஜனவரி14ம் தேதி நடக்கிறது. அன்று மாலை பொன்னம்பலமேட்டில் மகரஜோதி தரிசனம் நடைபெறும். மகரவிளக்கு பூஜையை கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். மகரவிளக்கு பூஜையையொட்டி ஐயப்பனுக்கு திருவாபரணம் அணிவிக்கப்படுவது வழக்கம். திருவாபரணம் பந்தளம் வலியகோயிக்கல் சாஸ்தா கோயிலில் வைக்கப்பட்டுள்ளது. இந்த கோயிலில் இருந்து ஆண்டுதோறும் திருவாபரணம் ஊர்வலமாக சன்னிதானத்துக்கு எடுத்து செல்லப்படும். ஜனவரி 14 ஆம் தேதி மாலை 6.25 மணியளவில் சன்னிதானம் அடையும். பின்னர் திருவாபரணம் ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும். பின்னர் தீபாராதனை நடைபெறும். இந்த சமயத்தில் தான் பொன்னம்பலமேட்டில் மகரதீப தரிசனம் நடைபெறும்.

தமிழகம் முழுவதும் ஏராளமான பக்தர்கள் விரதமிருந்து குலதெய்வத்தை வழிபடுவதற்காக யாதயாத்திரையாக செல்வது வழக்கம். தைப்பொங்கல் அன்று தமிழ்கடவுளான முருகனை வழிபட்டால் எல்லா நன்மையும் கிடைக்கும் என்ற நம்பிக்கையில், திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு விரதமிருந்த பக்தர்கள் பாதயாத்திரையாக வரத்தொடங்கியுள்ளனர். பக்தர்கள் அதிகாலையில் கடலில் நீராடி சுவாமி தரிசனம் செய்வர். பின்னர் தங்கள் வீடுகளுக்குச் சென்று பொங்கலிட்டு கதிரவனுக்கு படைப்பது வழக்கமாகும். பக்தர்களின் வசதிக்காக தைப்பொங்கல் அன்று அதிகாலை ஒரு மணிக்கு கோவில் நடை திறக்கப்படும் என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஒரு மணிக்கு கோயில் நடைதிறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூபம், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெறுகிறது.

மாரியம்மன் என்றால் மாரியின், அதாவது மழையின் தேவதை என்று பொருள். மாதம் மும்மாரி பொழிய மாரியம்மனைதான் வேண்டி வணங்குவார்கள் விவசாயப் பெருமக்கள். விவசாயிகள் ஆண்டு முழுவதும் விளைவித்த உணவுப்பொருட்களை எல்லாம் மார்கழியில் அறுவடை செய்து தை மாதத்தில் விற்பனைக்கு அனுப்புவர். தை முதல் நாள் பொங்கல். அரிசி, மஞ்சள், கரும்பு என எல்லா விளைபொருட்களும் மக்களிடம் வந்து சேரும் . எனவே கடந்தாண்டு வேண்டிய மழையை பெய்வித்து, விளைபொருட்களை நல்ல முறையில் விளைவிக்க அருள் செய்த மாரியம்மனுக்கு நன்றி தெரிவிக்கவே போகி பண்டிகையன்று அம்மன் வழிபாடு நடத்துகிறோம். தை மாதத்திற்கு பிறகு உஷ்ணம் தொடங்கும் என்பதால், கோடையில் பரவும் நோய்களை தடுக்கும் விதமாக அம்மாதங்களிலும் மழையை பெய்விக்க வேண்டி மாரியம்மனிடம் வேண்டிக்கொள்ள வேண்டும். மாரியம்மனுக்கு குழந்தைகள் என்றால் மிகவும் பிடிக்குமாம். எனவே மாரியம்மன் வழிபாடு என்பது குழந்தைகளுக்கு நோய் நொடிகள் ஏதும் ஏற்படாமல் பார்த்துக்கொள்வாள். போகியில் சாமி கும்பிடும்போது மாரியம்மன் பாடல்கள், மாரியம்மன் தாலாட்டு ஆகிய எளிய தமிழ் பாடல்களை பாடி அன்னையை குளிர்விக்கலாம்.

தை திருநாளின் முதல் நாளான பொங்கலன்று, கதிரவனுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பொங்கலிட்டு வழிபாடு நடத்துகிறோம். இதுவே தமிழர்களின் மரபு. எந்த நேரத்தில் பொங்கல் வைத்து வழிபட்டால் ராஜயோகம் கிடைக்கும்? செல்வம் குவியும் என ஆரூடர்கள் தெரிவித்துள்ளனர். சூரியனே எல்லாவற்றுக்கும் அதிபதி. சூரியனை வணங்கினால் பித்ருதோஷம் நீங்கும் என சாத்திரம் கூறுகிறது. எனவே சூரிய பொங்கலன்று சூரிய ஓரையில் பொங்கல் இட்டால் பல நன்மைகள் கிடைக்கும். நல்ல நேரத்திற்குள் பொங்கல் செய்துவிட்டு, பிறகு வடை, பாயாசம் மற்றும் 21 வகையான சமைத்த காய்கறிகளையும், 21 வகையான சமைக்காத காய்கறிகளையும் சூரிய பகவானுக்கு படைக்க வேண்டும். இத்துடன் மஞ்சள் கொத்து, இஞ்சி கொத்து, கரும்பு ஆகியவற்றையும் வைத்து சூரியனுக்கு கற்பூர ஆரத்தி காட்டி வணங்க வேண்டும். சூரிய ஓரையில் பொங்கல் வைத்தால் ராஜயோகம் தேடி வரும் என்கிறது ஜோதிட சாஸ்திரம். சூரிய பகவானின் ஆசிர்வாதமும் அருளும் இந்த சூரிய ஓரையில் பரிப்பூரனமாக கிடைக்கும்.

சபரிமலை சந்நிதானத்தில் ஐயப்ப விக்கிரகத்துக்கு எத்தனை பெருமை உள்ளதோ அத்தனை மகத்துவம் இங்குள்ள 18 படிகளுக்கும் கொடுக்கப்படுகிறது. இருமுடி தலையில் இல்லாமல், மாலை அணியாமல் இருப்பவர்கள் கூட சபரி மலை ஐயப்பனை தரிசித்து விடலாம். பெண்கள் எல்லோரும் கூட ஐயப்பனை தரிசித்து விடலாம். ஆனால் இருமுடி இல்லாமல், விரதம் இல்லாமல் வந்த ஒருவர் கூட இந்த படியின் மீது ஏற அனுமதிக்கப்பட மாட்டார்கள். அத்தனை பெருமை கொண்ட இந்த படிகளுக்கு செய்யப்படும் பூஜையே படி பூஜை எனப்படுகிறது. 18 மலைகளையும், 18 தத்துவங்களையும், 18 தேவர்களையும் குறிப்பதாக இந்த படிகளைச் சொல்வார்கள். மேல்சாந்தி, கீழ்சாந்தி, தந்திரிகள் மற்றும் அந்த பூஜைக்கான செலவினை ஏற்றுக்கொண்ட உபயதாரர்கள் இணைந்து இந்த படி பூஜையினை செய்வார்கள். படிகளை விதவிதமான மலர்களால் அலங்கரித்து, விளக்குகளால் ஜொலிக்கச் செய்து வாத்தியங்கள் முழங்க இந்த பூஜை பிரமாண்டமாக நடைபெறும். இந்த பூஜையைச் செய்ய இப்போது பதிவு செய்தால் 20 ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டும் என்பதில் இருந்தே இந்த பூஜை எத்தனை சிறப்பானது என்பதை நாம் புரிந்துகொள்ளலாம். சபரி மலையில் கீழ்க்காணும் எல்லா பூஜைகளும் உபயதார்களால் நடத்தப்படுவதுதான். முன்கூட்டியே பதிவு செய்து இந்த பூஜைகளை நடத்தலாம்.

சபரிமலையில் மகரவிளக்கு முன்னிட்டு சுத்திகிரியை பூஜைகள் தொடங்குகிறது. மகரஜோதி நாளில் முக்கிய பூஜையான மகர சங்கரம பூஜை நடைபெறும். இதற்கு முன்னோடியாக சுத்திகிரியைகள் தொடங்குகிறது. வெள்ளிகிழமை மாலை தீபாரதனைக்கு பின்னர் பிரசாத சுத்தி பூஜைகள் நடைபெறும். மறுநாள் உச்சபூஜைக்கு முன்பாக பிம்ப சுக்தி பூஜைகள் நடைபெறும். தந்தரி கண்டரு மகேஷ் மோகனரரு தலைமையில் மேல்சாந்தி உண்ணி கிருஷ்ணன் நம்பூதிரி மற்றும் பூஜாரிகள் இந்த பூஜைகளை நடத்துவர். மகரவிளக்கு சீசனையொட்டி கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. சந்நிதானத்தில் மட்டும் 3 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நெல்லை மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற தோரணமலை முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா ஜனவரி 28-ந்தேதி தொடங்குகிறது. தோரணமலை முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா 28-ந்தேதி தொடங்குகிறது. தென்காசி-கடையம் செல்லும் சாலையில் அமைந்துள்ள இக்கோவிலில் தைப்பூச திருவிழா வருகிற 28-ந் தேதி காலை 6 மணிக்கு தொடங்கு கிறது. அதிகாலை 5 மணிக்கு கணபதி ஹோமம் நடக்கிறது. தொடர்ந்து மூலவர்-உற்சவமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. பின்னர் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் உற்சவமூர்த்தி அந்த பகுதியில் வீதி உலா செல்லும் நிகழ்ச்சி நடக்கிறது. 30-ந் தேதி காலையில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. 31-ந் தேதி அதிகாலை 5 மணிக்கு கணபதி ஹோமம் நடக்கிறது. பின்னர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. காலை 9.05 மணிக்கு மலைஅடிவாரத்தில் உள்ள சொக்கலால் கலையரங்கில் சுவாமி- வள்ளி தெய்வானை திருக்கல்யாணம் நடக்கிறது. தொடர்ந்து ஊட்டி படுகர் இன மக்களின் பாரம்பரிய நடனமும், அன்னதானமும் நடக்கிறது. சந்திரகிரகணத்தை முன்னிட்டு மாலை 3.30 மணி அளவில் கோவில் நடை அடைக்கப்படுகிறது.

Page 1 of 34