உலகின் மிகப்பெரிய ஆலயம் - 12


பயணங்களின் அழகே அப்போது நாம் பார்க்கும் புதிய இடங்களும் சந்திக்கும் புதிய மனிதர்களும்தான். பழக்கமில்லாத இடம், மொழி, மனிதர், தட்பவெப்பம், உணவு, பார்த்திராத கட்டடக்கலை அம்சமுள்ள ஆலயங்கள், அரண்மனைகள், கோட்டை-கொத்தளங்கள்... இவைதான் நம்முடைய பயணங்களைச் சுவாரஸ்யமாக்குகின்றன.

பழக்கமான இடத்தில் என்னதான் சுற்றிச் சுற்றி வந்தாலும் நம்முடைய மனமும் உடலும் ஓய்வை உணருவதில்லை. அதனால்தான், இந்தியாவில் பக்கத்து மாநிலத்திற்குப் போனால்கூட நமக்கு விநோதமாகப்படுகிறது. முற்றிலும் புதிய இடத்தில்தான் மனம் ஓய்வை உணர்ந்து புத்துணர்ச்சி பெறுவதாக முன்பு ஒரு கட்டுரையில் படித்திருக்கிறேன்.

வாரவிறுதியின்போது அருகிலுள்ள இடங்களுக்குச் சிறு-சுற்றுலா செல்வதற்கும், வெளிநாட்டுக்குப் பயணம் மேற்கொள்வதற்கும் உள்ள வேறுபாடு கணிசமானது. இதை அனுபவத்தில் பலமுறை உணர்ந்திருக்கிறேன். சிங்கப்பூரிலிருந்து ஒரு கிலோமீட்டர் நீளமே உள்ள கடற்பாலத்தைத் தாண்டி மலேசியாவுக்குள் நுழைந்ததுமே வரும் புத்துணர்ச்சியும் விடுதலை உணர்வும் வார்த்தைகளில் வடிக்க இயலாதது.

அதற்காக சிங்கப்பூர் தாழ்த்தி என்றில்லை. சொர்க்கமாகவே இருந்தாலும் தொடர்ந்து அனுபவிக்கும்போது வரும் செல்லச் சலிப்பு அது. இங்கே பார்ப்பதற்கு வேலை எதுவும் இல்லை. விடுமுறைக்காக வந்திருக்கிறோம். ஊரைச் சுற்றி உண்டு களித்து உறங்க வேண்டியது மட்டும்தான் வேலை என்ற எண்ணமே அந்த விடுதலை உணர்வைக் கொடுக்கிறது.

என்னைப் பொறுத்தவரை உலகிலேயே மிகப் பெரிய செல்வந்தர் அதிகமான பயணங்கள் மேற்கொள்பவரே. தினமும் காலையில் ஒரு புதுநிலத்தில் கண்விழிப்பவர் பேறுபெற்றவர். 1984-இல் நான் சீர்காழிக்கு அருகிலுள்ள புத்தூர் பலதுறைத் தொழிற்கல்லூரியில் படிக்கும்போது விகடனில் ஒரு நகைச்சுவைத் தொடர்வந்தது. மெரீனா எழுதியது. தலைப்பு எங்கம்மா என்று நினைவு. அதில் வரும் முக்கியக் கதாபாத்திரம் காசிக்கும் திரிவேணி சங்கமத்துக்கும் தீர்த்தயாத்திரை போய்விட்டு வந்து பேசுவதாக மெரீனா எழுதிய வசனம் இப்போது நினைவுக்கு வருகிறது.

“அகலமான கங்கயைப் பார்த்தப்போ மனுஷாள்லாம் எவ்வளவு அற்பம்னு தோணிடுத்து. இந்தச் சின்ன வாழ்க்கைக்குள்ள எவ்வளவு சண்டை, சச்சரவு..” என்ற தொனியில் இருக்கும் அந்த வசனம். உண்மை. பயணங்களே நம்மைப் பரிசீலனை செய்ய உதவுகின்றன. நாம் வாழும் நாட்டின் நிலையை, புதிய தேசத்தோடு நம்முடைய ஆழ்மனம் ஒப்பிட்டுப் பார்த்துக் கொண்டே இருக்கிறது. அங்குள்ள மக்களின் வாழ்க்கைத் தரத்தைக் கணக்குப் போட்டுக் கொண்டே இருக்கிறது.

“அடடா இந்த ஊரில் பிறக்கவில்லையே” என்று ஒரு கணமும், “நல்லவேளை ! இந்த ஊரிலெல்லாம் நாம் பிறக்கவில்லை” என்று மறு கணமும் மனம் நினைக்கும். இரண்டுமே ஒருவகையில் நம்மைப் பண்படுத்தும். பிள்ளைகளுக்குக் கோடிக்கணக்கில் சொத்து சேர்த்து வைப்பதைக் காட்டிலும் அவர்களின் இளவயதில் ஏராளமான பயணங்களுக்கு அழைத்துச் செல்வதே பெற்றோர் செய்ய வேண்டியது என்பதே என்னுடைய நிலைப்பாடு. பயணங்களால் மனம் விசாலமடைகிறது.

அந்த வகையில், எங்கள் அனைவருக்குமே கம்போடியப் பயணம் முக்கியமானது. இந்தியாவுக்குக் கிழக்கே பல்லாயிரம் மைல் தொலைவில் ஒரு தேசம் இந்தியப் பண்பாட்டை, ஆன்மிகப் பாதையை ஏற்றுக் கொண்டு பின்பற்றி வருவது ஆச்சர்யம்தான். கம்போடிய மங்கல விழாக்களிலும், அமங்கல நிகழ்ச்சிகளிலும் இரண்டு விதமான வைதிகர்களும் இடம்பெறுகிறார்களாம் இன்றளவும். அதுபற்றி அடுத்த பயணத்தில் விரிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

உலக அளவில், யோகாசனங்கள் அதிகப் பிரபலமாகி வரும் காலம் இது. அத்தோடு யோகாசனம் பிறந்த நாட்டின் மீதும் சிலருக்கு ஈடுபாடு வந்துவிடுகிறது போலும். அங்கோர் வாட்டில் நாங்கள் சந்தித்த பெண்மணி அந்த வகையைச் சேர்ந்தவராக இருக்கக்கூடும். முதல் சுற்றுத் தாழ்வாரங்கள் பார்த்து முடித்து இரண்டாம் சுற்றுக்குள் நுழையும்போது அந்தப் பெண்மணியைச் சந்தித்தோம்.

இந்தியப் பண்பாட்டின்மீது ஆர்வமுள்ள பிறநாட்டவரோடு பேசுவது எப்போதுமே எனக்குப் பிடித்தமான ஒன்று. இந்தியாவைப் பற்றி அதன் பண்பாட்டுப் பழக்கவழக்கங்கள் பற்றி அவர்கள் என்ன புரிந்து வைத்திருக்கிறார்கள் என்று அறிந்து கொள்வதில் ஆர்வம் எனக்கு. சிங்கப்பூர் வருமுன், எனக்கு ஆங்கிலத்தில் சரளமாக உரையாடிப் பழக்கமில்லை. இருந்தாலும் சமாளிப்பேன்.

1988-ஆம் ஆண்டு சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில், பகுதிநேரப் பொறியியல் கல்வி வகுப்பு முடிந்து தினமும் இரவு தஞ்சாவூருக்கு ஒரு பாசஞ்சர் ரயிலில் நண்பர்களோடு திரும்பிச் செல்வேன். இரவு ஒன்பது மணிக்கு வகுப்பு முடிந்ததும், அவசர அவசரமாக இரவு உணவை முடித்துக் கொண்டு 9.20க்குக் கிளம்பும் ரயிலில் ஏறி உட்கார்ந்தால், பின்னிரவு ஒன்றரை மணிக்குத் தஞ்சாவூர் வந்துவிடும். அப்படி ஆறு மாதம் வரை சென்றிருக்கிறேன். அந்தப் பயணத்தில் ஒருமுறை ஆஸ்திரேலியப் பயணி ஒருவர் வந்தார். எனக்குத் தெரிந்த ஆங்கிலத்தில் அவரோடு சற்று நேரம் உரையாடினேன். அவர் பேசிய ஆங்கிலத்தைப் புரிந்து கொள்வதில் எனக்குச் சிரமம் இருந்ததால் எங்கள் பேச்சு அதிக நேரம் நீடிக்கவில்லை. என்ன பேசிக் கொண்டோம் என்பதும் இப்போது நினைவிலில்லை.

ஆனால் இப்போது நிலைமை வேறு. என்னால் தைரியமாக ஆங்கிலத்தில் உரையாட முடிகிறது. வெள்ளைக்கார ஆங்கிலமும் ஓரளவு புரிகிறது. அந்த தைரியத்தில் அந்தப் பெண்மணியோடு பேச்சுக் கொடுத்தேன். அவர் அமெரிக்காவிலிருந்து வந்திருக்கிறார். யோகாசனம் பற்றிப் படித்து அதைப் பயிற்சி செய்கிறார். அப்படியே இந்தியாவைப் பற்றிக் கேள்விப்பட்டு இந்தியாவில் சில இடங்களுக்குச் சென்று பார்த்து வந்திருக்கிறார்.

உலக அதிசயம் என்பதாலும் இந்தியப் பண்பாட்டுடன் தொடர்புடையது என்பதாலும் அங்கோர் வாட்டைப் பார்க்க வந்ததாகச் சொன்னார். அவருக்கு நான்கு வருணங்கள், நான்கு வேதங்கள், மும்மூர்த்திகள் பற்றியெல்லாம் தெரிந்திருக்கிறது. மகாபாரத, ராமாயண இதிகாசங்கள் பற்றிய அறிமுகம் உள்ளது.

ஆகவே, அங்கோர் வாட்டைத் தம்மால் ரசிக்க முடிவதாகச் சொன்னார். தொடர்ந்து இந்தியாவில் பயணம் செய்ய ஆர்வமிருப்பதாகவும் அந்தப் பெண்மணி பகிர்ந்து கொண்டார். வாழ்க்கையை எப்படி வாழ்வது என்பதை இவர்களைப் போன்றவர்களிடம் இருந்துதான் நாம் கற்றுக் கொள்ள வேண்டுமோ என்று நினைத்துக் கொண்டேன்.

நாங்கள் சந்தித்த பெண்மணிக்கு 40, 45 வயதிருக்கலாம். தன்னந்தனியாக அறிமுகமில்லாத ஒரு ஆசிய நாட்டுக்குப் புறப்பட்டு வந்து தான் விரும்பியதைப் பார்த்து ரசித்துவிட்டுப் போகிறார். மகனை டாக்டருக்குப் படிக்க வைக்க வேண்டுமே ! மகளுக்கு 200 பவுன் நகை போட்டுக் கட்டிக் கொடுக்க வேண்டுமே ! என்ற கவலையெல்லாம் இவர்களுக்கு இருக்காது என்று நினைக்கிறேன்.

நாம்தான் நமக்காக வாழாமல், நம் சந்ததிகளுக்காக சொத்துச் சேர்த்து வைத்து மறைந்து போகிறோமோ ? வாழையடி வாழையாக நம் குடும்பங்களில் இதுதான் நடக்கிறதோ ? யோசிப்போம். பிள்ளைகள் முக்கியம்தான். ஆனால், நாம் நமக்காக வாழ்வதும் எவ்வளவு முக்கியம் ? பயணங்களும் அது தரும் அனுபவங்களுமே ஈடில்லாத மகிழ்ச்சியை அளிக்கின்றன என்ற எண்ணத்தை மீண்டும் ஒருமுறை வலுப்படுத்திக் கொண்டேன்.

முதல் சுற்றுத் தாழ்வாரத்தின் வடக்குப் பகுதியில், கடவுள்கள் சண்டை போடும் காட்சிகள் ஏராளமாக இருந்தன. எது எது எந்தெந்தக் கடவுள் என்பதைக் கண்டுபிடிப்பதில் எங்களுக்குள் போட்டியே உருவானது. பிள்ளையார் இருந்தார். சிவன் ரிஷபத்தின் மேலேறியவாறு இருந்தார். கருடனின் மேல் அமர்ந்த விஷ்ணு இருந்தார். யாளி போன்ற இரண்டு உருவங்கள் இருந்தன. அன்னப் பறவை இருந்தது.

மயில் மீதமர்ந்து ஆறுமுகன் வில்லில் அம்பு தொடுக்கும் சிற்பமும் இருந்தது. போர்க்களக் காட்சிகள் எல்லாம் உக்கிரமாக இருந்தன. கருடனின் முகபாவம் போரில் கத்திக் கூச்சலிடும் பாவத்தில் இருந்தது. கிழக்குப்புறத் தாழ்வாரத்தில் இருந்த சிற்பங்களைக் காட்டிலும் இங்குள்ள புடைப்புச் சிற்பங்கள் சற்று நெருக்கமாகச் செதுக்கப்பட்டிருந்ததுபோல் எனக்குத் தோன்றியது.

மேலும் இந்தப் பக்கத்திலிருந்த சிற்பங்களில் வழுவழுப்புத்தன்மை அதிகமிருந்தது. அது பயணிகளின் கைபட்டு உருவான வழவழப்பா இல்லை இயல்பே இப்படித்தானா என்று தெரியவில்லை. ஆடை, ஆபரண வடிவங்களும் சற்றுத் துல்லியமாகத் தெரிந்தன இந்தச் சிற்பங்களில். அவரவருக்குப் பிடித்த சிற்பங்களின் அருகே நின்று கூடுதல் நேரம் செலவிட்டதால், நாங்கள் ஐவருமே தள்ளித் தள்ளி நின்று கொண்டிருந்தோம். கேமராவில் படம்பிடிக்க முடியாமல் எல்லாருமே திறன்பேசிகளைத் தஞ்சமடைந்திருந்தோம்.

இந்தப் பக்கத்துச் சிற்பங்கள் ஓரளவு நன்கு அடைபட்டன படக்கருவிகளுக்குள். ஐவரும் ஓரிடத்தில் ஒன்றுதிரண்டு, வழிகாட்டியோடு இரண்டாம் சுற்றுத் தாழ்வாரத்தை இணைக்கும் பாதைக்குள் புகுந்து இரண்டாம் சுற்றை அடைந்தோம். இங்கே தூண்களில்தான் புடைப்புச் சிற்பங்கள் இருந்தன. முதலில் நினைத்ததுபோல் இங்குள்ள சுவர்களில் புடைப்புச் சிற்பங்கள் இல்லை. இந்தப் பகுதியைச் சுற்றி வரும்போதே நடுவிலுள்ள மூன்றாவது முக்கிய அடுக்கு, பலகணி வழியாக வந்து வந்து சென்றது. இந்தச் சுற்றை வேகமாகவே வலம் வந்துவிட்டோம்.

உயரம் இப்போது அதிகரித்துவிட்டபடியால், சுற்றிலுமுள்ள இடங்கள் தெளிவாகத் தெரிய ஆரம்பித்தன. ஒரே பார்வைக்குள் அடங்கும் ஆலயத்தின் அளவு அதிகரித்திருந்தது. அது ஒரு புதுக் கோணத்தைத் தந்தது எங்களுக்கு. இப்போது முக்கிய மூன்றாவது அடுக்கின் கீழ்ப் பகுதிக்கு வந்துவிட்டோம். இங்கேயும் இரண்டு நூலக இடிபாடுகள் இருந்தன வடக்கிலும் தெற்கிலும். அதற்குள் ஏறிப் பார்க்கவில்லை.

திசைக்கு ஒன்றாக நான்கு மேருக்கள். நான்கு பக்கத்திலும் ஒன்றுக்கு மேற்பட்ட செங்குத்தான படிகள் மேல்புறத்தை நோக்கிச் சென்றன. பக்கத்து மூன்று விகிதத்தில் மொத்தம் 12 படிக்கட்டுகள் இருக்குமென நினைக்கிறேன். படிக்கட்டுகளை ஏறிக் கடக்கும்போது பக்கவாட்டிலுள்ள கைப்பிடிகளைப் பிடித்தவாறுதான் செல்ல முடியும். அவ்வளவு செங்குத்தான படிகள். பொதுவாகப் படிக்கட்டுகள் 45 டிகிரி சாய்மானத்தில் கட்டப்படும். அதற்கும் கீழான சாய்மானம் என்றால் சறுக்குப் பாதை மாதிரி எளிதில் ஏறிவிடலாம். ஆனால் 45 பாகையைத் தாண்டிவிட்டால் படிக்கட்டுகளை ஏறுவதில் சிரமம் அதிகரித்துக் கொண்டே போகும்.

அதை ஈடுகட்ட படிக்கட்டுகளின் உயரத்தைக் குறைத்தாலும் பத்தாது. மகாமேருவை நோக்கிய அங்கோர் வாட் ஆலயப் படிக்கட்டுகள் அநேகமாக 60 அல்லது 70 பாகைக் கோணத்தில் இருக்குமென்பது என்னுடைய ஊகம். படிகளின் எண்ணிக்கையும் அதிகம். மூன்று, நான்கு மாடி உயரத்துக்குப் படிகள் இருந்தன. அவற்றுள் கிழக்குப் புறத்தில் மட்டும் ஓரிடத்தில் கற்படிகளுக்கு மேலே மரப்படிகள் அமைத்து ஏறிச் செல்ல வழிவைத்துள்ளனர். எஞ்சிய எல்லாப் படிக்கட்டுகளையும் வேலி போட்டு மறித்துள்ளனர்.

ஏறுவதற்கு ஒன்று. இறங்குவதற்கு ஒன்று என இரண்டு படிக்கட்டுகள். ஏனென்றால், ஒரே படிக்கட்டில் ஏறுபவரும் இறங்குபவரும் சந்தித்தால் விபத்து நேரும் வாய்ப்புகள் அதிகம். பிள்ளைகளைப் படிக்கட்டில் விளையாட வேண்டாம் என்று எச்சரித்துதான் மேலே அனுப்புகிறார்கள். வயதானவர்களைக் கூடவே ஒருவர் கையைப் பிடித்து அழைத்துச் செல்வது நல்லது. ஒவ்வொரு படியிலும் நின்றே அடுத்தபடியில் ஏற முடிகிறது.

இப்படி நாம் முதலில் ஏறி அடைவது வடகிழக்கு மூலையிலுள்ள மேருவின் கீழ்ப்பகுதி. அதன் வாசலின் மேலே உள்ள நிலைப் பகுதியில் நாக தோரணம் அமைக்கப்பட்டுள்ளது. நம்ம ஊர் கோயில்களில் யாளி, மகர தோரணம் இருக்கும் பெரும்பாலும். இங்கே எல்லா வாயில்களுக்கு மேலேயும் நாக தோரணம்தான். தோரணத்துக்கு உள்ளே பெரும்பாலும் போர்க்களக் காட்சிகள். விலங்குகள். பக்கவாட்டுத் தூண்களில் அப்சரஸுகள். நான்கு திசைகளிலும் உள்ள நான்கு மேருக்களையும் இணைக்கும் தாழ்வாரம் இரண்டு விதமான உயரங்களில் உள்ளது.

அந்தத் தாழ்வாரத்துக்கும் நடுவிலுள்ள மகாமேருவுக்கும் இடைப்பட்ட இடம் ஒவ்வொரு திசையின் நடுப்பகுதியிலிருந்து மேருவை நோக்கிச்  செல்லும் இணைப்புச் சாளரங்களால் பிரிக்கப்பட்டிருக்கிறது. ஆகவே அந்த இடத்தில் நான்கு தொட்டி போன்ற பகுதி உருவாகிப் பள்ளமாக இருக்கிறது. மேலிருந்து பார்க்கும்போது ஏராளமான கற்கள் பெயர்ந்து கிடப்பது தெரிகிறது. நிலநடுக்கத்தின் பாதிப்பா அல்லது காலப் போக்கில் தானாக இடிந்து விழுந்தவையா என்பது தெரியவில்லை.

இந்தப் பகுதியிலுள்ள ஒரு மண்டபம் வானம் பார்க்கத் திறந்து கிடந்தது. ஆலயத்தின் முன்புறமும் பின்பிறமும் நீண்ட பாதைகள் தெரிந்தன. சுற்றிலும் பசுமை. கண்ணுக்கெட்டிய தூரம் வரையில் பசுமை.. பசுமையைத் தவிர வேறில்லை. மேலே வந்ததும் காற்று பலமாக வீசத் தொடங்கியது. வியர்வையில் ஊறியிருந்த சட்டை உலரத் தொடங்கியதால் புதுத் தெம்பு வந்தது போலிருந்தது எல்லாருக்கும். ஒவ்வொரு திசையிலும் தெரிந்த காட்சி, ஏற்கனவே பார்த்த காட்சியை விடவும் மேம்பட்டதாக இருப்பது போலிருந்தது எங்களுக்கு.

எதிரே அடுக்கடுக்காகத் தெரிந்த கோபுரங்கள் கேரள பாணிக் கோயில்களை நினைவுபடுத்தின. நான்கு மூலைகளிலும் தாழ்வாரங்கள் முடியும் இடத்தில் அடுக்கடுக்காக எழுந்து மேரு உருவாகியிருந்தது. இன்னமும் அந்த இடங்களைச் சீரமைக்கும் பணி தொடர்கிறது. ஆலயப் பகுதிகளை மூடி வைத்து உள்ளே வேலை நடப்பதைப் பார்க்க முடிந்தது.

கீழே இருந்த மண்டபங்கள் இடைவெளியோடு கூடிய பாதைகளால் இணைக்கப்பட்டிருந்தன. ஒரு பார்வையில் அந்த மண்டபங்கள் நமது ஊர் தெப்பக்குளங்களின் நடுவே காணப்படும் நீராழி மண்டபங்கள் போலிருந்தன.

இந்த உயரத்திலிருந்து தென்படும் காட்சி என்னை என்னவோ செய்தது. பாழடைந்து சிதிலமாகிப் போன ஒரு பேராலயத்தின் மேலே நிற்கிறோம். இதைக் கட்டி முடித்தபோது இந்த இடம் எவ்வளவு புதுக்கருக்குடன் இருந்திருக்கும் ? இரண்டாம் சூரியவர்மனும் இந்த இடத்தில் நின்று பார்த்திருப்பார்தானே ? அப்போது அவர் மனத்தில் என்னென்ன நினைத்திருப்பார் ? உலக அதிசயமொன்றை உருவாக்கிவிட்டோமென்பதை அப்போது அவர் உணர்ந்திருப்பாரா ? அதற்காகப் பெருமைப்பட்டிருப்பாரா ?

கீழே கற்கள் சிதறிக் கிடந்தன. மேலிருந்து பார்க்கும் கோணத்தில் கோயில் அலங்கோலமாகக் கிடப்பது போல் பட்டது எனக்கு. தொலைவில், மண்ணிலிருந்து மொத்தமாகப் பார்க்கும்போது இருந்த வடிவமைதி இப்போது காணாமற் போயிருந்தது. கோயிலின் சில பகுதிகளில் ஆங்காங்கே பச்சைப் பாசி படர்ந்திருந்தது. காரணமின்றி என்னைச் சோகம் கப்பிக் கொண்டது. மிகப் பழமையான இடங்களில் இருக்கும்போது மட்டுமே என்னால் உணரக் கூடிய வகையான சோகம்....

- பொன். மகாலிங்கம்

 

 

பொன். மகாலிங்கம் - சிங்கப்பூர் தொலைக்காட்சியில் பணியாற்றும் மூத்த இதழியலாளர். சென்னையின் முன்னணி ஊடகத்தில் முக்கியப் பொறுப்பில் இருந்தவர். சகமனிதர்கள் மீது அளவற்ற அன்பும், பாசமும் கொண்ட பண்பாளர். தமிழ் மீதும், பயணங்களின் மீதும் உள்ள அலாதியான ஆர்வம் காரணமாக அடிக்கடி எங்காவது புராதன இடங்களை தேடிச் சென்று அவற்றை தமது அழகு தமிழால் கட்டுரைகளாக்கி, வரும் தலைமுறைக்கு தகவல் பொக்கிஷங்களை சேர்ப்பதில் நாட்டம் கொண்டவர். அவரை தொடர்புகொள்ள - ponmaha2000@yahoo.com



Leave a Comment