உலகின் மிகப்பெரிய ஆலயம் - பாகம் 10


            திருப்பாவையில் எருமைச் சிறு வீடு என்று ஒரு வரி வரும். இரவில் கட்டியிருந்த மாட்டைக் காலையில் மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்லக் கட்டை அவிழ்த்து விட்டதும் அது ஓடிப் போய் அருகே உள்ள புல்லைக் கரம்பத் தொடங்கும். பெரிய மேய்ச்சல் அப்புறம். முதலில், பசிக்கு இந்தப் புல்லை மாடுகள் மேயும் என்று எங்கோ படித்த நினைவு.

            அதுபோலத்தான் நாங்களும், அதிகாலையில் எருமைச் சிறு வீடு மேய்ந்துவிட்டு விடுதிக்குத் திரும்பினோம். அங்கோர் வாட்டை விரிவாகப் பார்க்கும் முன்னால், புலரும் பொழுதில் கொஞ்சமாக அதன் அழகைப் பருகிவிட்டோம். விடுதியில் எங்கள் அறைக்கு வெளியே மலைச் சுனைபோல் அடக்கமான அழகான நீச்சல்குளம் என்னை வா வா என்று அழைத்துக் கொண்டே இருந்தது.

            கடைசி வரை அதில் குளிக்க முடியவில்லை. பார்த்துப் பருகியதோடு சரி. ஒவ்வொரு நாளும் அதைப் பார்க்கும்போதும் நானும் பரணியும் “இன்னைக்கு ராத்திரி இதுல விழுந்திரணும்” என்று சொல்லிக் கொண்டே இருந்தோமேயொழிய விழவே இல்லை. இப்போது நினைத்தாலும் வருத்தம்தான். சரி போகிறது.

            குளித்துப் பசியாறி மீண்டும் ஆலயத்துக்குத் திரும்பினோம். வெளியிலேயே ஆங்கிலம் பேசும் ஒரு வழிகாட்டியை அமர்த்திக் கொண்டோம். ஆலயத்திற்கு வெளியிலுள்ள ஒரு மரத்தின்கீழ் அந்தக் கம்போடிய தட்சிணாமூர்த்தி எங்களுக்கு அரை மணி நேரத்துக்கு அடிப்படை விவரங்களை விளக்கினார். ஆனால், பெரிதாக எதுவும் மனத்தில் தங்கவில்லை.

            ஆலயத்தைச் சுற்றிப் பார்த்த அரை நாளில் அவரிடம் இருந்து நாங்கள் தெரிந்து கொண்டதைக் காட்டிலும் எங்களிடம் இருந்து அவர் தெரிந்து கொண்டதுதான் அதிகம். நாங்கள் இந்தியாவிலிருந்து வந்தவர்கள் என்பது ஒரு காரணம். எங்கள் ஐவருக்குமே கலை, புராணம், சிற்பம் ஆகியவற்றில் குறைந்தபட்ச அறிமுகம் இருந்தது அடுத்த காரணம்.

            எந்தவொரு சிற்பத்தைப் பார்த்ததும், அதை எங்களால் இந்துப் புராணக் கதைகளோடு தொடர்புபடுத்திப் புரிந்துகொள்ள முடிந்தது. பெயர்களும் பெரும்பாலும் ஒத்துப் போயின. கெமர் மொழியில் ஒலி வேறுபாடு காரணமாகச் சில பெயர்கள் மாறியிருந்தன. திரும்பத் திரும்ப உச்சரித்துப் பார்த்தால் அதிலிருந்து நமக்குப் பரிச்சயமான பாத்திரங்களின் பெயர்களை எடுத்துவிட முடியும்.

            அங்கோர் வாட் 12ஆம் நூற்றாண்டின் முற்பாதியில் கட்டப்பட்ட பேராலயம். இரண்டாம் சூரியவர்மன் என்னும் மன்னன்தான் இதைக் கட்டியிருக்கிறான். கட்டுமானப் பணிகள் சுமார் 30 ஆண்டுகள் நீடித்ததாகக் கம்போடிய பயணத்துறைக் குறிப்பு மதிப்பிடுகிறது. இது விஷ்ணுவுக்காக எழுப்பப்பட்ட பேராலயம்.

            வாட் என்றால் கெமர் மொழியில் ஆலயம் என்று பெயர். தாய்லந்திலும் அப்படியே. தாய்லந்து சென்றிருந்தபோது அங்கிருந்த ஆலயங்களெல்லாமே வாட் என்றுதான் முடிந்தன. சோப்ராயா என்னும் அகண்ட நதியின் கரையில் அழகான சுதை வேலைப்பாடுகளோடு திகழும் ஆலயத்தின் பெயர் அருண்வாட். அதாவது அருணன், சூரியனின் ஆலயம். வெறுமனே வாட் என்றிருந்த பெயரோடு பிற்காலத்தில் அங்கோர் என்னும் சொல் இணைந்து கொண்டது.

            வைணவர்களால் கைவிடப்பட்டுப் பின்னர் தேரவாத பௌத்தர்கள் இந்தக் கோயிலை எடுத்துக் கொண்டபோது அவ்வாறு நடந்திருக்க வேண்டும். இது அநேகமாக 16-ஆவது நூற்றாண்டில் நடந்திருக்கலாம் என்பது ஊகம். கெமர் பேரரசின் தலைநகரம் 1432-இல் புனோம்பென்னுக்கு மாறிய பிறகு நடந்த மாற்றம் இது. அதன் பிறகு பௌத்த பிக்குகளே அங்கோர் வாட்டைப் பராமரித்து வந்திருக்கிறார்கள். இப்போதும் நீங்கள் பௌத்த பிக்குகளையே அங்கோர் வாட்டில் அதிகம் காணமுடியும்.

            பொதுவில், அங்கோர் வாட் ஆலயம் இரண்டாம் சூரியவர்மனின் ஈமச் சடங்கு ஆலயம்தான் என்கின்றனர் வரலாற்றாசிரியர்கள். ஆலயம் மேற்குப் பார்த்துக் கட்டப்பட்டிருப்பது அதற்கு ஒரு முக்கியக் காரணம். பொதுவாக இந்து ஆலயங்கள் கிழக்குப் பார்த்தே கட்டப்படும். சூரிய உதயத்தின்போது ராஜகோபுரத்தின் மீதும் விமானத்தின் மீதும் கதிர்கள் படுவதை எல்லாரும் கவனித்திருக்கலாம்.

            ஆனால், அங்கோர் வாட்டோ அஸ்தமன சூரியனை நோக்கி மேற்குப் பார்த்துக் கட்டப்பட்டுள்ளது. மேலும், ஆலயத்திற்குள் இருக்கும் புடைப்புச் சிற்பங்களும், அப்பிரதட்சணமாகச் சுற்றிவந்து அதாவது கடிகார எதிர்ச் சுற்றில்வந்து பார்ப்பது போல் செதுக்கப்பட்டுள்ளன. ஆகவே இது இறைவனுக்கான மங்கலக் கோயிலாக இருக்க முடியாது. அமங்கலக் காரியத்துக்கான ஆலயம் என்பது பலரின் வாதம்.

            ஆலயத்தின் நடுப் பகுதியிலுள்ள ஐந்து மேருக்களில் ஆகப் பெரியதான மகா மேருவுக்கு நேர் கீழே மாபெரும் சதுரக் குழாய் போன்ற துளையின் அடிப்பகுதியில் இரண்டு ஸ்படிகக் கற்களையும் இரண்டு தங்க இலைகளையும் 1934-இல் தொல்பொருள் ஆய்வாளர்கள் கண்டெடுத்திருக்கிறார்கள். 

         அதன் மேல்பகுதியில்தான் சூரியவர்மன் நிறுவிய பெரிய விஷ்ணு சிலை நின்றிருக்க வேண்டும். இப்போது அந்த விஷ்ணு சிலை ஆலயத்தின் முன்பகுதியில் பார்வையாளர்கள் உள்ளே நுழையும் பகுதியில் நிற்கிறது. எப்படி அங்கே வந்தது என்று யாருக்கும் தெரியவில்லை. பௌத்தர்கள் கருவறை போன்ற பகுதியில் புத்தர் சிலைகளை நிறுவியபோது இந்த விஷ்ணுவை இறக்கிக் கீழே கொண்டுவந்து வைத்திருக்கலாம் என்கின்றனர் சிலர்.

            விஷ்ணு சிலையின் கையெல்லாம் உடைந்து பிற்காலத்தில் சிமெண்ட் பூசிச் சீராக்கப்பட்டுள்ளது. ஆனால், பெரிய பாதிப்பு இல்லை. புத்தரைப் போலவே விஷ்ணுவுக்கும் தாமரை மலர்களைச் சாற்றி வழிபட்டு வருகின்றனர். எட்டுக் கைகள். ஆக மேலே இருந்த இரண்டு கைகளிலும் சங்கும் சக்கரமும் இருந்ததற்கான தடயங்களைப் பார்க்க முடிந்தது. மற்ற ஆறு கைகளில் என்னென்ன படைக்கலங்கள் இருந்தன என்பது தெரியவில்லை. எட்டில் மூன்று கைகள் உடைக்கப்பட்டுச் சீர் செய்திருப்பதுபோல் தெரிகிறது. நிழற்படத்தைக் கணினியில் பெரிதாக்கிப் பார்க்கும்போதுதான் அதை உணரமுடிகிறது.

            விஷ்ணு சிலை 4 ஆள் உயரம் இருக்கும். அண்ணாந்துதான் பார்க்க வேண்டும். புத்தரைப் போலவே தாழ்செவிகள். அப்பட்டமான கெமர் முகம். தடித்த உதடுகள். அரைக்கண் மயங்கிய நிலையில் கீழ்நோக்கிக் காணும் விழிகள். கெமர் பாணியிலான மகுடம். உடலில் என்னென்ன அணிகலன்கள் இருந்தன என்பதைப் பார்க்க முடியவில்லை. முகம், வலத்தோள்பட்டை, கைகள் தவிர மற்ற எல்லாப் பாகங்களையும் அசிங்கமான மஞ்சள் வண்ண ஜிகினா துணியால் தாவணி போடுவது போல் போர்த்தி வைத்திருந்தனர்.

            பழமையான பஞ்சலோகச் சிலைகளுக்கும் சிற்பங்களுக்கும் ஆடை உடுத்தி இருப்பதைப் பார்த்தாலே எனக்குப் பற்றிக் கொண்டுவரும். என்ன ரசனை இது ? எல்லாச் சிற்பிகளும் அந்தந்தச் சிலைகளுக்குப் பொருத்தமான நுண்ணிய வேலைப்பாடுகளுடன் கூடிய ஆடைகளைச் சேர்த்தேதான் வடித்திருப்பார்கள். சிலைகளின் முழுமையான அழகை வெற்றுத் திருமேனியில்தான் நம்மால் கண்டு திளைக்க முடியும். நடராஜப் பெருமான், சிவகாமி, சோமாஸ்கந்தர், நர்த்தன கிருஷ்ணன், ஞானசம்பந்தன்-என ஒருவர் பாக்கியில்லை.

            அத்தனை மூர்த்தங்களுக்கும் வேட்டியைத் தார்பாய்ச்சிக் கட்டி, அம்மனுக்கு அழகாக மடிசார் கட்டி முகத்தைத் தவிர எல்லாவற்றையும் மறைத்துவிடுகிறார்கள். முகத்திலும் பெரும்பகுதியை மலர் அலங்காரம் மூடிவிடும். பார்த்துப் பார்த்து வெதும்பத்தான் முடிகிறது. ஐக்கிய நாட்டு அமைப்பிலிருந்து ஓர் உத்தரவு வந்தால் தேவலாம். இறைத் திருமேனிகளுக்குச் செயற்கை ஆடை அணிவிக்கக் கூடாது என்று. நடக்கிற காரியம் இல்லைதான். ஆனாலும் மனம் ஆற மாட்டேனென்கிறது. செப்புத் திருமேனிதான் என்றில்லை. சில இடங்களில் புடைப்புச் சிற்பங்களுக்குக்கூட ஆடை கட்டி விடுகிறார்கள். சந்தனக் காப்பு செய்து வைக்கிறார்கள்.. கடவுளே.. அடித்துக் கொள்ள இரண்டு கைகள் போதா.. அங்கோர் வாட் விஷ்ணு சிலையை மேலும் விகாரப்படுத்தும் வகையில், ஒரு பெரிய பிளாஸ்டிக் மாலையைப் போட்டு வைத்திருக்கிறார்கள். விஷ்ணுவின் முகக் குறிப்பைப் பார்த்தால் “பாவிகளா இந்தக் கண்ணராவியை எல்லாம் எடுத்துப் போட்டுட்டு என்னை நிம்மதியா விடுங்களேண்டா” என்று கெஞ்சுவது போல்பட்டது எனக்கு.

            விஷ்ணு சிலை அகற்றப்பட்ட கருவறையை பௌத்தர்கள் திசைக்கு ஒன்றாக நான்காய்ப் பிரித்திருக்கிறார்கள். நடுவிலிருந்த சதுரத் துளையைக் கல்வைத்து நிரப்பிக் கட்டியுள்ளனர். உண்மையில் மேற்கு நோக்கிய விஷ்ணு சிலையோடு நான்கு பக்கங்களும் திறந்த கருவறையாக அது இருந்திருக்க வேண்டும். இப்போது நிலைச் சட்டத்தோடு சேர்த்து அடைக்கப்பட்டு நான்கு தனித்தனிக் கருவறையாகப் பிரிந்துவிட்டது.

            ஒவ்வொரு திசையிலும் ஒவ்வொரு விதமான புத்தர் சிலை. அவற்றில் சிலவற்றின் தலை வெட்டப்பட்டுள்ளது. உள்நாட்டுப் போர் நடந்த காலத்தில் நடந்த கொடூரம் இது. தலை வெட்டப்பட்ட புத்தர் சிலைகளைக் கம்போடியா முழுவதும் காணமுடியும். கம்போடிய புத்தர் சிலைகளுக்கு அனைத்துலகக் கலைப் பொருள் சேகரிப்பாளர்களிடம் கிராக்கி அதிகம்.

            மொத்தச் சிலையை அகற்றி எடுத்துச் செல்வது எளிதல்ல. அது மாபெரும் பணி. பாரந்தூக்கி இல்லாமல் எங்கும் எடுத்துச் செல்ல முடியாது. ஆகவே, கத்தியை வைத்து வெண்ணெய் வழிப்பது மாதிரி, இயந்திரத்தால் நறுவிசாகக் கழுத்தில் ஒரு நறுக் !.. புன்னகை உறைந்த புத்தர் தலை கையில் வந்துவிடும். சாக்கில் கட்டி எடுத்துப் போய் கிடைத்த விலைக்கு விற்றுவிடலாம். ஒரு காலத்தில் கேட்பாரற்றுக் கிடந்த இடம். யாரும் வரலாம். என்னமும் செய்யலாம்.

நல்லவேளை தமிழ்நாட்டுக் கோயில்களுக்கு இன்னமும் இந்த கதி வரவில்லை. உடைந்துபின்னமான சிலைகளைத்தான் தமிழகக் கோயில்களில் பார்த்திருக்கிறேன். அதுவும் கைக்கெட்டும் தூரத்திலுள்ள புடைத்து வெளிவரும் பகுதிகள் மட்டுமே உடைந்திருக்கும். சிதம்பரம் கிழக்குக் கோபுரத்திலிருக்கும் அற்புதமான மகிஷாசுரமர்த்தினி சிலை அதற்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டு. அந்தப் பேரெழில் சிற்பத்தின் கைகள் உடைபட்டு நடுவே ஓட்டை தெரியும். பார்க்கப் பார்க்க வேதனையாக இருக்கும். இதையும் உடைக்க ஒரு மனிதனுக்கு மனம் இருந்திருக்கிறதே.. மாலிக்காபூர் படையெடுப்பின்போதுதான் பெரும்பாலான தமிழ்நாட்டுச் சிற்பங்கள் உடைக்கப்பட்டதாகப் படித்திருக்கிறேன்.

         யார் “கைங்கரியமோ” தெரியவில்லை. சில இடங்களில் மூக்குப் பகுதி உடைபட்டிருக்கும். கம்போடியா போலக் கழுத்திலிருந்து முகத்தை அறுத்து எடுக்கப்பட்ட சிலைகளைப் பார்த்ததில்லை. போர்ப் பயிற்சியின்போது துப்பாக்கியால் சுடப்பட்ட சுவர்ப்பகுதிகளும் கம்போடியாவில் உண்டு. அண்மையில் மும்பையிலுள்ள எலிஃபண்டா கேவ்ஸ் சென்று வந்த ராஜூ சொன்னார். “போர்த்துக்கீசியர் ஆக்ரமிப்பின்போது அங்கிருந்த அழகான சிலைகளை துப்பாக்கி சுடும் பயிற்சிக்கான இலக்குகளாகப் பயன்படுத்தியிருந்ததைப் பார்த்தேன்” என்று. மனசுக்குள் உடனே மாபாவிகளா ! என்று கூவிவிட்டேன்.

            எப்படித்தான் கையும் மனமும் வந்ததோ இந்தப் பொக்கிஷங்களைப் பாழ்படுத்த.. மாலிக்காபூர் வரவில்லையென்றாலும்கூடக் கம்போடிய விஷ்ணு தப்பவில்லை. ஏதோ இந்த மட்டுக்குமாவது உருவமென ஒன்று பார்க்கக் கிடைக்கிறதே.. அதுபோதும். இந்த மனநிறைவோடு ஆலயத்திற்குள் புகுந்தோம்.

- பொன். மகாலிங்கம்

 

 

 

சிங்கப்பூர் தொலைக்காட்சியில் பணியாற்றும் மூத்த இதழியலாளர். சென்னையின் முன்னணி ஊடகத்தில் முக்கியப் பொறுப்பில் இருந்தவர். சகமனிதர்கள் மீது அளவற்ற அன்பும், பாசமும் கொண்ட பண்பாளர். தமிழ் மீதும், பயணங்களின் மீதும் உள்ள அலாதியான ஆர்வம் காரணமாக அடிக்கடி எங்காவது புராதன இடங்களை தேடிச் சென்று அவற்றை தமது அழகு தமிழால் கட்டுரைகளாக்கி, வரும் தலைமுறைக்கு தகவல் பொக்கிஷங்களை சேர்ப்பதில் நாட்டம் கொண்டவர். அவரை தொடர்புகொள்ள - ponmaha2000@yahoo.com 



Leave a Comment