உலகின் மிகப்பெரிய ஆலயம் - 5


ஒரு மரத்துக்குக் கீழே நின்று கொண்டு தண்ணீருக்குள் அமிழ்ந்திருக்கும் லிங்கங்களைப் படம் எடுத்துக் கொண்டிருக்கும்போது பரணி கத்தினார். மகா, சிவன் மேல ஒரு பாட்டுப் பாடுங்களேன் என்று. நானே கிட்டத்தட்ட நெகிழ்ந்து போய், அந்த மனநிலையில்தான் இருந்தேன். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ME படிக்கும்போது நானும் நண்பர் சந்துருவும் கோயில் கோயிலாகப் போவோம். கங்கை கொண்ட சோழபுரமும் தாராசுரமும் எங்கள் இருவருக்கும் ஆகப் பிடித்தமான ஆலயங்கள்.

ஒவ்வொருமுறை போகும்போதும் கருவறைக்கு அருகே நின்று சில பாடல்களைப் பாடுவது எங்கள் இருவருக்குமே மிகவும் பிடிக்கும். அதிலும் சந்துரு “இடது பதம் தூக்கி ஆடும் நடராஜனடி பணிவயே..நெஞ்சே”” என்ற பாடல் என்னை உருக்கிவிடும். சந்துரு புல்லாங்குழல் வாசிப்பதிலும் கெட்டிக்காரர். நாங்கள் போகும் முன்மாலை வேளையில் பெரும்பாலும் ஆளரவம் இருக்காது பழைய கோயில்களில். நேர்த்திக் கடன் செலுத்தும் பழக்கமுள்ள கோயில்களில்லை என்பதால், பக்தர்கள் யாரும் சீந்தாத கோயிலாகத்தான் இருக்கும் நாங்கள் போகும் கோயில்கள்.

அந்தக் காலத்தில் எங்களிடம் அதிகக் காசு இருக்காது. முதலில் சாமி கும்பிட்டு தீபாராதனை முடித்து 2 ரூபாய் அல்லது 5 ரூபாய் தட்டில் போட்டாலே பெரிசு எங்கள் இருவருக்கும். அதனால், அர்ச்சகரும் எங்களை அவ்வளவாகக் கண்டுகொள்ள மாட்டார். தீபாராதனை முடிந்ததும் ஆச்சு என் கடமை என்று போய் முன்னால் உட்கார்ந்து விடுவார். அதற்கப்புறம், சந்துரு மெல்ல முனகிப் பாட ஆரம்பிப்பார். திடீரென ஊற்றுக்கண் திறந்து கிணற்றில் குளிர்நீர் பீறிடுவது போல சந்துருவின் வெண்கலக் குரல் கர்ப்பக்கிருஹத்தை நோக்கிப் பாயும் அந்தக் கணம்.... ஆஹா.. நான் பேறுபெற்றவன்..

லிங்கத் திருமேனி சிலிர்த்து வாடிய மலர்களெல்லாம் மீண்டும் புதுசாய்ப் புஷ்பித்து விட்டது போன்ற எண்ணம் உண்டாகும். எண்ணெய் விளக்கின் ஒளியும் அறுபது வாட்ஸ் குண்டு பல்பின் ஒளியும் அந்தகாரத்தைக் கூட்ட, சந்துருவின் குரல் முன்மண்டபத்தில் அலை அலையாய்ப் பரவும். குறுகலான மண்டபம் குரலை வெகு இனிமையாக்கி எதிரொலிக்கும்.

வெளியே போன அர்ச்சகர் ஓட்டமும் நடையுமாய் உள்ளே வருவார். வந்து அருகில் நின்று கொள்வார். கைகளை மார்பில் கோத்துக் கொண்டு கண்ணாடி வழியே சிவலிங்கத்தை மட்டுமே பார்த்துக் கொண்டு உடல் அசையாமல் பாடுவார் சந்துரு. அந்நேரம் அது வேற சந்துரு. நானறிந்த சந்துரு அல்ல அது.

அதிகப் பாடல்கள் இல்லை. ஓரிரு பாடல்கள்தான் பாடுவார் சந்துரு. முதல்முறை கேட்கும்போதே கேட்கும் எவரையும் வசீகரித்துவிடக் கூடிய கீர்த்தனைகள் அவை. அவரைத் தொடர்ந்து நான் என்னுடைய ஆஸ்தானப் பாடலான முத்துத் தாண்டவரின் “ஆடிக் கொண்டார் அந்த வேடிக்கை காணக் கண் ஆயிரம் வேண்டாமோ”” ஆரம்பிப்பேன்.                         

சீரணி கொன்றை மலர்த்தொடையாட சிதம்பரத்தேர் ஆட என்னும் போதே உணர்ச்சிவசப்பட்டுக் குரல் லேசாகக் கமறி உடையும். பேரணி வேதியர் தில்லை மூவாயிரம் பேர்களும் பூசித்துக் கொண்டு நின்றாட வரும்போது கிட்டத்தட்ட குரல் நின்றுவிடும். சுதாரித்துப் பாடி முடிக்கும்போது மனம் நிறைந்திருக்கும். திருச்சிறம்பலம் என்று சொல்லி முடிக்கும்போது அர்ச்சகர் உள்ளே ஓடிப்போய் விபூதியும் மாலையும் எடுத்துவந்து கொடுப்பார்.

அது ஒரு காலம். அந்தணரான என் சந்துரு இப்போது ஓர் ஆப்பிரிக்கப் பெண்ணை மணந்து கொண்டு எத்தியோப்பியாவில் ஆசிரியராக வேலை செய்கிறார். காலம் எங்களை விசிறி வீசிவிட்டது. எத்தியோப்பியாவில் அவர் பாட்டைக் கேட்டு மயங்க ஈசன் எந்த வடிவில் இருக்கிறானோ? சந்துரு முறைப்படி சங்கீதம் கற்றவர்.

அவர் மூலமாக யாருமற்ற ஆலயங்களில் பாடும் பழக்கம் எனக்கு வந்தது. அந்தப் பழக்கம் திருப்பதியில் பெருமாளை அதிக நேரம் தரிசிக்கும் வாய்ப்பையும் எனக்குத் தந்திருக்கிறது. என்னோடு படித்த கலைச்செல்வன், துரை அருள்நேயத்துடன் ஒருமுறை திடீரெனத் திருப்பதி கிளம்பிச் சென்றேன். இரண்டு நாட்கள் தங்குவதாகத் திட்டம். முதல்நாள் பகலில் 3 மணி நேரம் காத்திருந்து பெருமாளைத் தரிசித்தோம்.

என்ன தோன்றியதோ தெரியவில்லை எனக்குப் பெருமாளைப் பார்த்ததும், பிரபந்தம் பாடத் தோன்றியது. பம்பாய் சகோதரிகள் லலிதா, சரோஜா பாடிய பிரபந்தங்கள் அடங்கிய கேசட் ஒன்று தமிழ் சுப்ரபாதத்துடன் T Series-சில் வெளியாகி இருந்தது. அதைக் கேட்டுக் கேட்டு மனப்பாடம் செய்திருந்தேன். காலையில் சுப்ரபாதமும் மாலையில் பிரபந்தமும் கேட்டுப் பழகி மனப்பாடமாகி இருந்தது.

அந்த நினைவில், “செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே.. நெடியோனே வேங்கடவா “ என்று பாடத் தொடங்கிவிட்டேன். ஜரிகண்டி ஜரிகண்டி என்று கையைப் பிடித்து இழுத்துத் தள்ளாத குறையாய் கூட்டத்தை அனுப்பிக் கொண்டிருந்த ஆலய ஊழியர் என் மற்ற நண்பர்களைத் தள்ளிவிட்டு என்னை மட்டும், கூட்ட வரிசைக்குப் பின்னால் உந்தித் தள்ளினார். கையால் பாடு என்று சைகை காட்டினார். நான், என் நேர் முன்னே நகரும் வரிசை, அதற்கு அப்பால் பெருமாள்..

அவ்வளவுதான்... எனக்குத் தெரிந்த பெருமாள் பாடல்கள் எல்லாம் சரக்குத் தீரும்வரை பாடினேன். அதில், திருமாலே சீராளும் மணிவண்ணா, கோபியர் கொஞ்சும் ரமணா உள்ளிட்ட திரையிசைப் பாடல்களும் அடக்கம். எனக்கே போதுமென்று தோன்றும்வரை திகட்டத் திகட்டப் பெருமாளைப் பார்த்துவிட்டு நானே வரிசையில் சேர்ந்து வெளியேறி வந்தால் கிட்டத்தட்ட கால்மணி நேரமாய் எனக்காகக் காத்திருந்த நண்பர்களின் முகத்தில் அனலடித்தது. ஏண்டா ஒனக்குப் பாடத் தெரியுங்கிறதைக் காட்றதுக்கு இதுதான் இடமா? என்று காதில் புகைவராத குறை..

அதுக்கு நான் என்ன சேறது? அன்று அப்படி அமைந்தது. அதெல்லாம் நினைவு வருகிறது கம்போடியப் பயணத்தை எழுதும்போது. சிதம்பரத்தில் 13 ஆண்டுகள் நாட்டியாஞ்சலி பார்த்ததும் ஒருவிதத்தில் எனக்கு நிறையப் பாடல்களை அறிமுகம் செய்தது. தேடித் தேடி தெரிந்து கொண்ட பருவம் அது. பாட்டைப் பொறுத்தவரை, எல்லாம் கேள்வி ஞானம்தான். முறைப்படியெல்லாம் கற்கவில்லை. இருந்தாலும் கேசட்டில் கேட்டதைத் திருப்பி அச்சுப் பிசகாமல் பாடிவிடுவேன். அது பரணிக்குத் தெரியும். அந்த நினைவில், கம்போடியத் தண்ணீர் லிங்கங்களைப் பார்த்ததும் என்னைப் பாடச் சொன்னதும் நான் பாடினேன்.

அதே ஆடிக் கொண்டார் கீர்த்தனைதான். மகாதேவன் நான் பாடுவதைப் படத்தோடு பதிவு செய்து கொண்டார். நான் பாடியதைக் கேட்டு உள்ளூர்க் குழந்தைகள் வித்தியாசமாகப் பார்த்தன. இவன் என்ன மொழியில் பாடுகிறான்? எங்கிருந்து வந்திருப்பான்? அவர்களிடம் நான் எப்படிச் சொல்வது, நான் தென்பாண்டி நாட்டான் என்று... அதனாலென்ன எந்நாட்டவர்க்கும் உரிய இறைவனைப் பாடிய பாடல் என்று அந்தக் குழந்தைகளின் ஆன்மா உணர்ந்திருக்கக் கூடும்.

இந்தியாவிலிருந்து பல்லாயிரம் கிலோமீட்டர் தொலைவிலுள்ள ஒரு காட்டுக்குள் வந்து இத்தனை லிங்கங்களைச் செதுக்கிய சிற்பிக்கு எங்களால் முடிந்த நன்றியை மனத்துக்குள் சொல்லிக் கொண்டோம். “எங்கே இருந்து இங்க வந்துருக்கு நம்ம சமயமும் பண்பாடும்” என்று ராஜூ சொல்லிச் சொல்லி மாய்ந்து போனார்.

உப்புக்கல்லுக்குப் பிரயோஜனமில்லாத கான்கிரீட் குவியலைக் காண்பித்த பாவத்துக்கு ஆயிரம் லிங்கங்கள் மூலம் கழுவாய் தேடிக்கொண்டார் ரா. அடுத்து உங்களை ஒரு பெரிய அருவியில் குளிக்கக் கூட்டிக் கொண்டு போகிறேன் என்றார் ரா. ராஜூ, நவீன் இருவரும் அகண்ட தஞ்சை மாவட்டத்துக்காரர்கள். பரணிக்குத் திருச்சி. சின்ன வயதில் அருவிகளை அதிகம் பார்த்திருக்க வாய்ப்பில்லாத அப்பாவி ஜீவன்கள்.

ஆனால் நான் அப்படியில்லையாக்கும். இராஜபாளையத்துக்காரன். என் வீட்டு மொட்டை மாடியிலிருந்து பார்த்தாலே ஏழெட்டு அருவிகள், மேற்குத் தொடர்ச்சி மலையில் இருந்து கொட்டுவது தெரியும். ஊரிலிருந்து பத்து கிலோமீட்டர் தொலைவில்தான் அய்யனார் கோயில் அருவி. முப்பழபூசை, காது குத்த, முடியிறக்க என்று அவ்வப்போது போய் அருவியில் ஆட்டம் போடும் கொடுப்பினை உள்ள ஆத்மா. போதாக் குறைக்கு, திருக்குற்றாலத்துக்கு எங்கள் ஊரைத் தாண்டித்தான் போயாக வேண்டும். ஆனால், நான் மூன்று முறைதான் திருக்குற்றாலம் போய் வந்திருக்கிறேன் என்பது வரலாற்றுச் சோகம்.. அதை விடுவோம்.

அருவி எனக்குத் தண்ணிபட்ட பாடு. ஆகவே, என்னத்த பெரிய அருவி, என்னத்த பெரிய தண்ணீர் என்று எகத்தாளமாக ரா-வுடன் வண்டியில் ஏறினேன். ஏறிக் கொஞ்ச தூரம் போனதும் இறங்குங்கள் என்றார். எல்லாத்தையும் இங்கேயே கழட்டி வைச்சுட்டுக் குளிக்கிற மாதிரி வாங்க அப்பு என்றார். வேனுக்கு வெளியே அம்புட்டையும் உருவிப் போட்டு உள்ளாடைக்கு மேல் துண்டை மட்டும் கட்டிக் கொண்டு அருவியை நோக்கி நடக்கத் தொடங்கினோம்.

பரணி சரியான நாட்டுக் கட்டை. கடகடவெனக் காட்டுப் பகுதியை நோக்கி நடக்கத் தொடங்கிவிட்டார். எனக்குக் காலில் செருப்பு இல்லாமல் நடக்க முடியவில்லை. அருகிலுள்ள கடைக்குப் போய் சாண்டல்ஸ் இரண்டு இரவல் வாங்கிப் போட்டுக் கொண்டேன். வெறும் துண்டுடன் அங்கிருந்த பெண்களைப் பார்த்துச் செருப்புக் கேட்கக் கூச்சமாகத்தான் இருந்தது. ஆனாலும் கால் நோகுதே ?

அவர்களும் எதையோ தின்றுகொண்டே முகத்தை மூடிச் சிரித்துக் கொண்டே செருப்பைக் கொடுத்துப் போ போ என்றார்கள். எதிரே கூட்டம் கூட்டமாய்க் குளித்துவிட்டு வந்து கொண்டிருந்தார்கள். ஒரு பெரிய குதூகலத்தில் ஈடுபட்டால் மட்டுமே வரக்கூடிய மனக்கிளர்ச்சி எல்லார் முகத்திலும் தெரிவதைக் கவனித்தேன். அருவிக் குளியல் அனைவருக்கும் பிடித்தமானதுதான்.                                                   

ஆனாலும் எதிரே வந்தவர்களின் முகங்களில் அதையும் தாண்டி ஓர் ஆனந்தம். இடுப்பில் உட்கார்ந்திருந்த அம்மணமான கைக்குழந்தைகள் கூட எம்பி எம்பிக் குதித்துக் கொண்டிருந்தன. பெண்கள் ஈரக்கூந்தலை விரித்துப் போட்டபடி சத்தமாகச் சிரித்துப் பேசிக் கொண்டு வந்தனர். கொஞ்ச தூரம் நடக்கத் தொடங்கியதும் அருவியின் ஓசை கேட்கத் தொடங்கியது. உயரமான ஓரிடத்திலிருந்து மரங்களின் வேர்களைப் பிடித்தவாறு பாதாளத்தில் இறங்க வேண்டியிருந்தது. படியெல்லாம் இல்லை.

பரணி வெகு லாகவமாக இறங்கினார். ராஜூ யோகா பயிற்சி செய்யும் பார்ட்டி. சொல்லவே வேண்டாம். வில்லில் இருந்து விடுபட்ட அம்புபோல் எப்போதும் ஒரு விரைவு இருக்கும் அவரிடம். நவீன் ஒப்புநோக்க எங்களை விட இளையவர். நானும் மகாதேவனும் கொஞ்சம் தடுமாறிக் கீழே இறங்கினோம். அருவியில் குளித்தவர்கள் நடந்து நடந்து பாதை ஈரமாகிச் சொத சொதவென்றிருந்தது. பிடிமானமில்லாத செருப்பு வழுக்கத் தொடங்கியது.

ஒருவரையொருவர் பற்றிக் கொண்டு அருவியை நோக்கி நடந்தோம். ஒரு கட்டத்தில் திரைவிலகியதுபோல் திடீரென எங்கள் முன் தொலைவில் அருவி தோன்றியது. கடவுளே !!!.....

- பொன். மகாலிங்கம்

 

சிங்கப்பூர் தொலைக்காட்சியில் பணியாற்றும் மூத்த இதழியலாளர். சென்னையின் முன்னணி ஊடகத்தில் முக்கியப் பொறுப்பில் இருந்தவர். சகமனிதர்கள் மீது அளவற்ற அன்பும், பாசமும் கொண்ட பண்பாளர். தமிழ் மீதும், பயணங்களின் மீதும் உள்ள அலாதியான ஆர்வம் காரணமாக அடிக்கடி எங்காவது புராதன இடங்களை தேடிச் சென்று அவற்றை தமது அழகு தமிழால் கட்டுரைகளாக்கி, வரும் தலைமுறைக்கு தகவல் பொக்கிஷங்களை சேர்ப்பதில் நாட்டம் கொண்டவர். அவரை தொடர்புகொள்ள - ponmaha2000@yahoo.com



Leave a Comment